சென்னை, ஆக. 9- பொறியியல் படிப்புக்கான 2ஆவது சுற்று கலந்தாய்வு 7.8.2025 அன்று நிறைவு பெற்றுள்ளது. இதுவரை கல்லூரிகளில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. இதுதவிர 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது.
2ஆவது சுற்று கலந்தாய்வு
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான இணையவழி கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5சதவீத உள் ஒதுக்கீடு பிரிவினருக்கு 3 சுற்றுகளாக தமிழ்நாடு முழுவதும் 423 கல்லூரிகளில் உள்ள 1,87,227 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடக்கிறது.
இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் 30,096 இடங்கள் நிரம்பி இருந்தன. இதனைத் தொடர்ந்து 2ஆவது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 26ஆம்தேதி ஆரம்பித்து, 7ஆம் தேதியுடன் முடிந்துள்ளது.
2ஆவது சுற்று நிறைவில், பொதுப்பிரிவில் 52,694 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் 9,633 இடங்களும் என மொத்தம் 62,327 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.
92,423 இடங்கள்
ஒட்டுமொத்தமாக 2 சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் உள்ள 1,87,858 இடங்களில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி இடங்களில் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். மீதம் 95,435 இடங்கள் இருக்கின் றன.
இந்த 2 சுற்று கலந்தாய்வில் இதுவரை 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையும் உள்ளது. மேலும், 90 சதவீதத்துக்கும் மேல் 56 கல்லூரி களிலும், 80 சதவீதத்துக்கு மேல் 82 கல்லூரிகளிலும், 50 சதவீதத்துக்கு மேல் 147 கல்லூரிகளிலும், 10 சதவீதத்துக்கும் குறைவாக 148 கல்லூரிகளி லும் இடங்கள் நிரம்பி உள்ளன.
இந்த ஆண்டுக்கான கலந் தாய்வில் முதல் சுற்றில் இருந்து கணினி அறிவியல் (பொறியியல்), அதனுடன் தொடர்புடைய ஏ.அய்., மெஷின் லேனிங், தரவு அறிவியல் போன்ற படிப்புகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்புகளில் சேரவே அதிக மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும், 2-வது சுற்றிலும் அதே நிலை நீடித்ததாகவும் கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி தெரிவித்தார்.
கோர் என்ஜினீயரிங் படிப்புகள்
மேலும், 2ஆவது சுற்றில் “கோர் என்ஜினீயரிங்” படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப் பதையும் பார்க்க முடிவதாகவும், இதுதவிர, 994 பேர் முதல் சுற்றில் காத்திருப்பில் இருந்து 2ஆவது சுற்றில் படிப்புகளை தேர்வு செய்திருக்கின்றனர். அவ்வாறு தேர்வு செய்த 166 பேர் 190 ‘கட்-ஆப்’ மதிப்பெண் மேல் எடுத்தவர்களாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து 3ஆவது சுற்று கலந்தாய்வு தொடங்கி யுள்ளது. வருகிற 20ஆம் தேதியு டன் நிறைவு பெறுகிறது. இந்த கலந்தாய்வில் 1,01,589 மாணவ-மாணவிகள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
100 சதவீத இடங்கள் நிரம்பிய கல்லூரிகள்
பொறியியல் கலந்தாய்வில் 2 சுற்று முடிவில் 7 கல்லூரிகள் தங்கள் படிப்புகளுக்கான அனைத்து இடங்களையும் நிரப்பி உள்ளன. அதாவது 100 சதவீத இடங்களை நிரப்பி இருக்கின்றன.
அதில் கிண்டி அண்ணா பல்கலைக்கழக கல்லூரி 1,162 இடங்களையும் நிரப்பிவிட்டன. அதற்கடுத்தபடியாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக் கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்.அய்.டி. வளாகம், கோவை அரசு பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவையும் 100 சதவீத இடங்களை நிரப்பியுள்ளன.