திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினர் திருமணத்திற்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க ஆணை மாநில கொள்கையை வெளியிட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பாராட்டு

2 Min Read

சென்னை, ஆக. 6-  திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினரின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கையர்

எல்ஜிபிடிக்யூஅய்ஏ ப்ளஸ் (LGBTQIA +) சமுதாயத்தைச் சேர்ந்த திருநங்கையர், மருவிய பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள், பால் புதுமையினரின் சட்டப்பூர்வ உரிமைகள், பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டை சட்டப் பூர்வமாக நிலைநாட்டக்கோரி சுஷ்மா மற்றும் சீமா அகர்வால் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக ஏற்கெனவே நடந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் வதனா பாஸ்கர், எஸ்.மனுராஜ் ஆகியோரும் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் ஆர்.முனியப்பராஜ், அரசு வழக்குரைஞர் யு.பரணிதரன், மூத்த வழக்குரைஞர்கள் சிறீராம் பஞ்சு, ஜி.சங்கரன், ஒன்றிய அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் பிரபு மனோகர் மற்றும் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருநங்கையர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அண்மையில் தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025-அய் வெளியிட்டுள்ளதாகவும், இந்த கொள்கை கடந்த ஜூலை 31 முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித் துள்ள விரிவான உத்தரவில் கூறியிருப்ப தாவது:

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு வரைவு விதிகளின்படி திருநங்கையர்களுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதனை வெளியிட்ட 7ஆவது மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசை மனமார பாராட்டுகிறேன்.

இந்த கொள்கையின் பலனாக திருநங்கைகள் மற்றும் தன்பாலினத்தவர்களின் சமூக வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடையும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதி்த்துவ உரிமை அளிக்கப் படும் எனக்கூறப்பட்டுள்ள நிலையில் கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த கொள்கையை திறம்பட செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களில் குறைந்த பட்சம் ஒரு திருநங்கையர் அல்லது இந்த சமுதாய நபர்களின் பிரதி நிதித்துவம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதேபோல வாரிசுரிமைச் சட்டங்கள் எதுவும் தற்போது இந்த சமுதாயத்தவர்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்கவில்லை.

எனவே, அதுதொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மாநில அரசு திருநங்கையர் மற்றும் இடைபாலின நபர்களுக்கான கொள்கையை வெளியிட்டுள்ள நிலையில், “LGBQA+’ நபர் களுக்கான கொள்கையையும் விரைவில் வெளியிட வேண்டும்.

அதேபோல பள்ளிப்படிப்பை நிறுத்தும் பாலினத்துடன் இணங்காத நபர்களைக் கண்டறிந்து அவர்கள் படிப்பை முடிக்க உதவும் மாவட்ட அளவிலான குழுவின் திட்டம் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க இந்த கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் கூடுதல் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வசதியாக விசாரணையை செப். 15க்கு தள்ளி வைக்கிறேன். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *