தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை ஊட்டியது
பின்னாளில் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பிறகு, தமிழ் மொழியில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அன்றாடப் புழக்கத்தில் இருந்த சில சொற்களை மாற்றி, அவற்றை மேலும் கண்ணிய மானதாகவும், தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் மாற்றியது – தமிழ்மக்களின் தன்னம்பிக்கையையும், தனித்தன்மையையும் நிலைநாட்டும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ் மொழியில் புழக்கத்தில் இருந்த சில சொற்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த மாற்றங்கள் வெறும் சொல்லாக்கங்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் நிலவி வந்த சில பாகுபாடுகளையும், இழிவான கருத்தியல்களையும் நீக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன. இதன் மூலம் தமிழ் மொழி மேலும் செம்மைப்படுத்தப்பட்டு, அதன் பயன்பாடு கண்ணியம் மிக்கதாக மாற்றப்பட்டது.
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்மொழி எழுச்சிமிகுப் பெரும் வீச்சைப் பெற்றது.
‘நமஸ்காரம்’ என்பது வடமொழிச் சொல். திராவிட இயக்கம் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்ததால், தூய தமிழ்ச் சொல்லான ‘வணக்கம்’ புழக்கத்திற்கு வந்தது. இது தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் ஒரு மாற்றமாக அமைந்தது. குறிப்பாக பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலைநிறுத்த இந்த நமஸ்காரம் என்ற துவக்கம் பெரும் பங்கு வகித்தது; அதனை வணக்கம் என்று மாற்றி பார்ப்பனக்கூட்டத்தின் மக்களை ஏமாற்றும் சங்கிலித் தொடரின் முதல் கண்ணியை அறுத்தெறிந்தது திராவிடம்.
‘சாதம்’ என்ற சொல் வடமொழி மூலத்தைக் கொண்டது. ‘உணவு’ என்பது பொதுவான பொருளைக் குறிக்கும். ‘சோறு’ என்பது தமிழர்களின் மரபான உணவுப் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய, தூய தமிழ்ச் சொல்லாகும். இதனால் ‘சோறு’ என்பது அன்றாடப் பயன்பாட்டில் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு வந்தது.
‘இலவசம்’ என்ற சொல் வடமொழிச் சொல் என்பதால், ‘கட்டணமில்லா’ என்ற தமிழ்ச் சொற் றொடர் புழக்கத்திற்கு வந்தது.
பாலினச் சிறுபான்மையினரைக் இழிவாகக் குறிக்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சொற்களை பயன்படுத்தி வந்தனர். திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கையின் ஒரு பகுதியாக, கலைஞர் இவர்களைக் கண்ணியத்துடன் குறிக்க ‘திருநங்கை’, ‘திருநம்பி’, ‘மூன்றாம் பாலினத்தவர்’ போன்ற சொற்களை அறிமுகப்படுத்தினார்
‘நொண்டி’, ‘செவிடு’, ‘குருடு’ ‘ஊமை’ போன்ற சொற்கள் உடல் குறைபாடு உடையவர்களை இழிவாகக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அவர்களுக்குக் கண்ணியம் சேர்க்கும் விதமாக, ‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல் கலைஞரால் உருவாக்கப்பட்டு, பரவலாகப் புழக்கத்திற்கு வந்தது. இது அவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் ஒரு முற்போக்கான பார்வையை வெளிப்படுத்தியது. அரசிதழிலும் பதிவேற்றப்பட்டது.
தற்போது சட்டபூர்வமாகவும், சமூக அளவிலும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது மாபெரும் சமூக மாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
இந்த வரிசையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மனிதநேயப் பார்வையில் உருவான மருத்துவப் பயனாளி என்ற சொல். நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனை வரவேற்று இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
‘நோயாளி’ என்ற சொல் ஒருவரைக் ‘குறைபாடு உடையவர்’ அல்லது ‘நோயால் பீடிக்கப்பட்டவர்’ என்ற பொருளில் மட்டுமே குறிக்கிறது. அது அவர்களைத் தனிமைப்படுத்திக் காட்டுவதுடன் மனப் புண்ணையும் ஏற்படுத்துவதாகும். இதற்குப் பதிலாக, ஒரு மருத்துவ சேவையைப் பெறுபவரை ‘மருத்துவப் பயனாளி’ என்று அழைப்பது, அவர்களுக்குக் கண்ணியம் சேர்ப்பதுடன், மருத்துவச் சேவையின் நோக்கம் சார்ந்து அவர்களைப் பார்ப்பதாகவும் அமையும். இது ஒரு நேர்மறையான மாற்றமாக அமையும்.
தந்தை பெரியார் தமிழில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கினார். திராவிட இயக்கம் தமிழை வெறும் ஒரு கருவியாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான போர்க் கருவியாகவும், தமிழ் மக்களின் அடையாளமாகவும் பயன்படுத்தியது. அது இன்றும் தொடர்கிறது.
தலைவர் ஆசிரியர் தமிழ் மொழிக்குப் பல அருஞ் சொற்களைத் தந்துள்ளார். அவற்றுள் சில, ‘மானமிகு’, ‘தொண்டறம்’, இணையர், ‘நினைவிடம்’, ‘ஒத்திசைவுப் பட்டியல்’ (Concurrent List), வாழ்க்கை இணை நல ஒப்பந்தம் போன்றவையாகும். அதில் இப்பொழுது கூறியதுதான் ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ என்பதாகும்.
தமிழுக்கு என்ன செய்தார் பெரியாரும் – திராவிட இயக்கமும் என்பவர்கள் சிந்திக்கட்டும்!
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்தாரே தந்தை பெரியார் – இதற்கு ஈடு இணை ஏது?
தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளில் தமிழுக்கு இடமில்லை என்ற இழிவு நிலை; தமிழனுக்கு அவன் தாய்மொழியில் பெயரில்லை; அதிலும் பெரியதோர் மறுமலர்ச்சியை உண்டாக்கியது தன்மான இயக்கமாம் திராவிடர் இயக்கமே!
தமிழர்களின் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப்பட்டு விட்டன. இதிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தச் சிந்தனை மேலோங்கி சட்ட ரீதியாக மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழுக்கு என்ன செய்தது திராவிடர் இயக்கம் என்று அரட்டை அடிப்போரின் வாயை அடைக்க வேண்டும். ‘திராவிட மாடல்’ அரசு இதிலும் மாற்றத்தை மேலும் மேலும் கொண்டு வரும் என்பதில் அய்யமில்லை.