வாசிங்டன், ஆக. 9- வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரிவிதிப்பு 27ஆம்தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், தலை நகர் வாசிங்டனில் செய்தி யாளர்களிடம் நேற்று (8.8.2025) பேசிய டிரம்ப், “வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப் படாது” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஸ்மார்ட்போன், கணினி, மருந்துகள், சில வகை உலோகங்கள், கனிமங்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது. எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளி, நகைகள், வைரங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சக செயலர் (பொருளாதார உறவுகள்) தாமுரவி கூறிய போது, “அமெரிக்காவின் வரி விதிப்பு என்பது தற்காலிக பிரச்சினைதான். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். ஒன்றிய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப் பிரிக்க நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடுகளுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும்” என்றார்.
இதற்கிடையே, ‘அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.31,500 கோடி மதிப்பில் பி-81 ரக போர் விமானங்களை வாங்க ஒன்றிய அரசு ஏற்கெனவே முடிவு செய்தநிலையில், இதுதொடர்பான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என ராய்ட்டர்ஸ் நிறுவ னம் நேற்று செய்தி வெளி யிட்டது.