கணியூர், ஆக. 13- தாராபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கணியூர் ஒம்முருகா திருமண மண்டபத்தில் 9.8.2025 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும், பெரியார் உலகம் நிதி திரட்டுதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குதல், செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம், இளை ஞரணி சார்பில் துண்டறிக்க விநியோகம், பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் – மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது, ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து கூட்டத்திற்குத் தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், மாவட்ட காப்பாளர் புள்ளியான், பொதுக்குழு உறுப்பினர்கள் மயில்சாமி, வழக்குரைஞர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்
மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் செல்வராசு, மடத்துக் குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட ப.க செயலாளர் முருகேசன், மாவட்ட ப.க.தலைவர் வெங்கடாசலம், தாராபுரம் நகர செயலாளர் சித்திக், கணியூர் அர்ச்சுனன், காரத்தொழுவு நாகராசன், உடுமலை நகர செயலாளர் முருகேசன், கணியூர் பெரியசாமி, கணியூர் ராமசாமி, அரியநாச்சி பாளையம் நகரச் செயலாளர் ஆறுமுகம், உடுமலை நகர ப.க தலைவர் காந்தி, எஸ் ஆர் பட்டினம் சதீஷ் ,அலங்கியம் உமா ஆகியோர் கருத்துரை ஆற்றினார்
பெரியார் உலகம் நன்கொடை
திராவிடர் கழக மாவட்ட தலைவர் கணியூர் க.கிருஷ்ணன் பெரியார் உலகம் நன்கொடை ரூ 10,000 வழங்கினார் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் நா.செல்வராசு 500 வழங்கினார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப் பித்தும், புதிய சந்தாக்களை சேர்க் கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்” என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை (செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துத் திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6,7 கோபிசெட்டி பாளையத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 16 தாராபுரத்தி லும், ஆகஸ்ட் 23 உடுமலைப் பேட்டையிலும் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டத்தை மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உடுமலைப்பேட்டையில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்க்கு சிலை அமைத்த திமுக நகரச் செயலாளர் சி.வேலுச் சாமி, நகர் மன்ற தலைவர் எம்.மத்தீன் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தாராபுரம் மாவட்ட கழக திராவிடர் கழகம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய பொறுப்பாளர்
தாராபுரம் ஒன்றிய கழகத் தலைவராக அலங்கியம் நா.நாச்சி முத்து நியமிக்கப்பட்டார்.