சமூகநீதியைக் காத்திட அணி வகுப்போம் – போராடுவோம்

7 Min Read

 அய்.அய்.டி.களில் சேர வேண்டுமானால் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்
 ஆனால் குருகுலத்தில் படித்தோர் நேரடியாக அய்.அய்.டி.யில் சேரலாமாம்
 தகுதி திறமைப் பேச்சு என்னாயிற்று?  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம் அரங்கேறுகிறது
பார்ப்பனர்கள் மட்டுமே அய்.அய்.டி.யில்
நேரடியாக நுழைய சதித் திட்டம்! சதித் திட்டம்!!
சமூகநீதியைக் காத்திட அணி வகுப்போம் – போராடுவோம்
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

அய்.அய்.டி.யில் சேர வேண்டுமானால் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்; ஆனால் குருகுலத்தில் படித்தோர் நேரிடையாக அய்.அய்.டி.யில் சேரலாம் என்று ஒன்றிய பிஜேபி அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலும் பார்ப்பனர்களே அய்.அய்.டி.யில் சேர வகுக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் இந்தக் கொல்லைப்புற கண்ணிவெடியை முறியடிக்க அணி வகுப்போம் – போராடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  முக்கிய அறிக்கை வருமாறு:

Contents

தற்போது,  தேசியக் கல்விக் கொள்கை-2020 என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் திணிப்புகளும், கல்விச் சிதைப்பு முயற்சிகளும் நாளும் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றன.

கல்வியைக் காவி மயமாக்கவும், சமூகநீதியை ஒழிக்கவும் தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்!.

அவற்றுள் அண்மையில் வெளிவந்துள்ள அதிர்ச்சிக்குரிய செய்தி,  அய்.அய்.டி.க்குள் கொல்லைப்புற வாயிலாகவும் ‘ஆரியம்’ நுழைவதற்கான ஏற்பாட்டை முழுமைப்படுத்துகிறது.

அய்.அய்.டி.கள் பல காலமாகவே சமூகநீதி மறுக்கப்பட்ட ‘அக்கிரகாரங்களாகவே’ செயல்பட்டு வந்தன! 2006 முதல், உயர்கல்வியிலும் இட ஒதுக்கீடு சட்ட பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட பிறகுதான், சமூகநீதியின் கதவுகள் ஓரளவு திறக்கப்பட்டன. ஆனாலும், முழுமை யாக அய்.அய்.டி.களில் இடஒதுக்கீட்டு அளவுகளின் படி, இடங்கள் ஒதுக்காமல் மறுப்பதும், வாய்ப்பு கிடைத்துப் படிப்பவர்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குவதும், ஒடுக்கப்பட்டோரின் தற்கொலைகளும் தொடர் கதையாயிருக்கின்றன.

ஒன்றிய அரசுத் துறைகளில்
சமூகநீதிக் கதவுகள் திறக்கப்பட்டது 2006இல்

அய்.அய்.டி.களுக்குள் படிப்பில் சேருவதற்கு, ஜே.இ.இ.  (JEE) எனப்படும் நுழைவுத் தேர்வுகளிலேயே JEE-Advanced என்னும் சிறப்பு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மய்யங்களைப் போல், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மய்யங்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகம் நடைபெறும் இடங்கள்! இப்படித் தான் ஏழை, எளிய மக்கள் நுழைய முடியா வண்ணம் அய்.அய்.டி.யின் கதவுகள் இறுக்கிச் சாத்தப்பட்டிருக்கின்றன. அதன் ‘நூல் அளவு’ இடைவெளியில் பார்ப்பனர்கள் மட்டும் நுழைந்து கொண்டேயிருப்பர்.

கொல்லைப்புற வழியாக அய்.அய்.டி.களில் நுழைய ஏற்பாடு!

இந்நிலையில்தான், அய்.அய்.டி.க்களுக்குள் நுழைவ தற்கான கொல்லைப்புற வழியைத் திறந்துவிட்டிருக்கிறது பா.ஜ.க. அரசு!

“பாரம்பரிய முறைப்படி குருகுலங்களின் வழியாகவோ, குருவிடம் நேரடியாகப் பாடம் பயின்றவர்களோ, ‘சேதுபந்த வித்வான் யோஜனா’ என்னும் (ஆர்.எஸ்.எஸ்.) திட்டத்தின் படி அய்.அய்.டி.களில் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ”

‘சேதுபந்த வித்வான் யோஜனா’வின் படி, ’பாரம்பரிய முறைப்படி’ குருகுலங்களிலோ, அல்லது ஒரு குருவிடமோ 5 ஆண்டுகள் சமஸ்கிருதப் பாடங்களைப் படித்த 32 வயதுக்குட்பட்டோர் இதில் நேரடியாக இணையலாம்; முதுநிலைப் படிப்புகளில் இணைவோருக்குக் கல்வி ஊக்கத் தொகையாக மாதம் ரூ.40000-மும், ஆராய்ச்சி களுக்காக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்; பி.எச்.டி ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்வோருக்கு கல்வி ஊக்கத் தொகையாக மாதம் ரூ.65000-மும், ஆராய்ச்சிக்காக ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

இந்தச் சமஸ்கிருதப் பெயரிலேயே  அது யாருக்குப் பயன்படப் போகிறது, எப்படிப் பயன்படும் என்பது புரியவில்லையா? எல்லாம் சமஸ்கிருத மயமாக்கல் என்பதற்கு இந்தப் பெயரே சான்று அல்லவா?

ஆயுர்வேதம் முதல் அறிவாற்றல் அறிவியல் (!) வரை, கட்டடக்கலை முதல் அரசியல் கோட்பாடு வரை, இலக்கணம் முதல் ‘மூலோபாய’ ஆய்வுகள் வரை, நிகழ்த்துக் கலைகள் முதல் வேதக் கணிதம், இயற்பியல், சுகாதார அறிவியல் வரையிலான 18 துறையிடைக் களங்களில் (Interdisciplinary fields) படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகுதான்…

மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகமும் (Central Sanskrit University), ஒன்றிய அரசு கல்வித் துறையின் ‘இந்திய அறிவு அமைப்புகள்’ பிரிவும் (Indian Knowledge Systems Division) இதனை ஒருங்கிணைக்குமாம்!

‘மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம்’ என்பது இதற்கு முன்பு ‘ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான்’ என்ற பெயரில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுவந்தது. 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான், இதற்கு மத்தியப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கி மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் என்னும் பெயர் பெற்றது.

இதே போல ‘சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்டிரீய சமஸ்கிருத வித்யாபீத்’ என்ற பெயரில் இருந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ‘சிறீ லால்பகதூர் சாஸ்திரி சமஸ்கிருதப் பல்கலைக்கழக’மாகவும்,  திருப்பதியில் ‘ராஷ்டிரீய சமஸ்கிருத வித்யாபீத்’ என்ற பெயரில் இயங்கி வந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ‘தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழக’மாகவும், ஆக மொத்தம் மூன்று சமஸ்கிருத நிறுவனங்களும் “மத்தியப் பல்கலைக்கழகங்கள்” (Central Universities) என்னும் தகுதிக்குரியவையாக உயர்த்தப்பட்டன.

இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதி கூடுதலாக ஒதுக்கப்படும். மக்களின் வரிப் பணம் சமஸ்கிருத வளர்ச்சிக்கு எப்படி கொட்டி வீணடிக்கப்படுகின்றது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள் அல்லவா?

இவற்றில் ‘மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின்’ வழியாகத் தான் இப்போது அய்.அய்.டி.களுக்குக் குறுக்குவழி – இணைப்புப் பாலம் – போடப்பட்டுள்ளது.

‘அயல்நாட்டு முறையிலான கல்வி முறை வேண்டாம்’ என்று சொல்லித்தானே, இவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்) முறைசாரா ‘பாரம்பரிய  கல்வி முறை’ என்று குருகுலக் கல்வியைப் பரிந்துரைக்கின்றனர் – தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு அங்கிருந்து இங்கு தாவுவதற்கான ரகசியம் புரிகிறதா?

பாரம்பரிய கல்வி முறைக்கு அங்கீகாரம் உண்டா?

இவர்கள் போற்றிப் புகழும் ‘பாரம்பரிய கல்வி முறை’ என்பதற்கு உலக நாடுகளில் எந்த அங்கீகாரமும் எங்கும் கிடைக்காது; எந்த நாடும் இவர்களைக் கணக்கில் கொள்ளாது. அதனால் இப்போது உலகப் புகழ்பெற்ற அய்.அய்.டிக்களுக்குள் நுழைவதன் வாயிலாக, தங்கள் ‘போஜனா’ பாதையை பெருக்கிக் கொள்ளும் ‘யோஜனா’ தான் இந்த சேதுபந்த வித்வான் யோஜனா!

இதற்கான விதை இப்போதல்ல, 2018-ஆம் ஆண்டிலேயே போடப்பட்டுவிட்டது. குருகுல முறையைப் புதுப்பிக்கும் வகையில், வேத பாட சாலைகளிலும், குருகுலங்களிலும் பயின்றோர் 15 வயது நிரம்பிவிட்டால், தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கிக் கொண்டு, அதன் மூலமாகப் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நேரடியாக ‘வேத அத்யாயனம்’, ‘பாரத தரிசனம்’, ‘சமஸ்கிருத இலக்கணம்’, ‘பாஷை’ ஆகியவற்றில், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ‘பேருக்கு’ நடத்தும் தேர்வுகளில் 33% மதிப்பெண் மட்டுமே பெற்றாலும் தேர்ச்சி பெற்றவர்களாவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. (‘தகுதி-திறமையின் ஏகபோகிகளாகத்’ தங்களைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பன மாணவர்களுக்கு, சமஸ்கிருதத்திலேயே 33% மதிப்பெண் போதுமாம்! அதுவே தகுதியாம்!)

இந்தச் சதி,  ‘‘இந்தியக் கல்வியை மடைமாற்றி, ‘பாரம்பரியக் கல்வி’ என்ற பெயரில் மீண்டும் குருகுலக் கல்வியை எங்கும் திணித்து, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமுதாய மாணவர்களின் கல்வி வளர்ச்சியைப் பறிக்கும் சூழ்ச்சி’’ என்று அப்போதே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் அப்போதைய செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிகளின் கட்சிக் கூட்டத்தில் (22.5.2018)  திராவிடர் கழகம்  அளித்த தீர்மானம், கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளாலும் ஏற்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதனையொட்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை மக்களுக்கு விளக்கி, நாம் ஆற்றிய உரை தனி வெளியீடாகவும் வந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸால் முன்மொழியப்பட்ட திட்டம்

ஆனாலும், தொடர்ந்து அதே பாதையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு இன்றும் தனது முதலைப் பிடிவாதத்தோடு செயல்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையின் லட்சணம் இதுதான்!

மாணவர்களே,

பெற்றோர்களே,

மக்களே,

கல்வியாளர்களே,

ஊடகவியலாளர்களே புரிந்துகொள்ளுங்கள்!

ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ (Organiser) இத்தகைய திட்டத்தைத் தொடர்ந்து பரிந்துரைத்து வந்திருக்கிறது.

அதிகாரப் பூர்வமாக ஒன்றிய அரசிடமிருந்தும், மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்திடமிருந்தும் அறிவிப்பு வருவதற்கு முன்பே, அதிகாரப்பூர்வமற்ற ஒன்றிய அரசு கெஜட்டாகச் செயல்பட்டு வரும் ஆர்கனைசர் (Organiser) இணையதளத்தில் செய்தி (ஜூலை1, 2025) வந்துவிட்டது. அதன் பின்னர் தான் அரசின் அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் (ஜூலை 14, 2025) வெளிவருகின்றன.

பிற மொழிகளுக்குப் பாரம்பரியமே கிடையாதா?

‘பாரம்பரியக் கல்வி’ என்கிறார்களே, இந்தப் பாரம்பரியக் கல்வியில் பிற மொழிகள் எதுவும் வராதா? பிற மொழிகளுக்கென்று பாரம்பரியமே கிடையாதா? ‘‘சமஸ்கிருதம் மட்டும் தான் பாரம்பரியமா? இந்தத் திட்டத்திலேயே மத்திய சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தின் வழியாகத் தானே நுழைகிறார்கள்? அதில் ஏற்கப்பட்டுள்ள குருமார்கள் யார் யார்? குருகுலங்கள் எவை எவை? எல்லாம் பார்ப்பன மடங்கள் தானே!

இவர்கள் சொல்லும் ‘பாரம்பரியக் கல்வி’ என்பது என்ன?

தானே கற்று நிபுணனான, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஏகலைவனிடம் ‘குரு தட்சணை’ என்ற பெயரில் கட்டை  விரலை  வெட்டி வாங்கிய முறை தானே! (மண்டல் கமிஷன் அறிக்கையிலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே!)

இந்த அறிவிப்பில், இந்த முறைப்படி அய்.அய்.டி.களில் படிப்பதற்குப் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த எந்தத் தகவலும் இல்லையே! முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படப் போகும் திட்டம் தானே இது? போராடிக் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை, மாற்று வழியில் முடக்கும் முயற்சியல்லாமல் வேறு என்ன?

வேத பாடசாலைகளில் பெண்களுக்கு இடம் உண்டா?

குருகுலங்களில் பெண்களுக்கு இடம் உண்டா? மக்கள் தொகையில் சரிபகுதியான பெண்கள் (உயர்ஜாதிப் பெண்கள் உள்பட) படிப்பதற்கு வேதம் அனுமதிக்கிறதா?

நேரடியாக, பார்ப்பனப் பிள்ளைகள், பார்ப்பன உபாத்தியாயர்கள்  சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தத் தானே இது போன்ற செயல்கள்?

கல்வியையும் சமூகநீதியையும்
காப்போம் – அணி வகுப்போம்!

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பார்ப்பனிய, வர்ணாசிரம, இந்துத்துவ விஷ விதைகளை, ‘கண்ணி வெடி’களை நட்டுவைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்!

அவற்றைக் கண்காணித்து, அகற்றி, நாட்டைப் பாதுகாக்க வேண்டியது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருடைய உயிர்க் கடமை அல்லவா?

சிந்தியுங்கள்!

செயலாற்ற முன்வாருங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை     

3.8.2025    

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *