*கல்வியைப்பற்றி தந்தை பெரியார் அன்றே சொன்னார்!
* மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை! 4 எட்டாம் வகுப்புவரை தேர்வில் தோல்வி கிடையாது!
ஆண்டு இறுதித் தேர்வுகளைக் கொண்டு மட்டும் முடிவுக்கு வரக்கூடாது;
முதலமைச்சர் வெளியிட்ட ‘‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 அறிக்கை’’யின் சிறப்புப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘கல்வி என்பது ஒரு மனிதனுக்கு அவசிய மெல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் சுதந்தி ரத்தோடு வாழ்வதற்கு அவரைத் தகுதிப்படுத்து வது என்பதேயாகும்.’’ (‘குடிஅரசு’, 29.7.1931)
‘‘சோறு இல்லாதவனுக்குச் சோறும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கவேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாத வனுக்குக் கல்வி கொடுக்கவும் வேண்டும்.’’ (‘விடுதலை’, 21.7.1961) என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.
தமிழ்நாடு மாநிலக்
கல்விக் கொள்கை- 2025
கல்விக் கொள்கை- 2025
‘‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை’’ அறிக்கையை ‘திராவிட மாடல்’ அரசின் முதல மைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.8.2025) வெளியிட்டார். 76 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையும் சரி, அவ்வறிக்கையை வெளியிட்டு ஆற்றிய உரையும் சரி – தந்தை பெரியார் கல்வி பற்றிக் கூறிய கருத்தின் வெளிப்பாட்டைத்தான் நினைவு படுத்துகிறது.
‘திராவிட மாடல்’ அரசின்
கல்விக் கொள்கை!
கல்விக் கொள்கை!
‘‘திராவிட மாடல் அரசைப் பொறுத்த வரைக்கும், அனைத்து மாணவர்களும் பள்ளிக் கல்வி முடித்து, உயர் கல்வியில் சேரவேண்டும்’’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டு இருப்பது கேட்டு – சமூகநீதி உணர்வாளர்களின் கண்கள் பெருமிதத்தால் நீர் மல்குகின்றன.
‘‘2022 இல் இருந்து கடந்த மூன்றாண்டு களில், நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களில் எத்தனைப் பேருக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்திருக்கிறது தெரியுமா? 977 பேருக்கு இடம் கிடைத்தி ருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 901.’’ முதலமைச்சரின் இந்தப் புள்ளி விவரம் – வெற்றுப் பேச்சுப் பேசுவோரின் வாயை அடைக்கக் கூடியதாகும்.
மயிர்க்கூச்செறியும் தகவல்!
அடுத்து முதலமைச்சர் கூறிய தகவல் – மயிர்கூச்செறியச் செய்கிறது.
அய்.அய்.டி. என்றால், அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி என்றிருந்த இறுமாப்பை உடைத்தெறியக் கூடிய தகவல் அது.
அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேர் இவ்வாண்டு உள்ளே நுழைந்துள்ளனர். 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 901 அரசுப் பள்ளி மாணவர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். இதில், மாற்றுத் திறனாளி மாண வர்கள் 150 பேர்!
முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமரிடம், தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்மூலம் அளிக்கப்பட்ட மனுவில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய கல்வி நிதி ரூ.2,151 கோடியை உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி இல்லாமலேயே ‘திராவிட மாடல்’ அரசு மாபெரும் கல்விப் புரட்சி செய்திருப்பதை நன்னோக்கும், திறந்த மனப்பான்மையும் உள்ளவர்கள் பாராட்டவே செய்வார்கள்.
‘திராவிட மாடல்’ அரசு என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை.
தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கையின் அறிக்கை பத்து அத்தியா யங்களைக் கொண்டது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் சொல்லப்பட்ட கருத்தும், திட்டங்களும் அறிவியல்பூர்வமானதாகவும், மாணவர்களின் உளவியலை மனதிற்கொண்டும் தயாரிக்கப்பட்டதாகும்.
தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாநிலம் தமிழ்நாடே!
தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி, இந்தியா விலேயே தமிழ்நாடு முதல் மாநிலம் என்பது சாதாரணமானதல்ல.
இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் 7.7 விழுக்காடு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறையும் கூறப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது – நமது கல்வி முறை என்பது மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்பதாகும்.
இதுபற்றியும் தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கை, தெளிவாகப் பேசுகிறது.
மனப்பாடத்திற்கு
முக்கியத்துவம் கிடையாது!
முக்கியத்துவம் கிடையாது!
‘மனப்பாடத்திற்கு அதீத முக்கியத்துவம்’ என்ற தலைப்பின்கீழ் கூறப்பட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
எப்பொழுது பார்த்தாலும் தேர்வு தேர்வு என்று மாணவர்களைப் பொதி சுமக்கும் நிலைக்குத் தள்ளக் கூடாது என்பது ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களின் கருத்தாகும்.
திராவிடர் கழகம் தொடர்ந்து சொல்லி வந்த கருத்துகள்தான்!
திராவிடர் கழகமும் அறிக்கைகள் வாயி லாகவும், தீர்மானங்கள் வாயிலாகவும் வலியுறுத்தி வந்த கருத்தும் இதுவே!
இந்த அடிப்படையில் எட்டாம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி என்ற நிலை ஒழிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு என்று பழைய நிலை நீடிக்கப்படும் என்பது தெளிவான முடிவாகும்.
11 ஆம் வகுப்பிலும் அரசுத் தேர்வு என்ற சுமை ஒழிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே!
தேர்ச்சியினைத் தீர்மானிக்க ஆண்டு இறுதித் தேர்வுகளைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாணவரின் முழுமையான கற்றல் பயணத்தைக் கல்வியாண்டு முழுவதும் பதிவு செய்யும் தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கருத்தும் மிகமிக சிறப்பானதே!
ஆசிரியரின் திறன் மேம்பாடு!
கால வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர் பணித் திறன் மேம்பாடு, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமானவையே!
இத்தகைய அறிவியல் ரீதியான முடிவு – காலத்திற்கேற்ப சிந்தனையாகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கல்வித் துறைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘‘கடந்த நான்காண்டுகளில் (2021–2025) தமிழ்நாடு அரசு நிலையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் இலக்கு சார்ந்த முதலீடுகள்மூலம் பள்ளிக் கல்விக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்துவருகிறது. ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.50 ஆயிம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.2,15,264 கோடியாக உள்ளது. இதில், 4,386 கோடி ரூபாய் புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்பட உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்பது ‘திராவிட மாடல்’ அரசு கல்வி வளர்ச்சியில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
மாணவர்கள் மத்தியில் பரவும்
போதைப் பொருள் ஒழிப்பு!
போதைப் பொருள் ஒழிப்பு!
மற்றொரு முக்கியப் பிரச்சினை – கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் நடமாடுவது ஆகும்.
இதனைத் தடுத்திடும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழு, உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்களை ஈடுபடுத்துதல், மருத்துவர்கள், உளவியலாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் முயற்சி சிறப்பானதாகும்.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால், ஒன்றிய அரசு திணிக்கும் மும்மொழிக் கொள்கை, 3, 5, 8, 11 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற கொடுமை தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கையில் ஒழிக்கப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.
கல்வி வளர்ச்சியில்
தமிழ்நாடே முதன்மை மாநிலம்!
தமிழ்நாடே முதன்மை மாநிலம்!
ஆசிரியர் மாணவர் விகிதம் தேசிய அளவில் ஓர் ஆசிரியருக்கு 30 மாணவர்கள்.
தமிழ்நாட்டிலோ ஓர் ஆசிரியருக்கு 18 மாணவர்கள். இதன்மூலம் ஆசிரியர்களால் மாணவர்கள்மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிகளில் இருந்து உயர் கல்வி செல்வோர் (GER) (2023–2024) 51.4 விழுக்காடு; இந்திய சராசரி 28.4 விழுக்காடு என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பெண்கள் உயர் கல்வியில் சேர்க்கை 50 விழுக்காடு.
மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி – இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்! மாணவர்களுக்கு இலவச உடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, வாகன வசதி போன்ற திட்டங்கள்.
24+ அரசுப் பல்கலைக் கழகங்களும், 500 + கல்லூரிகள். தமிழ்நாடு அரசு GSDP யில் 15 விழுக்காடு கல்விக்காகச் செலவழிக்கப்படுகிறது. அவைதானே, சமூக முதலீடுகள்!
இந்தியாவுக்கே வழிகாட்டும்
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை!
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை!
இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ அரசு!
தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை இந்தி யாவிற்கே வழிகாட்டக் கூடியதாகும்.
வாழ்த்துகள்! பாராட்டுகள்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.8.2025