பதிலடிப் பக்கம்

Viduthalai
6 Min Read

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

சோழர்களின் “செங்கோல்” இதுதான்!

– மின்சாரம்

அரசியல்

நாடாளுமன்ற புதிய கட்டடம் தொடக்க விழாவின் போது தமிழ்நாட்டிலிருந்து ஆதீன கர்த்தர்கள் குறிப் பாக திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் தலைமையில் “செங்கோல்” என்று சொல்லப்படும் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தனர். அது மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படும் என்று ஒன்றிய அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

அது ஒருபுறம் இருக்கட்டும். இதில் சோழ அரசர் களின் பராக்கிரமம் – மரபு பற்றி எல்லாம் கொண்டு வந்து திணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை என்று எல்லாத் தரப்பாரும் பேசித் திரிகிறார்கள்.

சோழர் மரபில் வந்ததாக ஆதீன கர்த்தர்கள் ‘அடேயப்பா’ ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால் சோழ அரசர் களைப் போன்ற பார்ப்பன அடிமைகளை வரலாற்றில் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுவைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடியவர்கள் தான் இந்த சோழ மன்னர்கள்.

இந்த சோழ அரசர்களின் பட்டப் பெயரைப் பார்த் தாலே இவர்களின் ஆரிய அடிமைப் புத்தி ஆகாயம் வரை எட்டும்.

* நான்மறை தெரிந்த அந்தணரை ஆதரித்தவன் – முதலாம் இராஜராஜ சோழன்.

* மனுவாறு பெருக என்ற பெருமைக்குரியவன் – முதலாம் குலோத்துங்க சோழன்.

* மனுவுடன் வளர்ந்த கோபர கேசரி – என்று குறிக்கப்பட்டான் அதிவீர ராஜேந்திர சோழன்.

* மனு நெறி நின்று அஸ்வமேத யாகஞ் செய்தவன் – என்று குறிப்பிடப்பட்டவன் முதலாம் இராஜாதி ராஜன்.

* மனு நெறி விளக்கியவன் – என்ற பெயருக்கு உரியவனானான் வீர ராஜேந்திர சோழன்.

* மன்னுயிர் தழைக்க மனுவாறு விளங்க – என்று குறிக்கப்பட்டான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.

* மனுநெறி வாழ ஆளுகைச் செய்தவன் – மூன்றாம் ராஜராஜ சோழன்.

* மனுநீதி வளர்த்து நின்றவன் – விக்கிரம சோழன்.

* நான்மறை செயல்வாய்ப்ப மனுநெறி தழைத் தோங்க ஆட்சி செய்தவன் – மூன்றாம் குலோத்துங்கன்.

இவ்வாறாக கல்வெட்டுகள், செப்பேடுகளில் தங்களைக் குறிக்கும் பொழுது ஒவ்வொரு அரசனும் தங்களை மனுநீதியோடு இணைத்துக் கொண்டும், வேத நூல்களோடும், தாங்கள் செய்த யாகங்களோடும் தொடர்புபடுத்தியும் தங்கள் பெயரைக் குறிப்பிடு கின்றனர்.

சோழ அரசர்கள் அன்றைய காலத்தில் மனுதர்மத்தையும், வேதத்தையும், அஸ்வமேத யாகத்தையும் எவ்வாறு மதித்திருந்தனர் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் போதாதா?

(“தமிழகத்தில் வேதக்கல்வி வரலாறு”, 

சி.இளங்கோ, பக். 97,98)

மூன்று வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு திரிவேதி மங்கலம் என்றும், நான்கு வேதம் படித்த பார்ப்பனர் களுக்கு சதுர்வேதி மங்கலம் என்றும், இறையிலி கிராமங்களைத் தாரை வார்த்த தாண்டவராயர்கள் தான் இந்த சோழ அரசர்கள்.

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் அருண்மொழி தேவன் என்று இருந்த தமிழ்ப்பெயரை ராஜராஜ சோழன் என்று சமஸ்கிருதத்தில் மாற்றிக் கொண்டது தான்..

சோழர் காலத்திலேயே பத்தாம் நூற்றாண்டிலேயே தேர்தல் முறை வந்துவிட்டது என்று குதிக்கிறார்களே – அந்தத் தேர்தல் முறை எத்தகையது – தேர்ந்தெடுக் கப்படத் தகுதியானவர்கள் யார்? என்பது குறித்து வரலாற்றாய்வாளர் ஆர்.சத்தியநாதய்யர் “இந்திய வரலாறு” (A Political and Cultural History of India) என்ற நூலில் குறிப்பிடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

சோழ வேந்தர்கள் பத்தாம் நூற்றாண்டிலேயே தேர்தல் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையாகப் பேசுகிறோம்.

தேர்ந்தெடுக்கத் தகுதி என்ன? 35 வயது நிரம்பி இருக்க வேண்டும். 70 வயதுக்குள் இருக்க வேண்டும். கால் வேலிக்குக் குறையாத நிலம் இருக்க வேண்டும். வேத மந்திரங்களையும் உப நிஷத்துகளையும் தெரிந் திருக்க வேண்டும். அல்லது ஒரு வேதமும், ஒரு வேத பாஷ்யமும் தெரிந்திருக்க வேண்டும்.

இதை சொல்பவர் வரலாற்றாய்வாளர் ஆர்.சத்திய நாராயணன்.

இதுதான் கிராம சபை உறுப்பினராவதற்கான தகுதி. 

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந் திருக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருந்தார் களே – அந்தச் சூழ்ச்சியின் ஆரம்ப காலம் 10ஆம் நூற்றாண்டிலேயே சோழர்கள் சாம்ராஜ்யத்திலேயே கால்கோள் கண்டுவிட்டது.

பார்ப்பனர்கள் கல்வியில் செழுமை பெற்றதற்கும், தமிழர்கள் தற்குறிகளாக ஆனதற்கும் அடிக்கோலிட்ட வர்களும் சோழ அரசர்களே!

“பதினோராம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணா யிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், மாணவர்களுக்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், ஆரியருடைய மீமாம்ச வேதாந்த தத்துவங்களும் அங்கு சொல்லித் தரப்பட்டன.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்திலும், சோழ அரசர்கள் ஒரு கல்லூரியை ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது. 260 மாணவர் களும் 12 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர்.

இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும் அங்குக் கற்பிக்கப்பட்டன. பன்னிரெண்டாம் நூற்றாண்டுச் சோழ அரசர்கள் திருவாவடுதுறையில் ஒரு கலை மன்றம் கண்டனர். அங்கு சமஸ்கிருதத்தில் உள்ள சாரகசமிதை, அஷ்டாங்க இருதயசமிதை ஆகிய இரண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

(உத்தரமேரூர் கல்வெட்டு, பராந்தக சோழன் தீட்டியது).

சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்காக மட்டுமே கல்லூரி கண்டனர். சமஸ்கிருத பாடங்கள் மட்டுமே அங்கு இடம் பெற்றன என்றால் இதன் பொருள் என்ன?

இந்த சோழ மன்னர்கள் தான் தமிழர்களுக்கு வாய்த்த பெருமையின் சின்னங்களா? கடாரம் வென் றான் – சாம்ராஜ்ஜியத்தை நிறுவினான் என்பதுதான் பெருமையா? வாள் எடுத்துப் போர் புரிந்தவன் பூணூல்களுக்கு மண்டியிட்டது மானக் கேடல்லவா?

இதோ இன்னொரு தகவல்:

சோழர்களும் அடிமைகளும்

“சோழர் காலப் பெருமிதங்களையும் நாம் மறுபரி சீலனைக்கு உட்படுத்த வேண்டும். வரி கட்ட முடியாமல் சோழர் காலத்தில் கிராமங்களைவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போன மக்களைப் பற்றிய கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

வரி கட்ட முடியாத ஏழை மக்களையும் விட்டு வைக்காமல் அவர்கள் குடிசையுள் புகுந்து ‘வெண்கலம் எடுத்து மண்கலம் உடைத்து’ வரி வசூல் செய்த சோழர் காலத்துக் கொடுமைகளையும் கணக்கில் கொள்ளத் தான் வேண்டும். மேலும் சொல்வதானால், மனிதர்களை வாங்கி விற்கும் அடிமை முறையும் பிற்காலச் சோழர் காலத்தில் இருந்ததாகத் ‘தமிழகத்தில் அடிமை முறை’ என்கிற தன் ஆய்வு நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் நிறுவியுள்ளார்.

ஒரு சோற்றுப்பதமாக இங்கே சோழர் காலம் பற்றியும் குமரிக் கண்டம் பற்றியும் மட்டும் குறிப்பிட்டுள் ளேன். ராஜராஜ சோழனை உரிமை கொண்டாட 23 ஜாதி அமைப்புகள் களத்தில் நின்றதைக் கவனத்தில் கொண்டு, நாம் பழம் பெருமை பேசுவதிலும் ஒரு பகுத்தறிவுப் பாதையைத் தேர்வு செய்து கொள்ள வலியுறுத்த வேண்டும்!”

– இந்து தமிழ் திசை, 29.5.2023, பக். 6 

கட்டுரை: வீ.எம்.சுப.குணராஜன்

செங்கோல் மன்னர்களா இவர்கள்? இந்த ‘செங் கோலை’த் தூக்கிக் கொண்டு மட ஆதீன கர்த்தர்கள் டில்லிக்குக் காவடி எடுத்தார்களாம்.

ஒரு வகையில் சரிதான். இப்பொழுது இந்திய ஒன்றியத்தை ஆளுவது பார்ப்பனீயம் தானே!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவோரின் ஆட்சிப் பீடத்தில் இந்த ஹிந்து மனுதர்ம சோழ அரசர்களின் செங்கோல் நாடாளுமன்றத்துக்குள் இடம் பிடிப்பது பொருத்தம் தானே!

புரிகிறதா- பூணூல் மகாத்மியம்?

போதும் பேதாததற்குப் புதிய நாடாளுமன்றம் கட்டடம் முழுவதும் வேத – புராண – இதிகாச மகாத் மியங்கள் சமஸ்கிருதத்தில். ஆம் ஆரிய ஆட்சியின் அரங்கேற்றத்தின் ஆபத்தை எண்ணிப் பாரீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *