பெரியாருடைய பள்ளியிலே சட்டாம் பிள்ளையாக இருந்து நம்மை வழி நடத்தியவர் பேரறிஞர் அண்ணா. அந்தக் கல்லூரியிலே படித்த மூத்த மாணவர்களிலே ஒருவன் நான். நான்தான் இன்றைக்கு உங்களை யெல்லாம் சந்திக்கிறேன் – என்றால் எப்படி? எனக்குப் பகுத்தறிவு பாடம் போதித்த பெரியாரை மறவாமல், என்னுடைய உள்ளத்திலே சுயமரியாதை உணர்வை விதைத்த அய்யாவை மறவாமல், அந்த பெரியார் தந்த அருமையான கொள்கைகளையெல்லாம் நாட்டிலே பரப்ப வேண்டும் என்ற அந்த உணர்வோடு உங்களையெல்லாம் சந்திக்கிறேன். இன்று உங்களுக்குக்கூட ஒரு வியப்பாக இருக்கும். என்ன கருணாநிதியை அழைத்து கூட்டம் போட்டால். அவர் தேர்தலைப் பற்றி பேசுவார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பார் என்று எண்ணினால், பெரியாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே! அண்ணாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே! என்று நீங்கள் கருதுவீர்களேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கருணாநிதியாரைப் பற்றிப் பேசினாலும், யாரைப்பற்றி புகழ்ந்துரைத் தாலும், யாரைப்பற்றி கவிதைப் பாடினாலும் அதற்கெல்லாம் மூலவித்தாக இருப்பது சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், – தந்தை பெரியாருடைய போதனைகள், அறிஞர் அண்ணாவினுடைய அறிவுரைகள் இவைகள் இல்லாமல் கருணாநிதியால் பேச முடியாது.
(6.4.2014 அன்று ஈரோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் –
முரசொலி 7.4.2014)