ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (ஷாஜீ) – 14 “பந்தயக் குதிரை பந்தாடிய பையனுக்கு மருத்துவம்”

7 Min Read

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

படம் 1: வலது கண் மேல் சுற்று எலும்பிலும், பக்கவாட்டு எலும்பிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள். இடது கண் சுற்றெலும்பும்,வலது சுற்றெலும்பும் சமமாக இருப்பதை கவனியுங்கள்! படம் 2: மீண்டும் சீராக ஸ்டெயின்லெஸ் கம்பிகளால் பொருத்தப்பட்ட கண் சுற்றெலும்பு.

ஓர் இனிய மாலை நேரம். குளிர் மிகுந்த குன்னூரை மேலும் குளுமையாக்கும் வண்ணம் குளிர் காற்று வேகமாக வீசத் தொடங்கிய சமயம். கதிரவனின் மஞ்சள் வண்ண கதிரொளி, மலை முகடுகளில் பட்டு, மறையத் துவங்கும் நேரம்.

என் மருத்துவமனையில் அமர்ந்து ‘மருத்துவப் பயனாளி’களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென அலைபேசி அலறியது. எடுத்தேன், பேசினேன். உதகையிலிருந்து அலைபேசி அழைப்பு.

ஞாயிறு மலர், மருத்துவம்

உதகையிலிருக்கும் ஒரு மருத்துவமனையிலிருந்து செவிலியர் அழைத்தார். “சார், எமர்ஜென்சிக்கு ஒரு பையனைக் கொண்டு வந்திருக்காங்க. ரேஸ் கோர்ஸ்லே வேலை செய்யற பையன் ரேஸ் குதிர உதச்சிடுச்சாம். கண்ணிலிருந்து ரத்தம் வழியுது. கட்டுப் போட்டுள்ளோம். வர்ரீங்களா?” என்று கேட்டார். செவிலியர் சொன்னதன் ஆழத்தைப் புரிந்து கொண்டதால், உடனே புறப்பட ஆயத்தமானேன். காத்திருந்த மருத்துவப் பயனாளிகளை அடுத்த நாள் வரச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

மணி மாலை ஆறு மணி. அரை மணி நேரத்தில் உதகை மருத்துவமனையை அடைந்துவிட்டேன். நேராக அவசரப் பகுதிக்கு(Emergency) சென்றேன். அங்கே உயிர் மூச்சுக் காற்று (oxygen) செலுத்தப்பட்ட நிலையில் பதினைந்து வயது பையன் படுத்திருந்தான். வலது கண்ணை முழுவதும் மறைத்துக் கட்டுப் போடப்பட்டிருந்தது. இரத்தம் தோய்ந்தவாறு அந்தத் துணி இருந்தது. அருகில் அவனோடு வந்திருந்தவர்கள் நின்று இருந்தனர். அவர்களிடம், “என்னங்க ஆச்சு?” என்று கேட்டேன்.

ஞாயிறு மலர், மருத்துவம்

அவர்களில் ஒருவர், “சார் நாங்க ரேஸ்கிளப்பில் பணியாற்றும் ஆபிசர்கள். இந்தப் பையன் பேரு ஷாஜீ. பீகாரி. ஆறு மாசமா கிளப்பில் வேலை செய்யறான். ரேசுக்கு வரும் குதிரைகளுக்குத் தீனி போட்றது, குதிரைகளைக் குளிப்பாட்றது மாதிரியான வேலை செய்வான். இன்னிக்கு மத்தியானம் ஒரு ரேஸ் குதிரையைக் குளிப்பாட்டிக்கிட்டு இருந்தபோ, அந்தக் குதிரை திடீரென்று இவன எட்டி உதச்சுடுச்சி. “அய்யோ” என்ற கத்தியவாறு தூரத்திலே போய் விழுந்துட்டான். முகத்திலே வலது பக்கத்திலே கண்ணுக்கிட்டே இருந்து ரத்தம் வழிஞ்சது. உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தோம்” என்று கூறினார்.

நான் மருத்துவப் பயனாளியின் அருகில் சென்று சோதிக்கத் துவங்கினேன். அவசர நோய்ப் பகுதியில் இருந்ததால், மூச்சு, நாடித்துடிப்பு, உயிர் மூச்சுக் காற்றின் அழுத்தம் (SPO2), இரத்த அழுத்தம், இதய மின் அலைப் பதிவு (ECG) போன்றவை அளவிடும் “நாடி, மூச்சுக்காற்று அளவீடு கருவி” (Pulse-Oxy Meter) மருத்துவப் பயனாளியின் உடலில் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த அனைத்து அளவீடுகளும் சீராக இருப்பதை அந்தக் கருவி காட்டியது. அந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். அவனுக்கு ஆங்கிலம் புரியவில்லை. நான் கேட்டக் கேள்விகளுக்குத் தமிழில் அரைகுறையாகப் பதிலளித்தான். அருகில் நின்ற உதவியாளர்கள் மூலம் அவனது மருத்துவ வரலாறை (Medical History) அறிந்தேன்.

வழமையாக அவன் பராமரிக்கும் குதிரைதான், இன்று திடீரென உதைத்து விட்டதாகக் கூறினான். முகத்தின் வலது பக்கம் அதிகம் வலிப்பதாகக் கூறினான். “வாந்தி எடுத்தாயா?” என்று கேட்டேன். ஒருவேளை மூளையில் அடிபட்டிருந்தால், அல்லது மண்டை எலும்புகளில் அடிபட்டிருந்தால் மருத்துவப் பயனாளி உணர்விழப்பிற்கு ஆளாகி ஆழ் மயக்க நிலையில் (Coma) ஆழ்ந்து விடுவார். பக்கவாட்டில் அடிபட்டால் காதில் இரத்தம் வரும். அதுவே மண்டையின் முன் பக்கம் அடிபட்டால் மூக்கில் இரத்தம் வரும். மூளையைச் சுற்றி மூன்று உரைகள் இருக்கும். அதற்கு இடையே ஒரு திரவம் இருக்கும். “மூளை, தண்டுவட நீர்” (Cerebro-Spinal Fluid) என்று அதற்குப் பெயர். கடினமான மண்டை ஓட்டின் எலும்புக்குள், இந்த உறைகளும், மூளை, தண்டுவட நீரும் நம் மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். மண்டை ஓட்டின் முன் பகுதியில் அடிபட்டால் இரத்தத்தோடு மூளை, தண்டுவட நீரும் (Cerebro-Spinal Fluid) இரத்தத்தோடு கலந்து வெளியேறும். அதை வைத்து, மூளையில் (அடிபட்டிருந்தால்) ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். குதிரையால் உதைக்கப்பட்டு வந்திருந்த இந்த மருத்துவப் பயனாளிக்கு அதுபோன்ற அறிகுறிகள் ஏதும் இல்லை. அதனால் மூளையில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்தேன். மருத்துவப் பயனாளி நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததும் ஒரு நல்ல அறிகுறி.

மற்ற அனைத்து உடல் செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருந்ததால், மேற்கொண்டு உதைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்யத் துவங்கினேன். மெதுவாக கண்ணின் மேல் போட்ட கட்டை அகற்றினேன். வலது கண் நன்றாக அடிபட்டிருந்தது. லேசாக கண்ணிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. கண்ணின் விழி வெண் படலம் கிழிந்திருந்தது. கண்செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தேன். வலது கண்ணில் பார்வையே இல்லை. கண்ணின் சுற்றெலும்பின் நெற்றிப் பகுதியில் எலும்பு முறிவாகி உள்ளதை அறிந்தேன். உடைந்த அந்த எலும்பின் ஒரு கூர்மையான துண்டு கண்ணைக் கிழித்திருக்கும் என்று தோன்றியது. மருத்துவப் பயனாளியை கண் மருத்துவரிடம் காட்டி, அவர் அறிவுரையைக் கேட்கச் சொன்னேன். மேற்கொண்டு இரத்தம், சிறுநீர், முகத்தின் ஊடுகதிர் படம், மண்டை ஓட்டின் கணனி பட ஆய்வு (CT Scan) ஆகியவை எடுக்கச் சொல்லி அறிவுரை வழங்கினேன். அந்த ஆய்வுகளின் முடிவுகள் இரண்டு மணி நேரத்தில் என்னிடம் வந்தன. நான் எதிர் பார்த்தபடியே கண்ணின் மேல் சுற்றெலும்பு பல துண்டுகளாக உடைந்திருந்தது. அதில் ஒரு துண்டு, கண்ணின் எலும்பின் (Orbit) உட்புறம் கண் பகுதியில் இருந்தது. அந்தத் துண்டுதான் கண்ணைக் குத்தி, பார்வையை இழக்க வைத்திருக்கும் என்பதை அறிந்தேன். இரத்தம், சிறுநீர் போன்றவை இயல்பான அளவில் இருந்தது. கண் மருத்துவர் அறிவுரை அடுத்த நாள் கிடைத்தது. வலது கண்ணில் பார்வை இல்லை என்று எழுதியிருந்தார். கண் சுற்றெலும்புகளை பொருத்தி, பார்வையற்ற கண்ணை அகற்றி விட்டு, செயற்கைக் கண்ணைப் பொருத்தலாம் என்று, கண் மருத்துவரிடம் பேசி முடிவெடுத்தேன்.

பின் மருத்துவப் பயனாளியை மயக்குநரின் அனுமதிக்கு அனுப்பினேன். அவரும் அந்தப் பையனை சோதித்து அறுவை மருத்துவத்திற்கு அனுமதி அளித்தார். அடுத்த நாள் அறுவை மருத்துவம் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அறுவை அரங்கிற்கு மருத்துவப் பயனாளி மாற்றப்பட்டார்.

வழக்கம் போல் மயக்க முன் மருந்துகள் மருத்துவப் பயனாளிக்குக் கொடுக்கப்பட்டது. பின் மூச்சுக் குழாயில், மயக்க மருந்துக் குழாய் செலுத்தப்பட்டது. மயக்கம் கொடுத்த பின், ஏற்கெனவே குதிரை உதைத்ததால் கண் சுற்று எலும்பின் மேல் இருந்த தோல் பகுதியிலும், நெற்றியின் பக்கவாட்டிலும், தோல் பகுதியிலும் இருந்த காயத்தை சற்று பெரிதாக்கினேன். உடைந்த எலும்புப் பகுதியை அடைந்தேன். பல துண்டுகளாக கண்ணின் மேல் சுற்றெலும்பு உடைந்திருந்தது. அவற்றை இயல்பான நிலையில் பொருத்தினேன். கண் ஏற்கெனவே பார்வை இழப்புக்கு ஆளாகியிருந்ததால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் துளையிடும் கருவி மூலம், சுற்றெலும்பில் துளையிட்டேன். ஏற்கெனவே இயல்பான நிலையில் பொருத்தப்பட்ட எலும்பை, ஸ்டெயின்லெஸ் கம்பிகள் மூலம் இறுக்கமாகக் கட்டினேன். எலும்புத் துண்டுகள் இணைக்கப்பட்டப் பின் வழக்கமான அமைப்பாக சுற்றெலும்பு இணைந்தது. வழமையான வட்ட வடிவம் கண்ணின் சுற்றெலும்பு அமைந்து விட்டது. எலும்புகள் இணைப்போடு என் பணி முடிந்தது. இறுதியாக அடிபட்ட காயத்திற்கு தையல் போட்டு விட்டு, மருத்துவப் பயனாளியை கண் மருத்துவரிடம் ஒப்படைத்தேன்.

மருத்துவப் பயனாளி மயக்க நிலையிலே இருந்தான். கண் மருத்துவர் மிகவும் மெதுவாக கிழிந்த, பார்வையற்ற கண்ணை அகற்றினார். கண்ணைச் சுற்றியுள்ள சதைப் பகுதிகளிலிருந்து வரும் இரத்தக் கசிவுகள் நிற்கும் வரை காத்திருந்தோம். பின் கண்குழியில் பஞ்சை வைத்து, கண் பகுதி முழுவதும் மறைக்கும் விதத்தில் கட்டுப் போட்டோம். நோயாளியின் உடல்நிலை சீராக இருந்ததால், மூச்சுக் குழாயிலிருந்து, மயக்க மருந்துக் குழாய் அகற்றப்பட்டது.

மருத்துவப் பயனாளி அறுவை அரங்கத்திலிருந்து, சாதாரண படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டான். ஒரு வாரம் கழிந்தது. கண் சுற்று எலும்பின் மேல் தோலில் போடப்பட்டத் தையல்கள் அகற்றப்பட்டன. காயம் நன்கு ஆறியிருந்தது. கண் அகற்றப்பட்ட இடம் குழியாக, பார்ப்பதற்கே பயப்படும்படியாக இருந்தது. அது தெரியாத அளவுக்கு ஒரு செயற்கை கண் பொருத்த வேண்டும். அதற்காக கண் சுற்றெலும்பின் சுற்றளவும், கண் குழியின் ஆழத்தையும் அளவெடுத்தோம். பின் அந்தப் பகுதி அச்சு (Impression) எடுக்கப்பட்டது. அந்த அச்சு பிளாஸ்டர் ஆப் பாரிஸில் வார்க்கப்பட்டது. பின், செயற்கை உறுப்புகள் ஆய்வகத்திற்கு (Prosthetic Laboratory) அனுப்பப்பட்டது.

ஒரு வாரத்தில் “அக்ரலிக்” என்ற பொருளால் செய்யப்பட்ட செயற்கை கண், செயற்கை உறுப்புகள் ஆய்வகத்திலிருந்து வந்தன. கண் போலவே விழிவெண்படலம், கரு விழி போன்றவை அமைந்த அந்த செயற்கைக் கண்ணை, கண்ணிருந்த குழியில் பொருத்தினோம். பார்வை இல்லையே ஒழிய, பார்த்தால் கண் இல்லாததுபோல் தெரியாது. மருத்துவப் பயனாளியே கண் கண்ணாடி போல் வெளியே எடுத்து மீண்டும் வைத்துக் கொள்ளலாம். உதைப்பட்ட அந்தபையன் ஷாஜி நன்றாக இருக்கிறான். தன் குறைபாட்டை பெரிதாக நினைக்காமல் பழையபடியே பணியாற்றுகிறான். இப்பொழுது சென்னை குதிரைப் பந்தய மைதானத்தில் வழக்கமான வேலையிலேயே இருக்கின்றான். முகத்தை சீரமைத்தேனே ஒழிய, அந்த மருத்துவப் பயனாளிக்கு  (வலது கண்) பார்வை கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம், என் மனதில் நின்றுவிட்டது.

அந்தப் பையனைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், கல்வியறிவற்ற குருடர்களாக இருந்த நமக்கு “மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு” என்று கூறி கல்வியறிவு கொடுத்து, நம்மை உயர்த்திய தந்தை பெரியாரை நினைக்கிறேன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *