டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு 67 லட்சம் முட்டை ஏற்றுமதி நிறுத்தம்

3 Min Read

நாமக்கல், ஆக. 6- நாமக்கல் மண்டலத்தை உள்ளடக்கிய நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் முழுமைக்கும் தினமும் லாரிகளில் நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதைத் தவிர ஓமன், கத்தார், துபாய், பக்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சராசரியாக தினமும் 30 முதல் 40 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 67 லட்சம் நாமக்கல் முட்டைகள் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து ஏற்றுமதி வாய்ப்பு, அமெரிக்காவில் இருந்து கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல், இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, அமெரிக்க அரசு 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. 25 சதவீத வரி விதிப்பால், இந்திய முட்டைகளை வாங்க அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் எதாவது ஒரு பிரச்சினை காரணமாக முட்டை ஏற்றுமதி குறைந்து வருவதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கனடாவில் ஆச்சரியமான சம்பவம்

பறவையின் அலகிலிருந்து விழுந்த மீனால் காட்டுத்தீ

பிரிட்டிஷ் கொலம்பியா, ஆக. 6-  கனடாவில், ஒரு பறவை தன் அலகில் கொண்டு சென்ற மீன், மின் கம்பியின் மீது விழுந்ததால் காட்டுத்தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஆஷ்க்ரோஃப்ட் (Ashcroft) நகரில் இந்த விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்தபோது ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஒரு ‘ஆஸ்பிரே’ (Osprey) வகை பறவை, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து மீனை எடுத்துக்கொண்டு பறந்துள்ளது. அப்போது அந்த மீன் பறவையின் அலகிலிருந்து தவறி, மின்சாரக் கம்பி மீது விழுந்துள்ளது. மீன் மின் கம்பியின் மீது விழுந்ததில் தீப்பொறி ஏற்பட்டு, அருகே இருந்த மரங்களில் காட்டுத்தீ பரவியதுடன், மின்தடையும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆஷ்க்ரோஃப்ட் தீயணைப்புத் துறை தங்கள் Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த விபத்தில் பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து சாம்பலாகின.

அமெரிக்க விசாவிற்கு உத்தரவாதத் தொகை:
விதிமீறலைக் கட்டுப்படுத்த புதிய முன்னோடித் திட்டம்

வாசிங்டன், ஆக. 6- அமெரிக்காவிற்குச் செல்வதற்கான சில வகை பயண மற்றும் வர்த்தக விசாக்களுக்கு, ₹12.5 லட்சம் (சுமார் $15,000) வரை உத்தரவாதத் தொகையாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. விசா காலா வதியான பிறகும் நாட்டிலேயே தங்கும் பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முன்னோடித் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

அதிக எண்ணிக்கையில் விசா காலாவதியான பிறகும் தங்கும் நபர்கள் வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த புதிய நிபந்தனை விதிக்கப்படலாம். ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டம், சுமார் ஓராண்டுக்கு நீடிக்கும்.

விசாக் காலம் முடிவதற்குள் சொந்த நாட்டுக்குத் திரும்புபவர்களுக்கு உத்தரவாதத் தொகை முழுவதுமாகத் திருப்பித் தரப்படும். இந்த புதிய திட்டத்தால் எத்தனைப் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தால் துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *