சென்னை, ஆக. 4- அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
திறன் இயக்கப் பயிற்சி
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திறன் இயக்கம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். திறன் இயக்க மாணவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில், மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்து பயிற்சி தரவேண்டும். வகுப்புகளுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்கள் பயிற்றுவிக்க வேண்டும்.
இதுதவிர வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, அந்த வாரத்தில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு தேர்வுகளை நடத்த வேண்டும். ஒரு பாடத்தலைப்பு முடிந்த பின்பு அதற்கான பயிற்சித்தாள் செய்வதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்படும். மேலும், இதுசார்ந்த வழிமுறைகளை பின்பற்றி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கு
மாற்றுத்திறனாளிகள்
நன்றி தெரிவித்து வரவேற்பு
கந்தர்வகோட்டை, ஆக. 4- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல்அரசு!
எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்துடன், மக்கள் நல்வாழ்வுத் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியாவில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ (இரண்டு கோடி பயனாளிகள்) மற்றும் நம்மைக் காக்கும் 48 திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவ சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 2, 2025 முதல் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும் சேவைகள் இலவச கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ சேவைகள் பொது மருத்துவ வல்லுநர் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே எக்கோகார்டியோகிராம் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் உள்ளிட்ட இந்த பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
சென்னையில் 15 மண்டலங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது.
முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலைக்குள் வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும். சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
முகாமில் பெயா் பதிவு செய்பவா், பிற்காலங்களில் தமிழ்நாட்டில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும், அவரது உடல்நல விவரங்களைக் கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயா்சிறப்பு மருத்துவ வல்லுநர்களும், 5 வகையான இந்திய மருத்துவ முறை வல்லுநர்களும் இடம் பெறுவா்.
மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.