“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி  குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருள்களை  விநியோகம் செய்யும்

“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’’

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.12 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டை தாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும்  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருள்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருள்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம்!

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருள்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

அரசுக்கு 35.92 கோடி ரூபாய் செலவு

70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் இத்திட்டத்திற்கு அரசுக்கு 35.92 கோடி ரூபாய் செலவாகும். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாது காப்பையும் உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.8.2025) நேரில் சென்று ரேசன் பொருள்களை வழங்கி, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் உரையாடினார். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருள்களை வழங்குவதால், மிகுந்த பய னுள்ளதாக இருக்கிறது என்றும், குடும்பத்தில் ஒருவராக தங்களது சிரமங்களை அறிந்து இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்“ சென்னையில் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், மாவட்டங்களில்  அமைச்சர்   பெருமக்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பங்கேற்றோர்!

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே. எபினேசர், இரா. மூர்த்தி, ஆர்.டி. சேகர், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், அ. வெற்றியழகன், கே.பி. சங்கர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அ. ஜான் லூயிஸ்,  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ். சிவராசு,  கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்), சா.ப. அம்ரித், , தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *