ஆசிரியர் வீரமணிக்கல்லால் யாருக்குக் கிடைக்கும்?
மீண்டும் மீண்டும்
படித்தாலும்
மீண்டுவர முடியவில்லை
அய்யா!
அப்படியொரு அறிக்கை
அய்யா பெரியார் எழுதியது
‘‘வரவேற்கிறேன்’’ என்று
வாயார
மனமார கையார
எழுதினாரே!
யாருக்குக் கிடைக்கும்
அந்தப் பேறு
ஆசிரியர் வீரமணிக்கல்லால்?
அந்த அறிக்கை
வந்த நாள்தான்
இந்நாள்!
அறிக்கையின் ஒவ்வொரு
சொல்லும்
கால் புள்ளியும்
அரைப் புள்ளியும்கூட
தப்பவில்லை.
காரணம் இது
சிறுத்தைப் புலி!
புள்ளிகள் எப்படித் தப்பும்?
எதையும்
ஈரோட்டுக் கண்ணாடி
போட்டுப் பார்க்கும்
ஈடில்லா நம் தலைவர்!
உயரிய பட்டம் பெற்று
சட்டப் படிப்பையும்
முடித்து,
தொழிலிலும் தலை
தூக்கியபெரு நிலை!
தந்தை பெரியாரே
ஏற்பாடு செய்து
வைத்த திருமண
வாழ்க்கை
வருமானம் கதவைத்
தட்டி
வரத் தொடங்கிய
தருணம்
வந்தது அழைப்பு
தந்தை பெரியாரிடமிருந்து!
முற்றாக அனைத்திற்கும்
முழுக்குப் போட்டு
சராசரி மனித சுபாவம் என்ற
சுகபோக எண்ணச்
சிக்கறுத்து
பெரியார் ஆணை
ஒன்றினையே உயிர் எனக்
கருதி
ஓடோடி வந்தார்
அய்யா சொன்னால் – அது
ஆணை தானே –
அதில் அட்டி என்ன?
‘விடுதலை’ ஆசிரியர்
கழகத்தில் பொறுப்பு
ஊர் ஊராகச்
சுற்றிச்சுற்றி
பிரச்சாரப் பெரு மழை!
பொது வாழ்க்கையின்
ஒட்டு மொத்த
உருவமானார்.
பத்து வயதில்
மேடை ஏறிய
அந்த மா மணிக்கு
அகவை இப்பொழுது
தொண்ணூற்று மூன்றைத்
தொடப் போகிறது.
நினைத்துப் பார்த்தால்
நிலை குலைகிறது.
உடலில் அறுவைச் சிகிச்சைக்
கத்தி படாத இடமில்லை
கொள்கை எதிரிகளால்
உயிருக்குக் குறி வைத்து
தாக்கப்பட்டதும்
ஒன்றல்ல இரண்டல்ல
பலப்பல!
சிறை வாசமோ
கணக்கில் அடங்காது!
பிரச்சாரம் போராட்டம்
இரண்டும் தானே
கழகத்தின் அணுகுமுறை!
இமயமலை இருந்த
இடத்தில்
இதுகளா என்று
ஏகடியம் பேசியோர்
மூக்கில் விரலை வைத்து
மூச்சும் துறந்தனர்.
தந்தை பெரியார்
மறைந்தாலும்
பேசு பொருள்
அவர்மட்டும்தானே!
கழகச் செயற்பாட்டின்
வீச்சு அப்படி!
எத்தனை எத்தனை
நிறுவனங்கள்!
எட்டுப் பக்க ‘விடுதலை’
இவர் காலத்தில்
இரு இடங்களில்
பதிப்பு – வண்ணத்தில்
பல்கலைக் கழகம் வரை
பெரியார் பெயரில்!
தந்தை பெரியாரை
அடுத்தடுத்தத் தலை முறைக்குக்
கொண்டு செல்ல
‘பெரியார் உலகம்’
அவரின் பெருங் கனவு!
அல்லும் பகலும்
அதே நினைப்புதான்!
தூக்கத்தின் முனகலிலும்
‘பெரியார் உலகமே!’’
அவர் தொட்டது
துலங்கியதுதான்
அவர் வாழ்நாள்
தனிச்சிறப்பு!
பெரும் பணி தான்
தொண்டர் படை உண்டு
கை நீட்ட மக்கள்
துணை உண்டு என்ற
தளரா நம்பிக்கை
என்றும் நமக்குண்டு!
கை கொடுங்கள்
தோழர்களே!
‘பெரியாரால் நாம்
வாழ்கிறோம்.
நன்றி நீர்
வற்றிவிட வில்லை’
என்று காட்டுவோம்
நிதி நீர்ப் பாய்ச்சி
நிகரில்லா நம் அய்யா
நெடும் புகழை
நிலைக்க வைக்க
உயர் எண்ணங்களை
மணக்க வைக்க
‘பெரியார் உலகம்’
கண்டிடுவோம்!
இது உறுதி! உறுதி!!
பெரியாரை உலகமயமாக்கும்
பெரும் பணியை
பெரும் அளவில்
வளர்த்து விட்டார்.
பன்னாட்டுத் தமிழர்களை
பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை
ஒருங்கிணைத்து
உறுதியான கட்டமைப்பை
உருவாக்கமும் செய்து விட்டார்.
பெரியாருக்குப் பின்
இப்படியொரு
அதிசயம்! அதிசயம்!!
மண்டைச் சுரப்பை
உலகு தொழும் என்றார்
புரட்சிக் கவிஞர்!
இதோ நம் தலைவர்
அதற்கு வடிவம்தரும்
சிற்பியானார்!
இப்படியொரு தலைவர்
கிடைப்பாரோ
தகைசால் தமிழர்
மானமிகு வீரமணி போல்!
திராவிட இயக்க
மூத்த தலைவர்
திராவிட மாடல் அரசுக்கு
உற்ற துணைவர் மட்டுமல்ல
தெம்பூட்டும் வைரத் தூண்!
‘வரவேற்கிறேன்’ என்று
வரலாற்றுத்
தந்தை பெரியாரின்
தொலைநோக்குதான்
என்னே! என்னே!!
வரவேற்கிறது இவரை
நாடு எல்லை கடந்து!
வாழ்க நம் தலைவர்
ஆசிரியர் வீரமணி
பெரியார் உலகை
நிர் மாணித்து
நூற்றாண்டில்
நம் தலைவருக்கு
வாழ்த்துக் கூறுவோம்!
– கவிஞர் கலி. பூங்குன்றன்
குறிப்பு: தந்தை பெரியார் 1962 இதே ஆகஸ்டு 10ஆம் தேதி தான் நம் ஆசிரியரை வரவேற்று ‘வரவேற்கிறேன்’’ என்ற வரலாற்றுப் புகழ் அறிக்கையை வெளியிட்டார்.