திராவிடப் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் கல்லணை தந்த கரிகால் சோழன் விழா – திராவிடர் கழக மாநாடு எதிர்வரும் செப்டம்பரில் கல்லணையில் நடைபெற உள்ளது. திராவிடப் பண்பாட்டின் மீள்எழுச்சியைக் கட்டமைக்கும் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் “தமிழர் தலைவர்” அவர்களால் அறிவிக்கப்பட்ட மறுநாளே பார்ப்பனர்களுக்கு முதுகு சொறிய ஆரம்பித்து விட்டது.
மோடியின் “ஒன்றுமில்லா அமளி” (Much ado about Nothing) கங்கைகொண்ட சோழபுரத்தில் அரங்கேறியது. தமிழ் மாமன்னர்களாம் சோழர் களைப் பற்றிய கல்வெட்டுகளும், செப்பேடுகளும், சாசனங்களும் வழங்கிய வரலாறுகள் எண்ணி லடங்கா முற்காலச் சோழர் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு ஆனால் கி.வா.ஜ தனது கரிகால் வளவன் நூலில் (பக்கம்- 60) “தாயுமானவரை வழிபட்டு இன்புற்றான் கரிகால்வளவன் என அவர் பங்குக்கு திரித்துவிட்டிருக்கிறார். (தாயுமானவர் காலம் கிபி 1705-1742)
பரணர், கருங்குழல் ஆதனார், கழாத்தலையார், வெண்ணிக்குயத்தியார், உலா, பரணி, பிள்ளைத்தமிழ் முதலான அனைத்தும் திராவிடப் பெரும் வீரன் கரிகால் சோழன் வரலாற்றை பேசுகின்றன. முதலாம் இராசராசனின் லெய்டன் செப்பேடுகள் (Leydon Grants). முதலாம் ராசேந்திரனின் திருவாலங்காடு செப்பேடு, வீர ராசேந்திரனின் கன்னியாகுமரி கல்வெட்டு ஆகிய மூன்று ஆவணங்களும் கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டியதைக் கூறுகின்றன. இதில் பி.எஸ். சீனிவாச அய்யங்கார், இரா.ராகவ அய்யங்கார் போன்றவர்கள் ‘கொளு’ (திறவுகோல், சூசிகை) என்ற பெயரில் திரிபு வேலை செய்துள்ளனர், ‘தினமலர்’ போல.
கரிகாலன் பெயரைச் சொன்னவுடன் கால்கள் ஏன் நடுங்குகின்றன?! இரண்டு காரணங்கள். ஒன்று தமிழரின் பழமையான வரலாறு மற்றொன்று தமிழரின் வேளாண் தொழில்நுட்பம்.
பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் “மகத்தான அணை” என கல்லணையைப் புகழ்ந்ததோடு, “ஆழம் காண இயலாத மணற் படுக்கையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை நாம் கல்லணையிலிருந்தே கற்றோம்” என்கிறார். பன்னாட்டு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் இந்தியாவின் முதல் அணைக்கட்டு “கல்லணை” எனப் பதிவு செய்கிறது.
உலகில் நீர் மேலாண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்றுதொட்டு சிறந்து விளங்குவது திராவிட நாகரிகம். அதற்கு திராவிடர் கழகம் விழா எடுத்தால் மாநாடு நடத்தினால் கீழடி வரலாறு பேசாத புண்-நாக்குகளுக்கு வலிக்கத்தானே செய்யும்!!
– அ. அழகப்பன்
தாராபுரம்