தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்!
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்வது இயல்பான ஒன்றுதான்.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் களத்தில் நிற்கக் கூடிய கட்சியாகும்.
ஒரு முதலமைச்சர் மக்களை நேரிடையாகச் சந்தித்தார் – சந்திக்கிறார் – சந்திப்பார் என்ற மதிப்பீட்டில் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்தான் முதலிடத்தில் நிற்பார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட தமிழ்நாட்டின் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்த – மக்களோடு மக்களாக எளிமையான முறையில், இயல்பான வகையில் சந்திக்கும் ஜனநாயகவாதியாக அவர் ஒளிவீசி நிற்கிறார்.
அவர் சென்னைப் பெரு நகர மேயராக இருந்தபோதேகூட கடும் மழை வெள்ளக் காட்டிலேயே இடுப்பு வரை தண்ணீர் நிரம்பி இருந்த நிலையிலும் – நீந்தாத குறையாக மக்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர் என்ற உண்மை மாசில்லாத கண் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!
இப்பொழுது முதலமைச்சராக உள்ள நிலையிலும், எந்தவித செயற்கைத் தன்மையும் படாடோபங்களுமின்றி மக்கள் நாயகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் தன்னெழுச்சியாக மக்கள் கூடி ஆரவாரிக்கும் காட்சியைக் கண்முன் பார்க்க முடிகிறது.
ஆண் – பெண் வேறுபாடின்றி, வயது வித்தியாசமின்றி முதலமைச்சரிடம் மக்கள் கை கொடுப்பதும் கரஒலி எழுப்புவதும் – மக்கள் மத்தியில் அவர்மீதான மதிப்பின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
இதற்கு முக்கிய காரணம் – அவர் தலைமையில் நடந்துவரும் திராவிட மாடல் அரசின் பலன் ஒவ்வொருவர் வீட்டிலும் சென்றடைந்திருக்கிறது.
மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அலை அலையான பயன்களைப் பெற்று வருகிறார்கள்.
இலவசப் பேருந்து (பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பயன்).
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் ஆயிரம்.
பெண்களுக்குச் சுய உதவிக் குழு கடன் வரம்பு ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
‘பிங்க்’ ஆட்டோ திட்டம், பெண்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடு தொழில் முனைேவார் பெண்களுக்கு ஆட்டோ வாகன உதவி.
புதுமைப் பெண்கள் பெயரில் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் – (ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மாணவிகள் உதவிப் பெறுகின்றனர்.) இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் படித்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமைக்குரிய நிலை (50 விழுக்காடு).
திருமண உதவித் திட்டம் என்று இருந்ததை மாற்றி கல்விக்கான உதவி என்று ஆக்கியது – தந்தை பெரியார் பார்வையில் பாராட்டுக்குரியது.
பெண் தொழில் முனைேவார்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானிய உதவி, பெண்களுக்கான தோழிகள் விடுதி – என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் 50 விழுக்காடுள்ள பெண்களின் வாக்கு தி.மு.க. பக்கமே தான் என்று இன்றே எழுதி வைக்கப்பட்ட ஒன்றாகும்.
பட்டியலின மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி – அவர்கள் பால் திராவிட நல ஆட்சியின் பார்வையும், பரிந்துணர்வும், கொள்கை ரீதியான பார்வையும் தி.மு.க.வின் வெற்றிக்குக் கட்டியம் கூறும்.
சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! திராவிட இயக்கத்தின்பால் எப்பொழுதுமே கரிசனமும் பற்றும் கொண்டவர்கள். அதுவும் பிஜேபி அதிகாரத்திற்கு வந்தபின் அவர்கள் படும் இன்னல்களும், உரிமை இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த நிலையில் பிஜேபி எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதோ அதன் எதிர் அணிக்குத்தான் சிறுபான்மையின மக்களின் உறுதியான வாக்குகள்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளோ, பிசிறு இல்லாமல் கொள்கை ரீதியாகக் கையிணைத்து நிற்கின்றன.
இந்த மிகப் பெரும் ஆதரவுக் கரங்களை உயர்த்துவதை நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மக்களைச் சந்திக்கும் பயணத்தில் பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க., அதிமுக – இரு கட்சிகளின் ஆட்சிக்குத்தான் இடம் – அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எண்ணக்கிடக்கை யாகவும் இருந்து வருகிறது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அக்கட்சி பிளவுபட்டு, தெருச் சண்டை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் வைத்திருந்த மதிப்பைப் பெரிதும் இழந்து பரிதாப நிலையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மேனாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான திரு. எடப்பாடி பழனிசாமியும் மக்களைச் சந்திக்கப் புறப்பட்டுள்ளார். மக்களின் எழுச்சியைப் பார்க்க முடியவில்லை; பெருங் கூட்டத்தைக் கூட்டுவது என்பது வேறு – அவர்கள் உண்மையான அதிமுக ஆதரவாளர்களா என்று கேட்கும் நிலைதான்; அந்தக் கூட்டத்தினைத் தொலைக்காட்சியைப் பார்த்தவர்களுக்குப் பட்டவர்த்தமாகவே இது தெரிகிறது.
அதுவும் கடைசிவரை பிஜேபியோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ‘சத்தியம்’ செய்து வந்த திரு. எடப்பாடி பழனிசாமி என்ன நிர்பந்தத்தாலோ திடீர் பல்டி அடித்து, பிஜேபியுடன் கூட்டணி வைத்து கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையையும் இழந்து, கட்சிக்கு வீழ்ச்சிக் குழியைத் தானே முன்னின்று தோண்டி விட்டார்.
தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி என்ற அவல நிலைக்குக் கட்சி தள்ளப்பட்டு விட்டது. அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொல்லும் தரம் தலைக்குப்புறக் கவிழ்ந்து விட்டது.
கூட்டணி என்று சொல்லும் அளவுக்குத் தமிழ்நாட்டு மக்களின் அபிமானம் பெற்ற எந்தக் கட்சியும் அதிமுகவுக்கு இல்லை என்பதோடு நின்றாலும் பரவாயில்லை; எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்ந்தால் மக்களின் பெரு வெறுப்புக்கு ஆளாக நேரிடுமோ, அந்தப் பிஜேபியோடு கூட்டணி சேர்ந்த அவலத்தை என்ன சொல்லுவது! மடியில் பாராங்கல்லைக் கட்டிக் கொண்டு பாழும் ஆற்றில் விழுந்த கதையாகி விட்டது.
இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய யதார்த்த நிலை! தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களுக்கு முன் கூட்டியே பாராட்டுகள் – தி.மு.க. கூட்டணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!