சென்னை, ஆக.6 உடல் உறுப்புக் கொடையில் பெறுவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
உடல் உறுப்புக் கொடை
மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு கொடை செய்தவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் அரசு மரியாதை, உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை திட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு புகழாரம் சூட்டியிருக்கிறது.
உடல் உறுப்பு கொடையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் முதல் மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு கொடை பெறப்படும் நபர்களின் உடலுக்கு அவர்களின் இறுதி நிகழ்வுகளின் போது அரசு மரியாதை அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்கு கிடைத்த வரவேற்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் உறுப்பு கொடை மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகள் அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார சேவைகள் இயக்குநரகம் பாராட்டியுள்ளது.
ஒன்றிய அரசு பாராட்டு
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மக்களின் மனதை ஈர்த்து உள்ளதால் 2024இல் அதிக அளவில் உடல் உறுப்புகளை கொடையாக பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்திருக்கிறது. 2024இல் மொத்தம் 268 நன்கொடையாளர்களிடம் இருந்து 1,500 உடலுறுப்புகள் மற்றும் திசுக்கள் கொடையாக பெறப்பட்டுள்ளதாகவும், பிறமாநிலங்களுடன் ஒப்பீடுகையில் இது அதிகபட்ச எண்ணிக்கை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உறுப்பு கொடை செயல் திறனில் தமிழ்நாடு அரசு மிகபெரிய அளவில், அதாவது 664 விழுக்காடு உயர்வை எட்டி இருப்பதாகவும் ஒன்றிய அரசு புகழாரம் சூட்டியிருக்கிறது.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதாவை
குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்ஆர்.என்.ரவி!
சென்னை, ஆக.6 கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். துணைவேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணம்காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியது. கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
கலைஞர் பெயரில் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதலமைச்சரை நியமிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. 3 மாதங்களுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. கலைஞர் பல்கலை. மசோதா நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பி வைத்துள்ளார். குடியரசுத் தலைவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான முறையீடு செய்வதற்காகவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சிறைச்சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும்
170 இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள்
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஆக.6 இந்திய சிறைச்சாலைகளில் 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள் பதிவாகின்றன .
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட கடைசி சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கையில்இது தெரியவந்துள்ளது.
2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சிறையில் 1521 பேர் மர்மமான சூழ்நிலையில் இறந்தனர். இதில் 70 சதவீதம் தற்கொலைகள். அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் 231 பேர் இறந்துள்ளனர். இதில் 102 தற்கொலைகள்.
அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
அதேபோல் 2022 இல்பதிவு செய்யப்பட்ட 159 இயற்கைக்கு மாறான சிறப்புகளில், அதில் 119 தற்கொலைகள் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கைதிகளின் மனநலப் பிரச்சினைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்றும், சிறைகளில் போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.