ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக, டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் (ஆகஸ்ட் 04) சிகிச்சை பலன் அளிக்காமல், சிபு சோரன் காலமானார். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் இரங்கல்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனத் தலைவரும், ஜார்க்கண்டின் மேனாள் முதலமைச்சரும், சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான பழங்குடி தலைவர்களில் ஒருவருமான மதிப்பிற்குரிய திரு. சிபு சோரன் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
சிபு சோரனின் வாழ்க்கை, சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பையும், சமூக நீதி மீதான அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் கொண்டிருந்தது.
ஜார்க்கண்ட் மாநில உருவாக்க இயக்கத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவரான அவர், பல தசாப்த கால ஆதிவாசி உரிமைக் கோரிக்கைகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றி, ஒரு புதிய மாநிலம் உருவாக வழிவகுத்தார்.
ஒரு உயர்ந்த தலைவரையும், வாழ்நாள் முழுவதும் போராளியாகவும் இருந்த அவரை இழந்து வாடும் ஜார்க்கண்ட் மக்களுக்கும், மாண்புமிகு திரு. ஹேமந்த் சோரன் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று இரங்கல் செய்தியாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்