மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
உயிருள்ள அனைத்து உயிரி களுக்கும், “வலி” என்ற உணர்வு தவிர்க்க முடியாதது. அதிலும் ஆறறிவு உள்ள மனிதருக்கு “வலி” என்பது மிகவும் கடுமையான ஓர் உணர்வு. நோய்கள் கொடுத்த வலியிலிருந்து, தப்பிப் பிழைக்க வேண்டிய கட்டாயமும், மனிதனின் அறிவு வளர்ச்சியும்தான் மயக்க மருந்தின் கண்டுபிடிப்பும், இன்றைய வளர்ச்சிக்கும் அடிப்படை மயக்க மருந்தின் கதை ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகள் கதை. கிரேக்கத்தில் பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டு வலியைப் போக்க முயன்றனர். சைனாவைச் சேர்ந்த “ஹிவா டுவோ” (Hua Tuo) சணல் பயிரிலிருந்து (Hemp) எடுக்கப்பட்ட திரவமான “மெஃபைசின்” (Mefeisan) என்பதை பயன்படுத்தி வலியைப் போக்கினார். கி.பி.111–201 ஆண்டுகளில் சைனாவில் பரவலாக இம் மருந்தைப் பயன்படுத்தினர். கிரேக்கத்திலும், ரோமிலும் மரப்பிசினை (Mandralee) அறுவை மருத்துவத்திற்கு முன் கொடுத்து மருத்துவம் செய்தனர்.
மூலிகை தைலங்கள்
18-19ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பாவின் துறவிகள் சில மூலிகை தைலங்கள் மூலம் அறுவை மருத்துவத்தில் வலியைக் குறைக்க முயன்றனர். அய்ரோப்பாவின் பெரும் பகுதிகளில் 19ஆம் நூற்றாண்டுகளில் “அபினை” (Opeum) பயன்படுத்தி மருத்துவப் பயனாளியை மயக்க வைத்தனர். மருத்துவ அறிவியல் தொடர்ச்சியாக வலியைப் போக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. முதல்முதலாக அறிவியல் பூரணமாக ‘சிரிப்பூட்டும் காற்று’ (Laughing gas). “நைட்ரஸ் ஆக்ஸைடு” (N2O) மருத்துவப் பயனாளிக்கு கொடுக்கப்பட்டது. 16.10.1848 அன்று “வில்லியம் மார்ட்டன்” (Willian Morton) என்ற பல் மருத்துவர்தான் “ஈதர்” (Ether) என்ற மருந்தை, பாஸ்டன் நகரில் உள்ள “மாசெசூசெட்ஸ்” மருத்துவமனையில் இந்த மருந்தை மருத்துவப் பயனாளிக்குக் கொடுத்து அவரை மயங்க வைத்து, மருத்துவர்களுக்குக் காட்டினார். “கிரீன் பீல்ட் லாங்” (Green field long) என்ற மருத்துவர் அந்த மருத்துவப் பயனாளிக்கு, தாடையில் இருந்த கட்டியை வில்லியம் மார்ட்டின் மயக்க மருந்து கொடுத்த பின் அகற்றினார்.
16.10.1848 அன்று முதல்முதலாக பல் மருத்துவர் வில்லியம் மார்ட்டேன், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள மாசெசூசெட்ஸ் மருத்துவமனையில் ஈதர் மயக்க மருந்தைப் பயன்படுத்தி மருத்துவப் பயனாளிளை மயங்க வைத்து மற்ற மருத்துவர்களுக்கும், விளக்கும் காட்சி.
ஈதர் மருந்து
ஈதர் மருந்தைப் பயன்படுத்தி “ஜேம்ஸ் ராபின்சன்” (James Robinson) ஒரு மருத்துவப் பயனாளியை மயங்க வைத்துப் பல்லைப் பிடுங்கினார். இவரும் ஒரு பல் மருத்துவர். “ஜேம்ஸ் ஸிம்ப்சன் (James Simpson). “குளோராபாம்” மருந்தைப் பயன்படுத்தி மருத்துவப் பயனாளியை மயங்க வைத்துக் காட்டினார். முதல்முதலாக ஒரு பகுதியை மட்டும் “கோகைன்” (Cocaine) என்ற போதை மருந்தைப் பயன்படுத்தி மரக்க வைத்து (Local Anaesthesia) காட்டினார். “கார்ல் கொல்லர்” (Carl Kollar) என்ற மருத்துவரும், “அகஸ்டின் பையர்” (Augustine Bier) என்ற மருத்துவரும் “தண்டுவட மரப்பு ஊசியை” (Spinal Anaesthesia) முதலில் பயன்படுத்தினர். ‘ஜான் ஸ்நோ’ (John Snow) என்ற மருத்துவர் முதன்முதலில் குளோராபாம் மருந்தின் மூலம் இங்கிலாந்து அரசி, விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் நடத்தினார். இப்படி கொஞ்சம், கொஞ்சமாக வளர்ச்சி அடைந்த மயக்கவியல் மருத்துவம் (Anaesthesiology) இன்று மிகவும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. வலியை வென்ற மருத்துவமாக இந்தத் துறை இன்றுள்ளது. புதிய மருந்துகள், புதிய கருவிகள், அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் மருத்துவப் பயனாளிக்கு, ஆபத்தில்லாத மருத்துவமாக மாறியுள்ளது. இன்றைய நிலையில் 2,50,000 மருத்துவப் பயனாளிகளில் ஒருவர் மட்டுமே பாதிப்படைகிறார். மயக்குநர்கள் அறுவை மருத்துவத்திற்கு மட்டும் மயக்கம் கொடுப்பதோடு நில்லாமல், அவசர மருத்துவப் பயனாளிகள் பகுதியில் (E,ergency) பணியாற்றி பல லட்சக்கணக்கான மருத்துவப் பயனாளிகளின் உயிரைக் காப்பாற்றுகின்றனர். கடவுள் கொடுத்ததாக (?) நம்பப்படும் “வலி” என்ற பெரும் தொல்லையை மருத்துவ அறிவியல் ஒழித்தே விட்டது. அதனால்தான் தந்தை பெரியார் மருத்துவர்களை, “கடவுளின் எதிரிகள்” என்றார்.