சென்னை, ஆக.11 பா.ஜ., அழைப்பை, மேனாள் முதல மைச்சர் பன்னீர்செல்வம் ஏற்காதது, பா.ஜ., நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மறைந்த பின், பா.ஜ., தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக மேனாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் திகழ்ந்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து பழனிசாமி, அவரை நீக்கிய பின்னரும், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய, பா.ஜ., உதவும் என நம்பினார். கடந்த மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி முறிந்தபோதும், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார்.
தேர்தல் தோல்விக்கு பின், நிலைமை மாறியது. பழனிசாமி மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு வந்தார். அதன்பின் பழனிசாமி பேச்சை கேட்டு பா.ஜ., தலைமை, பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் தருவதை குறைத்தது. கடந்த மாதம் பிரதமர் தமிழ்நாடு வந்தபோது, அவரை சந்திக்க பன்னீர்செல்வம் அனுமதி கோரினார்; பா.ஜ., கண்டு கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து, அவர் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது, பா.ஜ., கூட்டணியில் இணைய விரும்பிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜ.,வை நம்பினால் சிக்கல் தான் என அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ‘பன்னீர்செல்வம் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது, அக்கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும், என, அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.
சந்திக்க மறுப்பு
இதைத் தொடர்ந்து, பா.ஜ., மீண்டும் பன்னீர்செல்வத்திடம் பேச்சு நடத்த விரும்பியது. பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாம், கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (10.8.2025) நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். அவர் பன்னீர்செல்வத்தை சந்திக்க விரும்பினார்.இத்தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‘என் அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே, எதையும் தெரிவிக்க முடியும்’ என கூறி, சந்திப்பை தவிர்த்து விட்டார் பன்னீர்செல்வம்.
இது, பா.ஜ., நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும், அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தி, கூட்டணிக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.