ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி நாடுகளில் காட்டுத் தீ 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தும் வெப்பம்!

ஸ்பெயின், ஆக. 12- தெற்கு அய்ரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து வெப்ப அலை தாக்கி வருவதால் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் சுமார் 10 நாடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 350 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஸ்பெயினின் டெலைய் டி லா நகர் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க, அதிக வெப்பம், பலத்த காற்றால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி பரவி வருகிறது. வடக்கே உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய தலமான தேசிய பூங்காவை நெருங்கிய காட்டுத்தீ, குடியிருப்புகளை சூழ்ந்து வாகனங்களையும் பொசுக்கியது.

போர்ச்சுக்கல் நாட்டின் பல இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மத்திய போர்ச்சுக்கலில் பற்றிய காட்டுத்தீ, நெடுஞ்சாலையை கடந்து குடியிருப்பு களை சூழ்ந்தது. வாளிகளில் தண்ணீர் ஊற்றி மக்கள் தீயை நெருங்கவிடாமல் தடுக்க முயன்றனர். இத்தாலியில் தேசிய பூங்காவில் பற்றிய காட்டுத்தீ, 3ஆம் நாளாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். குரேஷி கடற் கரையையொட்டி உள்ள சுற்றுலா தளத்திலும் காட்டுத்தீ பற்றியது. அங்கு 450 ஏக்கர் பரப்பிலான பைன் மரங்களை சுவடு தெரியாமல் பொசுக்கிய நிலையில், தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. மாண்டி நீக்ரோ நாட்டில் மலைப் பகுதியையொட்டி உள்ள தெருநாய்கள் காப்பகத்தை காட்டுத்தீ சூழ்ந்தது. நாய்கள் ஓலமிட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவற்றை விடுவித்து தீயை கட்டுப்படுத்தினர். இதேபோல அல்பேனியா, கொசோவோ போன்ற பால்கன் நாடுகளிலும் காட்டுத்தீ பற்றி நூற்றுக்கணக்கான மக்களை இடம் பெயரவைத்தது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *