ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1:  மருத்துவப் பயனாளியாக பயன் பெற்று இல்லம் திரும்பிய தாங்கள், ஓய்வைப் புறந்தள்ளி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான 07.08.2025 அன்று அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை அறிந்த தமிழ்கூறும் நல்லுலகம் தங்களை வாயார மனதார வாழ்த்தி மகிழ்வது தங்களுக்கு மேலும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்று கருதலாமா?

எஸ்.பத்ரா, வந்தவாசி

பதில் 1: கடமையல்லவா? கடமையாற்றுவதில் எப்போதும் மகிழ்ச்சியும் ஊக்கமும்தானே! ஒரு பழைய செய்தி. புதிய இளந்தலைமுறைக்கு! நெருக்கடி நிலை “மிசா’ கைதிகளான நாங்கள் தோழர் மு.க.ஸ்டாலின் மற்றும் திராவிட இயக்கத் தோழர்கள் பெயர்களைக் கைதுப் பட்டியல் பெயர்களுக்குகூட ‘தணிக்கை’க் காரணமாக வெளிவராதபோது, நமது கலைஞரின் உத்தி! எங்கள் பெயர்களை – அன்றைய ‘முரசொலி’யில்  “அண்ணா நினைவு நாள் பிப்.3 (1976) அன்று அண்ணா நினைவிடத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்த முடியாதவர்கள் (அல்லது) வாய்ப்பில்லாதவர்கள்” என்று குறிப்பிட்டு, கைது செய்யப்பட்ட தோழர்கள் யார் யார் என்பதை உணர்த்தினார்.

•••

கேள்வி 2: “மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம், பகைக் கூட்டத்தை வெல்வோம்” என்று தி.மு.க. சார்பில் ஏ.அய். தொழில் நுட்பத்தில் குறும்படம் வெளியிடப்பட்டிருப்பது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாமா?

– சா.சத்தியமூர்த்தி, நாமக்கல்.

பதில் 2: திராவிட இயக்க வளர்ச்சியே – வெற்றியே – அடைமழைப் பிரச்சாரத்தினால்தானே! நிச்சயமாக.

•••

கேள்வி 3: ராகுல்காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், யார் உண்மையான இந்தியர் என்று நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா பேட்டி அளித்திருப்பது ஏற்புடையதா?

– பெ. அங்காளம்மாள், திருவொற்றியூர்.

பதில் 3: சரியானது, நீதி வழங்க வேண்டியவர்கள் நாகாக்க வேண்டியது அதைவிட முக்கியம். அண்மைக் காலங்களில் இது பெரிதும் எல்லை தாண்டும் வேதனைக்குரிய நிலை. (தீர்ப்பில் எப்படி இருந்தாலும்கூட) சிலர் நீதிமன்றத்தில் – உண்மைகளை அறியாமலேயே ‘மலைப் பிரசங்க’ மேடையாக அதனை ஆக்குகின்றனர்–! நல்ல முன்மாதிரியாக அவை அமையாது.

  • •••

கேள்வி 4: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 24 மணி நேரத்தில் அதிக அளவில் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்து, அதன்படியே செய்திருப்பது ஏழை எளிய கிராமப்புற மக்கள் மீது ஏற்றப்படு்ம் பெரும் சுமை அல்லவா?

– ச.பாலகிருஷ்ணன், பாலக்காடு.

பதில் 4: அதெல்லாவற்றைவிட, இந்திய இறையாண் மைக்கு மாபெரும் அறைகூவல். நமது வெளியுறவுக் கொள்கையின் நிலைப்பாட்டுக்கு ஏற்கத்தக்கதா? குட்டக்குட்ட குனிவது விரும்பத்தக்கதா?

  • •••

கேள்வி 5: மாநிலங்களவையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதா, அமளிகளுக் கிடையே நிறைவேற்றப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலை என்று எடுத்துக் கொள்ளலாமா?

– பா.ஆகாஷ், புது டெல்லி.

பதில் 5: தொடர்ந்து நடைபெறும் ஜனநாயகப் படுகொலையில் இது ஒரு புதிய சேர்க்கை அவ்வளவுதான்.

•••

கேள்வி 6: கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதோடு, அது உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருப்பது சரியா?

– ச.மணிகண்டன், அரூர்.

பதில் 6: ‘வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறுகிறது’ என்பது ஒரு பழமொழி. அரசியலமைப்புச் சட்டப்படி தரப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அவமதிப்பு – அரசியல் அடாவடித்தனம் – கண்டனத்திற் குரியது.

ஆசிரியர் விடையளிக்கிறார்

•••

கேள்வி 7: வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால், தமிழ்நாட்டு அரசியல் தலைகீழாக மாறிவிடும் என்று தொல்.திருமாவளவன் அவர்கள் தெரிவித்திருப்பதை தி.மு.க. அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமா?

– ந.பன்னீர்செல்வம், வேளச்சேரி.

பதில் 7: இதுதான் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. கூட்டணி தவிர, அனைத்துக் கட்சிகளின் கருத்தாக இருக்கும்; இருக்கிறது! உறவுக்குக் கை கொடுப்பதால் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்பதே ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நிலைப்பாடாக அமைவது உறுதி!

ஆசிரியர் விடையளிக்கிறார்

•••

கேள்வி 8: திருக்குறள் இனம், மொழி, மதம், நாடு கடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல். மனிதம் என்ற ஒற்றைக் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பது. அத்தகைய அறநூலை இந்தியாவின் 79-ஆம் சுதந்திரத் திருநாள் பேருரையில் ‘ தேசிய நூலாக ‘ அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரதமர் ஆவன செய்வாரா?

– வ.பொன்மணி, பூந்தமல்லி.

பதில் 8: கவிப்பேரரசின் விழைவு; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியில் நடைமுறைக்கு வருவது “காளை கன்றுபோடும்” எதிர்பார்ப்பே!

•••

கேள்வி 9: ‘வறுமையில்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது மட்டுமல்லாமல், வறுமை ஒழிப்பில் தேசிய சராசரி மதிப்பெண் 100-க்கு 72 என்று இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மதிப்பெண் 92 எனும் அளவில் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதை ஒன்றிய அரசு கவனத்தில் நிறுத்தி தமிழ்நாட்டுக் தரவேண்டிய நிதியை வழங்க முன்வருமா?

– வெ.ஜமுனா, ஆரணி.

பதில் 9: இரட்டை இலக்க வெற்றியைப் பாராட்டுவதற்குப் பதிலாக, அதையே காரணம் காட்டி (நிதிக்குறைப்பு) தண்டனையும் தரும் வன்மம் கொண்டதே பா.ஜ.க. மோடியின் ஒன்றிய அரசு.

••

கேள்வி 10: ஜாதியக் கொலைகளைத் தடுக்க ஏதுவாக, அதற்க்கெனத் தனிச்சட்டம் இயற்ற ‘திராவிட மாடல்’ அரசு  முயற்சி மேற்கொள்ளுமா?

– த. திருநாவுக்கரசு, திருநெல்வேலி.

பதில் 10: முதலமைச்சரிடம் பல மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து வற்புறுத்திப் பேசியுள்ளோம். அண்மையில் சட்ட விளக்கங்களோடு விரிவான கடிதத்தை மருத்துவமனையில் இருந்தபோது அனுப்பியுள்ளோம். வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *