தலைவரவர்களே! தோழர்களே!
எங்களுடைய ஒரு சிறு சாதாரண பத்திரிகை விளம்பர அழைப்பை மதித்து, இன்று இங்கு இந்த வெயில் காலத்தில் சென்னை முதல் திருநெல்வேலி ஈறாக வெகு தூரத்தில் இருந்து இவ்வளவு பேர்கள் அதாவது 300, 400 பேர்கள் விஜயம் செய்திருப்பதற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இது எங்களுக்கு மிகவும் பெருமையும், நம்பிக்கையும் கொடுக்கக்கூடிய காரியமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்தக் கூட்டம் பார்ப்பனரல்லாதார் அதாவது தென்னிந்திய நலவுரிமைச் சங்க (ஜஸ்டிஸ்) இயக்கத்தின் சம்பந்தமாய் அழைப்பு அனுப்பி, அவ்வியக்கத்தின் நன்மைக்கு ஏற்ற காரியங்களைச் செய்யவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதை அறிக்கையில் இருந்து நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும்.
எந்த இயக்கம் தான் ஆகட்டும், இயக்கத்தின் பேரால் சிலர் பணமும், பதவியும், பட்டமும், சம்பாதித்துக் கொண்டு இருப்பதை மாத்திரம் பலர் பார்த்துக் கொண்டு இருக்கவும், ஒரு கூட்டத்தார் பொறாமைப்பட்டு விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கவும் அதற்கு எவ்வித சமாதானமும் சொல்லி பாமர மக்களை திருப்திப் படுத்தாமலும், இயக்கத்தால் ஏற்பட்ட உண்மையான நன்மைகளை எடுத்துக் காட்டாமலும் இருந்தால் அப்படிப்பட்ட இயக்கம் எவ்வளவு நல்ல காரியம் செய்திருந்த போதிலும், நாட்டில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆனால், அவ்வியக்கத்திற்குச் சம்பந்தப் பட்டவர்கள் அதாவது அவ்வியக்கத்தின் பேரால் பட்டம் பதவி பெற்று, ஆயிரக்கணக்கான சம்பளங்களும், லட்சக்கணக்கான பணங்களும், பட்டங்களும் அனுபவித்தவர்களும், அனுபவிப் பவர்களும், அதனாலேயே பிழைப்பவர்களும், பெரு வாழ்வு வாழ்பவர்களும் ஆன பெருமான்கள் யாராவது இன்று இங்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தால் இந்த 400 பேர்களில் ஒரு 4, 5 பேர்களாவது வந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஆகவே, அக்கூட்டத்தார்களுக்கு பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தினால் வரும் லாபத்தை அடைவதைத் தவிர மற்றபடி அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கோ, அல்லது அது பொதுஜனங்களுக்கு பயன்படும்படிக்கு உழைப்பதற்கோ, அல்லது ஏதாவது உதவி செய்வதற்கோ எவ்வளவு கவலை இருக்கிறது என்பதை இதனால் நாம் உணர்ந்து கொண்டோம். பார்ப்பனரல்லாதார் இயக்கமானது இன்று பாமர ஜனங்களால் சரியாய் மதிக்கப்படாமல் இருப்பதற்கும், பல காரியங்களில் தோல்வியேற்படுவதற்கும் காரணம் என்ன என்பதும், அதற்குப் பொறுப்பாளிகள் யார் என்பதும் ஒருவாறு இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்குகின்றதல்லவா?
உண்மையாகவே, 1930ஆம் வருஷம் முதல் அதாவது இப்போதைய மந்திரிசபை ஏற்பட்ட காலம் முதல் இயக்கத்துக்காக பாமர மக்களிடம் பிரச்சாரமே கிடையாது என்பதுடன், சரியான பத்திரிகையும் கிடையாது என்றும் சொல்லுவேன். ஆனால், அது மக்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறது. என்பதை நான் மறைக்கவில்லை. அதற்காக நன்றியும் செலுத்துகிறேன்.
எந்த இயக்கம் தான் ஆகட்டும், இயக்கத்தின் பேரால் சிலர் பணமும், பதவியும், பட்டமும், சம்பாதித்துக் கொண்டு இருப்பதை மாத்திரம் பலர் பார்த்துக் கொண்டு இருக்கவும், ஒரு கூட்டத்தார் பொறாமைப்பட்டு விஷமப் பிரசாரம் செய்து கொண்டு இருக்கவும், அதற்கு எவ்வித சமாதானமும் சொல்லி பாமர மக்களை திருப்திப்படுத்தாமலும், இயக்கத்தால் ஏற்பட்ட உண்மையான நன்மைகளை எடுத்துக் காட்டாமலும் இருந்தால் அப்படிப்பட்ட இயக்கம் எவ்வளவு நல்ல காரியம் செய்திருந்த போதிலும், நாட்டில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பொய்யான விவகாரமானாலும், எதிர் வியாஜ்யம் ஆடாவிட்டால் ஒரு தலைப் பட்சயமாய் எக்ஸ்பார்ட்டியாய் தானே தீர்மானமாகும். அது போலவே, பிரசாரம் செய்யாத காரணமாகவே, நமது இயக்கம் பொதுஜனங்களால் சரியானபடி மதிக்கப்படாமல் இருக்கிறது என்பதை உணர்ந்தே 2 வருஷ காலமாய் நாம் பிரசாரம், பிரசாரம் என்று தலையில் அடித்துக் கொண்டோம். அதைப் பதவியிலிருப்பவர்களும், பயனை அனுபவிப்பவர்களும், சிறிதும் லட்சியம் செய்தவர்களல்ல. இயக்கம் தங்களுடைய சொந்த சொத்தென்றும், மற்றவர்களுக்கு அதில் உரிமை இல்லை என்றும் கருதிக்கொண்டு நம்மை யெல்லாம் ஒரு தீண்டாதவர்கள் போலவே கருதி நடத்தினார்கள்.
இந்த இயக்கம் மந்திரிகளுக்கும், பதவி வேட்டைக்காரருக்கும் மாத்திரமே சொந்தமென்றும், அவர்களுக்காக மாத்திரமே இந்த இயக்கம் இருக்கிறது என்றும் நாங்கள் கருதி இருந்தால் இந்த இயக்கத்தை 10 வருஷத்திற்கு முன்பே சாகவிட்டு இருப்போம். இந்த இயக்கம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஏழை, தீண்டாத மக்களுக்கும் விடுதலை அளிக்கவே இருக்கிறது என்று நாங்கள் உண்மை யாகவே கருதுகிறபடியால் பதவியாளர்களது கொடுமையையும், துரோகத்தையும், சூழ்ச்சியையும், அலட்சியத்தையும், அவமதிப்பையும் லட்சியம் செய்யாமல் இயக்கத் துக்காக உழைக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
இயக்கப் பதவியாளர்கள் மற்றவர்களை பக்கத்தில் அணுகவிடாமலும், கீழே இறங்கி வந்து பாமர மக்களிடம் பிரசாரம் செய்யாமலும், சரியான பத்திரிகைகள் நடத்தாமலும் இருப்பதன் காரணம் இயக்கம், பதவி, செல்வாக்குப் பெற்று விட்டால் வேறு யாராவது பங்குக்கு வந்துவிடுவார்களே என்கின்ற பயம் என்றுதான் நான் கருதுகிறேன்.
எப்படியிருந்தபோதிலும், நமக்கு உள்ள பொறுப்புக்களை மனதார அலட்சியம் செய்து, எதிரிகளுக்கு இடம் கொடுக்க நம் மனது சம்மதிக்காததாலேயே நாமெல்லோரும் இன்று இங்கு கூடியிருக்கிறோம். இந்த 400 பேர்களிலும் தனியாக ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லக் கூடியவர்கள் 10 பேர் இருக்கலாம். (இந்தச் சமயத்தில் ஒருவர் 2, அல்லது 3 பேர் தான் என்றார்.)
அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாரோ அவரும் நாங்களும் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இதிலிருந்து ஜஸ்டிஸ் கட்சியார் இக்கூட்டத்திற்கு வராவிட்டாலும், சுயமரியாதைக்காரர்கள் எல்லோரும் (இரண்டொருவர் தவிர) பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பற்றும் கவலையும் உள்ளவர்கள் என்பது நன்றாய் விளங்குகின்றது.
சரியானபடி பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யாததாலும், இயக்கத்துக்கு உழைத்துவரும் தொண்டர்களுக்கு சரியான வேலை கொடுக்க முடியாததாலும் அனாவசியமான அபிப்பிராய பேதங்களும், உள் கலகங்களும் நடக்க இடமேற்படுகிறதே ஒழிய, மற்றபடி பார்ப்பன ரல்லாதார் இயக்கத்துக்கு உழைக்க வேண்டியது சுயமரியாதைக்காரர்களுடைய வேலை அல்ல என்று யாரும் சொல்ல முடியாது.
நம் எதிரிகள் இப்போது நம்மைப் பற்றி அதிகமாகப் பழி கூறி மிக வேகமாக விஷமப்பிரசாரம் செய்யக் காரணம் சமீபத்தில் அதாவது ஒரு வருஷத்துக்குள் வரப்போகும் தேர்தல்களை உத்தேசித்தேயாகும், அதற்குள் நாம் கட்டுப்பாடாக எதிரிகள் விஷமங்களுக்கும், பொய்க்கும், பழிக்கும் சமாதானம் சொல்லாத பட்சம் தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார்கள் தோல்வி அடைந்து விடுவார்கள் என்பது உறுதியான காரியமாகும்.
ஆகையால், எது எப்படி இருந்தபோதிலும், யார் அலட்சியமாய் இருந்த போதிலும் நாம் ஒரு கட்டுப்பாடான, தொடர்ச்சியான பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஆகவே இன்று இங்கு கூடி இருக்கிறோம். இன்று செய்யும் ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் மதித்து அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.
பத்திரிகை வேண்டும், பணம் வேண்டும், தொடர்ந்து வேலை செய்ய தொண்டர்கள் வேண்டும். இவைகளுக்கு வேண்டிய மார்க்கம் செய்வதே இன்றைய வேலையாகும்.
ஆதலால், தயவுசெய்து நீங்கள் எல்லோரும் இதற்கு தக்க வழி செய்ய உதவ வேண்டும் என்றும், அனாவசியமான அபிப்பிராய பேதங்களை மறந்து ஒத்து உழைக்க வேண்டும் என்றும் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தவிர, எங்களுடைய அறிக்கையில் இந்த பிரச்சாரத்தை நடத்துகிற ஸ்தாபனத்தில் அங்கம் பெறுகிறவர் எவ்வித உத்தியோகமும், பதவியும் உள்ளவர்களாகவும், ஆசைப் படுபவர்களாகவும் இருக்கக்கூடாது என்று எழுதியிருந்தோம்.
பல முக்கியமானவர்களும், உண்மையானவர் களுமான தோழர்கள் அந்த அபிப் பிராயம் காரியத்துக்கு கெடுதியானதென்றும், அது அனுபவ சாத்தியமானதல்லவென்றும், அதனால் எதிரிகளுக்கு இடம் கொடுத்ததாக ஆகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கம் சட்டமறுப்பாலோ, பகிஷ்காரத்தாலோ காரியம் செய்வதல்ல வென்றும் சொல்வதால், நாங்கள் அதை ஒப்புக் கொண்டு எங்கள் அபிப்பிராயத்தை வலியுறுத் தாமல் விட்டு விடுகின்றோம். மற்றவர்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மனம் விட்டு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(05-04-1936ந் தேதி திருச்சியில் நடைபெற்ற பாண்டியன் – ராமசாமி அறிக்கைக் கூட்டத் தொடக்கத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் பேசியது.)
குடிஅரசு – சொற்பொழிவு – 10.05.1936