பாசிஸ்டுகளின் முடிவை பா.ஜ.க. உணரட்டும்!

மேற்குவங்கத்தில் மதம் மற்றும் இனவாத மொழிவாதப் பிரச்சினைகளைத் தூண்டி அரசியல் செய்துவரும் பாஜகவை அடியோடு அழித்தொழிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிசேக் பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆண்டுதோறும் நடைபெறும் வங்கமொழிக்காக போராடிய தியாகிகள் தினம் கொண்டாட்டத்தில், கட்சிப் பொதுச்செயலாளர் அபிஷேக்  கூறியதாவது:

‘‘2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை’ஜாய் பங்களா’ வங்காளத்திற்கு வெற்றி என்று முழக்கமிட வைப்பேன்’’ என்று சவால் விடுத்துள்ளார்.

“பாஜக பெங்காலி பேசும் மக்களை தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்க முயன்றால், நாங்கள் ஒரு படி மேலே சென்று, தேர்தலில் அவர்களைத் தோற்கடித்து, ஜனநாயக ரீதியாக அவர்களை ஒடுக்கி வைப்போம். பாஜக அங்கே ‘ஜெய் ஸ்றீ ராம்’ என்று சொல்லி வந்தார்கள், இங்கே வந்த பிறகு ‘ஜாய் மா காளி’, ‘ஜாய் மா துர்கா’ என்று சொல்கிறார்கள். நான் இன்று சொல்வதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்  – இன்னும் 10 மாதங்களில், 2026 தேர்தலுக்குப் பிறகு அவர்களை ‘ஜெய் வங்காளம்’ என்று சொல்ல வைப்பேன்.

2021 தேர்தல்களில் மக்கள் ‘கெலா ஹோபே’ (விளையாட்டு ஆரம்பம்) என்று கூறினர், அதை செய்து காட்டினர்; வரும் 2026 தேர்தல்களுக்கு தாமரை மலரை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று மக்கள் தெரிவிப்பார்கள்’’ என்றும் சூளுரைத்தார்.

தனது கட்சியின் அனைவரையும் உள்ளடக்கிய சித்தாந்தத்தை வலியுறுத்திப் பேசிய அபிஷேக், “நாங்கள் மத அல்லது வெறுப்பு அரசியலைச் செய்வதில்லை. எங்கள் மதத்தை வீட்டிற்குள் வைத்திருக்கிறோம். ஆனால் அரசியலில் எங்களுக்கு ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது  ‘‘மனிதநேயம் மக்களுக்குச் சேவை செய்வது”தான் அது என்றார்.

‘‘அசாமின் பாஜக தலைமையிலான முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வங்க மொழி பேசும் மக்களை வங்கதேசத்தவர் என்று முத்திரை குத்துகிறார் அவரது ‘பிரிவினைவாத கருத்துகளுக்கு’ எதிராக பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்  குற்றம் சாட்டினார் அபிசேக்.

“டில்லி வரை எதிரொலிக்கும் வகையில் ‘ஜாய் பங்களா’ என்று உரக்க முழக்கமிடுங்கள்” என்று தியாகிகள் தினப் பேரணியில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தபோது அபிசேக் கூறினார்.

ஒன்றிய அரசு தனது அதிகாரத்தின்கீழ் உள்ள அமைப்புகளைப் பயன்படுத்தி, வாக்காளர் மற்றும் எதிர்க் கட்சியினரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

“ஒருபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க பாஜக அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறது, மறுபுறம், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத்துறை என இரண்டு கிளைகள் பாஜகவிற்கு உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கவும், எதிர்க்கட்சி வாக்காளர்கள் மற்றும் நாட்டின் சாதாரண வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கவும் இந்த இரண்டு அமைப்புகளும் வேலை செய்கின்றன’’ என்று அபிசேக் பகிரங்கமாகக் குறை கூறினார்.

தமிழ்நாட்டில் எப்போதும் வீழாது எழுந்து நிற்கும் மாநில உணர்வும், மொழி உணர்வும் மதச் சார்பின்மைக் கொள்கை இப்போது வங்காளத்திலும் பீறிட்டுக் கிளம்பியுள்ளன.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று மிகவும் வெளிப்படையாக ஒன்றிய பிஜேபி ஆட்சியாளர்களும் பிஜேபி, சங்பரிவார்க் கூட்டத்தினரும் பச்சையாகப் பேசி வருகின்றனர்.

பேசட்டும் பேசட்டும்! அப்பொழுதுதான் இந்தியாவில் மாநில உணர்வுகள் பீறிட்டுக் கிளம்பும்!

இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற அரசமைப்புச் சட்ட உண்மையை தங்களின் மதவாத நெருப்பினில் கொளுத்துகிறார்கள். இதைவிடத் தற்கொலைக்குச் சமமானது வேறொன்றும் இருக்க முடியாது.

மொழி உணர்வைப் பேசினால் பிரிவினைவாதம் என்கிறார்கள். அந்த மொழி உணர்வு தூண்டப்படுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம்.

ஒன்றிய பிஜேபி அரசும், பிஜேபி சங்பரிவார்களும்தான் அந்தப் ‘பிரிவினைவாதத்திற்கான’ மூலவித்தாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பிஜேபி சிவசேனா கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மகாராட்டித்தில் இந்தியை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கப்பட்டு விட்டது. இதுவும் பிரிவினைவாதம்தான் என்று சொல்வார்களேயானால், தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்கிறார்கள் என்று பொருள்!

பிஜேபி நினைத்தால் ஒரு வகையில் பரிதாபமாகவே இருக்கிறது! மதப் போதை வெறியாகி வெடிக்கும்போது, இந்த நிலைக்கு ஆட்படுவது இயல்பே! பாசிஸ்டுகளும், நாஜிஸ்டுகளும் எப்படி அழித்தார்கள் என்பதை வரலாறு சொல்லும் அல்லவா!

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *