சென்னை, ஆக. 9- சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (11.8.2025) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
டீசலில் இயங்கும் பேருந்து களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
625 மின்சாரப் பேருந்துகள்
அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக, சென்னை வியாசார்பாடி பணிமனை யிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளை கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கப்படவுள்ளது.
55 குளிர் சாதன
மின்சார பேருந்துகள்
இதுகுறித்து மாநகரப் போக்கு வரத்துக்கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் கூறியதாவது: வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 குளிர் சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளோம்.
வரும் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் இந்தப் பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். தொடர்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.