திருச்சி, ஆக.13- போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர் களுக்கு பதிலாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தாயுமானவர் திட்டம் தொடக்கம்
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை தண்டையார் பேட்டையில் நேற்று (12.8.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, பொருட்கள் வழங்குவதற்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது தொடங்கி வைக்கப் பட்டுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக, திருச்சி மாவட்டத்தில் 1,128 வாகனங்கள் மூலம் சுமார் 88 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர துறை அமைச்சர் என்கிற வகையில் நான் நான்கு முறை நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லை. போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்களை நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை.
தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விடக்கூடாது. அவற்றை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது. இந்த உத்தரவு நமக்கு வந்து சேர்ந்ததும் தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த நாங்கள் தயார் நிலையில்தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.