‘‘கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒதுக்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு உடனே ஒதுக்க வேண்டும்’’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின் படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியை அளிக்க வேண்டும். இதில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஒன்றிய, மாநில அரசுகள் செலுத்தி விடும். ஒன்றிய அரசு 60 சதவீத தொகையையும், மாநில அரசு 40 சதவீத தொகையையும் அளிக்கும்.
இது தொடர்பாக ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகி கோவை வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு 17.6.2025 அன்று தீர்ப்பளித்தது. அதில், ‘‘கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். சமக்ர சிக்ஷா திட்டம் என்பது தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதைப் போன்றது என்பது உண்மை. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் ஒன்றிய -மாநில அரசுகளுக்கு உள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு குறி்ப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை. மாநில அரசு ஏற்ெகனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், அது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 2024-2025ஆம் நிதியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,151 கோடி ஆகும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி ரூ.200 கோடிக்கும் குறைவானது என்பதால், இந்த நிதியில் ஒன்றிய அரசின் பங்கை ஒதுக்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.அதனால் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ர சிக்ஷா திட்ட நிதியிலிருந்து விலக்குவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப்படி உரிய நிதியை தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டும். சட்டத்தில் கூறியுள்ளபடி, உரிய காலக் கட்ட கட்டத்தில் இந்தத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.’’
இந்தத் திட்டத்திற்கான நிதியைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 60 விழுக்காடாகும். மாநில அரசின் பங்களிப்பு 40 விழுக்காடாகும்.
ஒன்றிய அரசைப் பொறுத்த வரையில் இதில் இடக்கு – முடக்காகவே நடந்து வருகிறது.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன கூறுகிறார்?
‘‘ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்காத மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் நிதி வழங்கப்பட மாட்டாது’’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஆனால், இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றம் என்ன கூறுகிறது?
‘‘கல்வி உரிமைச் சட்டத்தின்படி (தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர்கள் ஒதுக்கீடு) ஒன்றிய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை – அதாவது 60 விழுக்காடு நிதியை மாநில அர
சுக்கு வழங்கிட வேண்டும், இதை ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைப் பிரச்சினையோடு இணைக்கக் கூடாது’’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
இருந்தாலும் ஒன்றிய அரசு நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தவில்லை;
ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்குச் சட்டப்படி அளிக்க வேண்டிய ரூ.2291.30 கோடி கல்வி நிதியை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய பிஜேபி அரசின் இந்தப் போக்கு எதேச்சதிகாரமானதும், மாநில உரிமைகளை நசுக்கக் கூடியதுமாகும்.