ஊன்றிப் படித்து உள்வாங்கி, பரப்புரை, தனிப்பட்ட உரையாடல் முதலிய எல்லா நிலைகளுக்கும் பயன்படும் அருமையான கட்டுரை இது. இதை நன்கு புரிதலோடு எளிய முறையில் விளங்கிக்கொள்ள, படிப்போர் பயன்பெறும் வகையில் நாம் சிறு சிறு தலைப்புகள் போட்டு விளக்கப்படுத்தியுள்ளோம்.
– ஆசிரியர்
உடலரசியல் என்றால் என்ன?
“முதலில் உடலரசியல் என்பதை எனது. புரிதலடிப்படையில் இங்கு வரையறுத்துக் கொள்வோம். உடலரசியல் என்பது ஓர் உடல் எப்படி அதிகார அமைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதிலிருந்து அவ்வுடலை எப்படி மீட்டெடுப்பது அல்லது தப்பிச் செல்வது என்பதையும் பேசுபொருளாகக் கொண்ட அரசியலே ஆகும். அதாவது உடலின் “இயல்புத்தன்மை” குறித்த அரசியல் எனலாம். உடலை “இயல்பானதாக” கட்டமைத்துள்ள அனைத்து துகள்கள் பற்றிய ஆய்வாகவும் அவற்றை தகர்த்து அதிகாரமற்ற வெளியாக உடலை கட்டமைப்பதுமே ஆகும். இவ்வரையறையில் உடலரசியில் பற்றிய 3 கூறுகளைக் காணலாம்.
- ஓர் உடலின் ‘இயல்பு’ என்கிற கட்டமைவுகளை படிப்பது
- அக்கட்டமைப்புகளை மீறிச்செல்ல முயலும் அவ்வுடலின் எத்தனிப்புகள் பற்றிப் படிப்பது.
- உடலை அதிகாரமற்ற வெளியாகக் கட்டமைப்பதற்கான முயற்சிகள்.
இதில் ஓர் உடலைக் கட்டமைப்பதில் அதன் குடும்பம் அதன் பாரம்பரியம், ஜாதிய, மத அமைப்பு மற்றும் வாழிடங்களின் கருத்தியல் ஆதிக்கம் முக்கியமானது” (2020, ஜமாலன், உடலரசியல், 123-124).
ஆக, உடலரசியல் இரண்டு அடிப்படைகளில் அணுகக் கூடியது. ஒன்று, நேர்மறையாக அதிகாரமற்ற சுதந்திரமான உடல்களைக் கட்டமைப்பது. அதாவது புரட்சிகரமான மாற்றுத் தன்னிலையைக் கொண்ட உடல்களை உருவாக்குவது. இரண்டு, எதிர்மறையாக அதிகாரத்திற்கான உடல்களைக் கட்டமைப்பது. அப்படியான ஓர் உடல் உருவாக்கத்தை நிகழ்த்துவதே ஆதிக்க அரசியலாக உள்ளது. அது ஜாதிய, இன, பாலின, மத உடல்கள் என்ற பெயரில் அதிகாரத்திற்கான, ஆதிக்கத்திற்கான ஆளும் கருத்தியலை ஏற்கும் அடையாள உடல்களைக் கட்டமைக்கிறது. அவ்வகையில், உடலரசியல் என்பது ஓர் உடல் என்னவாக உருவாக்கப்படுகிறது என்ற அரசியலைப் படிப்பது.
இயல்பு என்பது…
பொதுவாக இதனை ஒரு மாற்று அரசியலாக முன்வைக்கும்போது, ஓர் உடல் தனது ‘இயல்பாக’ உருவாக்கப்பட்டுள்ள அதிகாரவெளியைக் குறித்து ஓர்மை (பிரக்ஞை) அடைந்து தன்னை சுயத்திறனாய்வு (சுயவிமர்சனம்) செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபட்டு தப்பிச் செல்ல முனைவது. அதற்கு ஓர் உடல் சமூகத் தளத்தில் நிகழும் பல எதிர்ப்பியங்கங்கள் வழியாக தனது உடலை அதிகார எதிர்ப்பு நிலையில் கட்டமைக்க முனைய வேண்டும். ‘இயல்பு’ என்பது அதிகாரம் செலுத்தப்பட்டுள்ள ஓர் உடல், தனது அதிகார வெளியை அறியாதிருப்பதன் வெளிப்பாடே. இயல்பாக இருத்தல் என்பது ஓர் உடல் தன்னை அதிகாரத்திற்கான ஊடகமாக கட்டமைத்துக் கொள்வதே. இக்கட்டமைப்பு அரசியல் சார்ந்தும் அதற்கான கருத்தியல் சார்ந்தும் உருவமைக்கப்படுவது. இன்று இந்திய ஒன்றியத்தில் பரவிவரும் இந்துத்துவ கருத்தியலும் அதற்கான அரசியலுமே ‘இயல்பானது’ என்பதாக ‘இந்து’ மதம் என்ற பெயரில் பிராமண மேலாதிக்க ஸநாதன வருண உடல்களை உருவாக்குவதை வாசிக்க முனைவதே இங்கு எழுத்தாகி உள்ளது.
ஸநாதன வருண தர்மமும், உடலரசியலும்!
ஒரு சமூகத்தை முதன்முதலாக உடலோடு உருவகப்படுத்திய ஆரம்பநிலைப் பிரதி சுமார் கி.மு. 1500க்கு முந்தையதாகச் சொல்லப்படும் ருக் வேதத்தின் ‘புருஷ சூக்தம்’ எனப்படும் ஒரு பாடலே. ‘புருஷா’ என்கிற ஆதிப் புனித உடலின் வாயில் பிறந்தவன் பிராமணன், அதன் கைகளில் பிறந்தவன். சத்ரியன், அதன் தொடையில் பிறந்தவன் வைசியன், அதன் கால்களில் பிறந்தவன் சூத்ரன் என்கிற ஒரு பேர் உருவகமே உடலரசியலின் துவக்கப் புள்ளி (Harvey, 10). இந்திய அல்லது பாரத உடல்கள் பற்றிய இந்த வர்ணப் பிரிவினை ஓர் உளவியலாக கட்டமைந்த ஆழ்தள உடலரசியலே இன்றைக்கான இந்திய உடல்கள்.
வேறுபடுத்திக் காட்டும் பூணூல்
ஓர் உடல், ஒரு உடற்தொகுதியாக மாற்றப்படுவதற்கு, அவற்றை ஒரு குறிப்பிட்ட குறியமைப்பிற்குள் கொண்டுவர வேண்டும். அப்படியான ஒரு குறியமைப்பே வர்ணம். அதன் வழியாக உடல்மீது கருத்தியலான அடையாளங்கள் பொறிக்கப்படுகின்றன. சான்றாக மனு தர்மத்தில் வர்ண அடையாளத்தை வித்தியாசப்படுத்த பூணூல் எனப்படும் முப்புரிநூல் (மூன்றாகத் திரிக்கப்பட்ட நூல்) புனித நூலானது. முதல் மூன்று வர்ணங்களுக்கும் அணியப்பட வேண்டும் என்கிறது. பிராமணர்கள் பருத்தி நூலும், சத்திரியர்கள் சணல் நூலும், வைசியர்கள் கம்பளி நூலும் அணியவேண்டும் என்கிறது. (Laws of Manu. Ch.2.44) இப்படி தனியுடல்களைக் குழுவாக அடையாளப்படுத்துவதன் வழியாக ஓர் அமைப்பிற்குள் (இனம், மதம் என) கொண்டுவருவதும், அவற்றை ஒருமித்த உடல்களாக கட்டமைப்பதும் சாத்தியமாகிறது.” (2020,16).
அதாவது முப்புரி நூல் எனப்படும் பூணூல் என்பது ஒருவகையில் வர்ணத்தை அறிந்து கொள்வதற்கான குறியீடாக அதாவது ஒருகுலக் குறியாக அமைந்திருப்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. இந்நூல்கள் வழியாக வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் தங்களை ஒரு குழுவாக கருதுவதற்கான அடிப்படையையும் வழங்குகிறது. இது ஒரு வருணத்தின் தூய்மையைக் காக்கும் ஏற்பாடு.
பிற்காலங்களில் இது பல ஜாதிகளாகப் பிரிந்தபின், ஜாதிய அடையாளங்கள் குலக்குறிகளாகவும், அதற்கான குல தெய்வங்கள், வழிபாடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவை தனித்த குல அடையாளங்களை ஏற்பதாகிறது. இந்த அடையாளங்கள் வழியாக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு புத்தி உள்ளதான பொதுபுத்திக் கட்டமைக்கப்படுகிறது. காரணம் ஒவ்வொரு ஜாதியும் இச் சடங்குகள், வழிபாடுகள், தினவாழ்வின் பழக்க வழக்கங்கள் வழியாக தங்களை ஒரு குழுவாக மாற்றிக் கொள்கின்றன. இக்குழுக்கள் வெவ்வேறு நிலபரப்பில் வாழ்ந்தாலும், அதன் வாழ்நிலை இந்நடைமுறைகள் வழியாக ஒருபடித்தானதாக அமைகிறது. மார்க்ஸ் கூறியதைப்போல “வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது” என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கான வாழ்நிலையும் அதற்கான சிந்தனைகளை, உணர்வுகளை உடலரசியலாகக் கட்டமைக்கிறது.
ஜாதியப் புவியியல்
இந்திய ஒன்றியத்தில் குறிப்பாக தமிழ்நாட்டின் கிராம மற்றும் நகர அமைப்புகளின் புவியியல், ‘ஜாதியப் புவியியலாக’ (Caste Geography) அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாகத் தனி ஊர்களாகவும், தனித் தெருக்களாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். ஜாதிகள் குழுக்களாகக் கூடி வாழும் முறையைப் பின்பற்றுவைதையும், ஊர், பகுதிகளே ஜாதிய அடையாளமாகவும் இருக்கின்றன. “தீண்டாமை இங்கு தொடர்ந்து வருவதற்கான காரணங்களில் ஒன்று இந்திய கிராமப் புவியியல் அமைப்பு. இதில் “சேரி” என்பது ஊரின் விளிம்பிலும், உயர்த்தப்பட்ட ஜாதிகளின் தெரு ஜாதிவாரியாக அடுத்தும், பிராமணர்கள் ஊர் மய்யத்தில் உள்ள கோவிலைச் சுற்றியும் அமைந்துள்ளது” (2019, ஜமாலன், தலித் சினிமா, 185), ஊர் கோவிலை மய்யமாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கிறது.
தீண்டாமையைக் காக்கும் வாழிடங்கள்
கோயில் பண்டைய நிலவுடமை மன்னராட்சி சமூகங்களில் ஒரு பொருளாதார மய்யமாக விளங்கியுள்ளது. இன்றைய இந்தியா போன்ற அரை நிலவுடமை சமூகங்களில் கோவில் ஒரு பண்பாட்டு மய்யமாக மாறியுள்ளது. “பெருவாரியான ஊர் அமைப்புகளின் வாழிட அமைப்பு இதுதான். அரசு இப்புவியியல் அமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் இதுநாள்வரை ஈடுபடவில்லை. மாறாக, இந்த அமைப்பை அப்படியே காத்துவருகிறது. நகரங்களில்கூட, தீண்டப்படாதவர்கள் இணைந்து வாழும் சேரிகள், காலனிகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் திரளாக அமைக்கப்பட்டிருக்கிறது. (2019, ஜமாலன், தலித் சினிமா, 183)
இத்தகைய ஜாதியரீதியான தீண்டாமை பாராட்டும் புவியியல் வாழிட அமைப்பு உருவாக்கும் ஒருபடித்தான உணர்வுகளே ஜாதிகளின் தனித்துவமான உணர்வுகளாக மாறுகின்றன. இந்த வாழ்நிலையை அந்த ஜாதிகளின் பண்பாட்டுக் கூறுகள் உருவாக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அதுதான் “ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்துவமான ஜாதி புத்தி” உள்ளது என்கிற பொதுச் சொல்லாடலாக சமூகப் புழக்கத்தில் உள்ளது. இந்த “ஜாதி புத்தி என்பது ஜாதிகளின் உடலரசியல் சார்ந்து உருவாகும் ஒன்று.
மிஞ்சுவது ஸநாதன வருணப் பண்பாட்டு அம்சங்களே!
வாழ்நிலை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்போடு மட்டுமே உறவு கொண்டது அல்ல. அது ஓர் பண்பாட்டுச் சூழலால் உருவாகும் ஒன்று. அவ்வகையில் ஜாதியப் பண்பாடுகள் என்பதே ஜாதியத்தின் வாழ்நிலையை உருவாக்குவதாக உள்ளது. ஓர் ஊரில் பல ஜாதிகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தங்கள் ஜாதிகளுக்கான பண்பாட்டைப் பின்பற்றுவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஜாதியும் தனக்கான வாழ்நிலையைக் கொண்டதாக உள்ளது. அவ் வாழ்நிலைக்கான உடல்களைக் கட்டமைத்துக் கொள்கிறது. இப்படியாக ஜாதி ஓர் உடலரசியலாக மாறுகிறது.
இந்த ஜாதியை நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள், சடங்குகள், கடவுள்கள், வழிபாடுகள் என ஒரு பண்பாட்டுச் சூழலை ஸநாதன வருண தர்மம் தீர்மானிப்பதாக அமைவதன் வழியாக அனைத்து ஜாதி உடல்களையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துள்ளது. அதற்கு அது கண்டுபிடித்த ஒரு கருத்தியலே ‘இந்து மதம்’ என்பது. இன்றைய இந்து மதத்திலிருந்து இந்திய ஒன்றியத்தில் நிலவும் அனைத்து ஜாதிகளின் தனித்தன்மை வாய்ந்த சடங்குகள், வழிபாடுகள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கழித்துவிட்டால் மிஞ்சவது பிராமண ஸநாதன வருணப் பண்பாட்டு அம்சங்கள் மட்டுமே.
இந்திய ஒன்றியத்தின் காலனியம் உருவாக்கிய கலப்பின ஒட்டுயிர் நவீனத்துவம் (Hybrid Modernity) திணித்த நவீன வாழ்வில் இந்து மதம் ஒரு பொதுத் தொகுப்பாக அடையாளப்படுகிறது. அது பெரும்பான்மை மக்களின் இந்திய தேசியமாக அதாவது மதவாதத் தேசியமாக உருவாக்கம் பெறுகிறது. அதிலிருந்து ஊட்டம் பெற்ற பிராமண ஸநாதன வருணவாதிகள் அந்த தேசியத்தை இந்து மதம் என்பதிலிருந்து இந்து இனம் என்பதாக மாற்ற முயல்வதே இந்துத்துவா.
அவர்களது அறிக்கை உச்சாடனம் செய்யும் சமஸ்கிருத வார்த்தைகளான ராஷ்டீரியம்(தேசம்), தர்மம்(மதம்), சான்ஸ்கிருதி(கலாச்சராம் மற்றும் அரபி பார்சி சொல்லான ‘ஹிந்து’, ‘ஹிந்துஸ்தான்’ ஆகிய சொல்லாடல்கள் வழியாக கட்டமைக்கப்பட்டதே ‘தேசபக்தி’ என்பது.
இந்துத்துவக் கோட்பாட்டை உருவாக்கிய சாவர்க்கர் இந்து என்பதும் இந்துத்துவாவும் ஒன்றல்ல என்கிறார். ஹிட்லர். முசோலினி நாசிச, பாசிச இனவாதத்தால் கவரப்பட்ட அவர் இந்துத்துவா என்பதை ஓர் இனமாக வரையறுக்க முனைகிறார். அதற்காக மீச்சிறுபான்மையான (micro minorities) பார்ப்பன ஆரிய இனம் என்பதை மறைத்து இந்துத்துவா என்ற சொல்லை பயன்படுத்தி அதனை பெரும்பான்மையாகக் கட்டமைக்கிறார். இனம் என்பதற்கான வரலாற்றுரீதியான பொருளில் அது இனமல்ல.
ஆரியமே இந்துத்துவா!
ஆனால், ஒற்றைக் கலாச்சாரம், தர்மம், மதம் என்று வழக்கமான தந்திர வாதங்களை முன்வைக்கிறார்.அடிப்படையில் ஆரிய இனம் என்பதற்கான ஒரு புதிய பெயரிடலே இந்துத்துவா என்பது. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களை ஒற்றை இனமாக மாற்றும் முயற்சி, அதற்காகத்தான் ஒற்றை மொழியாக அதாவது தேசிய மொழியாக இந்தியையும், அதன் பின்னால் உள்ள சமஸ்கிருதத்தையும் இந்திய ஒன்றியத்தின் மொழியாக மாற்ற முயல்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் 40 ஆண்டுகள் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து, அதனை விரிவுபடுத்திய கோல்வால்கரின் இந்துத்துவா குறித்த வரையறை இந்திய ஒன்றியத்தில் வாழும் அனைவரும் பாரதவாசிகள் என்றும், அதனை இந்துத்துவா என்ற ஒற்றை பண்பாட்டுத் தேசியத்திற்குள் அடையாளப்படுத்த முனைவதுமே ஆகும்.
ஜாதியத்தை மறைக்கவே இந்துத்துவ அரசியல்!
இந்துத்துவா என்பது ஒரு வாழ்நிலை என்று சங் பரிவார்கள் கூறுவதன் பின்னணி இதுதான். ஆக, இந்துத்துவா அடிப்படையில் ஒரு இனவாத தேசியத்தை மத அடிப்படைவாத தேசியமாக மாற்றி, இந்திய ஒன்றியத்தின் பல்வேறு சமய மற்றும் பழங்குடி நம்பிக்கை சார்ந்த உடல்களை மத அடிப்படைவாத பாசிச உடல்களாக கட்டமைக்க முயலகிறது. அதற்காக, பல நூற்றாண்டுகளாகப் பிராமண வேத மதத்தின் ஸநாதன வருண அடிப்படையில் இந்திய உடல்களை அது ஜாதியமாக உருவாக்கி வைத்துள்ளது. இன்றைய பாஜகவும் அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ்.ம் இந்துத்துவாவை இந்து மக்களின் ஓர் உடலரசியலாகக் கடந்த நூறு ஆண்டுகளாக மாற்ற முயன்று வருகிறது. ஜாதியத்தை மறைக்க அது நிகழ்த்தும் நுட்பமான உடலரசியலே இந்துத்துவக் கருத்தியல். இதற்கான பண்பாட்டையும் அது சார்ந்த வாழ்நிலையையும் அது பழம் புராணங்கள் வழியாகக் கட்டமைக்கிறது. இறைசார் நம்பிக்கைகளை அது அரசியல் அதிகாரத்திற்கான உயிர் முதலீடுகளாக (bio-capital) மாற்ற முயல்கிறது. மொழி, கல்வி என அனைத்திலும் சமஸ்கிருதம், இந்தி என பிராமண ஸநாதன வருண தாமத்திற்கானதாக மாற்ற முயல்கிறது. மொழியும், கல்வியும் ஓர் உடலை ஒழுங்குறுத்தும் (disciplined) அடிப்படை உடலரசியல் காரணிகளாகும்.
இன்றைய இந்திய அரசியல் சூழலைப் பாரிய அரசியலின் வெளிப்பாடாக உள்ள ஜனநாயகம், கம்யூனிசம், பாசிசம் இவற்றைக் கொண்டு மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. மனித உடல்களை கட்டமைக்கும் அதாவது மனிதத் தன்னிலைகளாக மாற்றும் நுண்ணரசியலே இன்றைக்கான அரசியல். இந் நுண்ணரசியலை புரிந்துகொள்ள மார்க்சிய விமர்சனச் சிந்தனைத் துவங்கி இன்றைய பின் நவீனத்துவம் மற்றும் உடலரசியல் அறிவாய்வுமுறை வரை முக்கியமான பங்களிப்பை செய்யக் கூடியவை. அதன் அடிப்படையில் இன்றைய இந்தியாவின் ஆதிக்கக் கருத்தியலாக தன்னை வெளிப்படுத்திக் தொள்ளும் இந்துத்துவாவின் உடலரசியலையும், அதற்கான இயங்குபுலத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பையும் அதன் நடைமுறைகளையும் அறிந்து கொள்வது அவசியம்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் உடலரசியல்
ஆர்.எஸ்.எஸ். என்ற இன்றைய ஆளும் பாஜகவின் தாய்நிறுவனம், தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறது என்று மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு. அது இன்று தன்னை ஒரு தேசபக்தி இயக்கமாகக் காட்டிக் கொள்ள பல நாடகங்களை, நிகழ்வுகளை அரங்கேற்ற முனைகிறது. அது நிகழ்த்தும் விநாயகர் ஊர்வலம், பெண்களுக்கான பூஜைகள், பல்வேறு கோவில் திருவிழாக்கள், புகழ் வாய்ந்த கோவில்களைக் கைப்பற்ற முனைவது, அயோத்திப்போல திருப்பரங்குன்றம், காசி, மதுரா உள்ளிட்ட மாற்று மதத் தலங்களை இடிக்க முனைவது, கரசேவை மற்றும் கடவுள் சேவை, சிறுவாரி கிராமத் தெய்வங்களைப் பெருவாரி தெய்வங்களுடன் இணைப்பது. மதுரை முருகபகதர் மாநாடுகள் போன்ற பல மாநாடுகள் வழியாக சராசரி கடவுள் நம்பிக்கையாளர்களைத் திரட்டுவது. கும்பமேளா, மாமாங்கம் உள்ளிட்ட பல பெரும் நிகழ்வுகளை நிகழ்த்தி அதில் பல கோடி பக்தர்களைத் திரட்டுவது உள்ளிட்ட அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் திரட்டப்படும் எண்ணற்ற உடல்களை மதநம்பிக்கையின் திளைப்பில் உள்ள மகிழ்வுந்தத்தைப் பயன்படுத்தி, மதவெறிகொண்ட இன்ப நுகர்ச்சியாக மாற்றுவதே அதன் உடலரசியல்.
அதாவது, ஒருவர் இந்துவாக இருப்பதே பெருமிதம் என்ற உணர்வை இறைபக்தியைத் தாண்டி கட்டமைக்க முனைகிறது. உண்மையில் இந்து என்பதன் அடிப்படை என்ன என்பதைப் பற்றி மைசூர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை ரீடரும், சிந்தனையாளருமான முனைவர் கே. எஸ். பகவான் கூறுகிறார் “பிராமண தருமத்தின் குறிக்கோள் சூத்திரர்களை முற்றிலுமாக ஒடுக்கி அடக்கி ஆள்வதும் பிராமணர்களை சிறப்பானவர்களாகவும் மேம்பட்டவர்களாகவும் ஆக்குவதும்தான். இந்து தருமம் என்பது பிறரை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, தான் மட்டும் முன்னேறும் பிராமணர்களின் குயுக்தியே ஆகும்” (2005, பகவான், தமிழில் முனைவர் சிவ. சண்முகம், ஆதி சங்கரரின் மக்கள் விரோதக் கருத்துகள் 100). ஆக, இந்து என்பதன் அடிப்படை பிராமணராகத் தனது உடலை உருவமைத்துக் கொள்ளும் வேட்கையே! இந்த வேட்கை இறை பக்தி என்பதன் மூலமாக நுட்பமாகப் பிராமணர் அல்லாதவர்களின் உடலுக்குள் உருவமைக்கப்படுகிறது. பக்தி என்பது இறைநாட்டத்தைக் கொண்ட ஒரு வேட்கை. இந்த வேட்கையை மத உணர்வாகவும், பிற மத வெறுப்பாகவும் கட்டமைத்து பாசிச உடலாக வடிவமைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
குஜராத் சோதனைக் கூடம்
ஒருவர் கோவிலுக்குள் அல்லது இறை ஆலயத்திற்குள் செல்லும் போது அவரது உடல் அதற்கு ஏற்ப தகவமைக்கப்படுவதும், அந்த சூழலின் விதிமுறைக்கு ஆட்படுவதையும் உதாரணமாகச் சொல்லலாம். அந்த பாதிப்பு (Affect) அவரது தன்னுணர்வாக மாறி அவரது தன்னிலையை (subject) அதற்கு ஏற்ப உருவாக்கிவிடும். இந்த உருவாகுதல்கள் (becoming) ஒரு சாதாரண உடலை ஓர் அடையாள உடலாக மாற்றியமைத்து விடும். இம்மாற்றம் சராசரி இந்து உடலை இந்துத்துவ உடலாக உருவமைத்து விடுகிறது. அதாவது இறை நம்பிக்கைக் கொண்ட பாமர இந்து உடல்களை இந்துத்துவ பாசிச உடல்களாக மாற்றும் ஒரு வேதிவினையை நிகழ்த்துவதே இந்துத்துவ உடலரசியல். அதனால்தான் சோதனைக் கூடம் என்று குஜராத்தில் எண்ணற்ற இஸ்லாமியர்களைக் கொன்று கொலையின் பாசிச அழகியலை இந்திய அளவில் மேட்டுக்குடி இந்துக்களின் உடலுக்குள் ஒரு திளைப்பாக, களிப்பாக மாற்றியுள்ளார்கள். பாஜகவின் வளர்ச்சியை ஒரு சராசரி அரசியல் கட்சியின் வளர்ச்சியாகப் பார்க்கக் கூடாது. அதன் அடிப்படையே பாசிச உடல்களை உருவாக்கும் உடலரசியல்தான்!
இத்தகைய இந்துத்துவ உடல்களை உருவாக்க அது முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் முழுமையாகப் பொய்யும், புரட்டும், வரலாற்றுத் திரிபும், புராணக் கதையாடலும் கொண்டவை. பொய், இரட்டை நாக்கு, பலகுரலில் பேசுவது என்பதே அதன் மூல உத்தி. அதனை அளித்தவரே அதன் கருத்தியல் தந்தையான சாவர்க்கர். இரட்டை நாக்கு, சுயநலம் குறிப்பாக பாரப்பனிய நலமே அதன் நோக்கம். பெரியார் கூறியதைப்போல் ‘பலித்ததுவரை பார்ப்பனியம்’ என்பதே அவர்களது அரசியல். அதனால்தான் அந்த அமைப்பு தன்னை ஓரிடத்தில் கலாச்சார அமைப்பு என்கிறது. மற்றொரு இடத்தில் சேவைக்கான தேசபக்தி அமைப்பு என்கிறது. ஆனால், தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இன்றைய இந்திய ஒன்றியத்தின் அதிகாரமிக்க அமைப்பாக மாறியுள்ளது. மக்கள் நலப்பணியே நோக்கம் என்று கூறிக் கொள்ளும். ஆனால் வருமானவரியை ஏய்க்க தன்னை ‘மதம் சார்ந்த அறக்கட்டளை அல்ல; ஓர் கலாச்சார அரசியல் இயக்கம்’ என்று வாதாடும். இந்துத்துவா என்பது ஓர் பாசிச உடலரசியல் வாழ்நிலை. அதை உருவாக்க அதிகாரம் தேவை. அதற்கான அமைப்பு என்பதால் தன்னை அரசியல் அமைப்பாக வடிவமைத்துக் கொண்டுள்ளது. அது பல்வேறு தோற்றங்களைத் தருவது மட்டுமல்ல, பல்வேறு வடிவங்களையும் கொண்டதாக உள்ளது.
நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’,
ஆகஸ்ட் 2025