சென்னை, ஆக.3- சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கும் போது, தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிறப்பாக தமிழ்நாட்டின் மகுடத்திற்கு இன்னொரு வைரக் கல் என்கின்ற வகையில் ஒன்றிய அரசின் சார்பில் தற்போது ஒரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உடல் உறுப்புக்கொடை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம்.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நமது மாநில அரசின் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணனிடம் 2024ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கி இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுப்புக்கொடை வழங்குவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றால் 2008ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்த உறுப்புமாற்று சிகிச்சைகள் ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 செப்டம்பர் 23ஆம் தேதி ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு என்பது மூளைச்சாவு அடைந்து உறுப்புக்கொடை வழங்குபவரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்பதாகும். இந்த அறிவிப்பிற்கு பிறகு 479 பேர் உடல் உறுப்புக்கொடை செய்து அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) மட்டும் 268 பேர் உடலுறுப்புக் கொடை செய்து இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாடு ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பதில் முதன்மையான மாநிலமாக இருக்கிறது.
அந்தவகையில் இந்த திட்டத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக ஒன்றிய அரசு அறிவித்து டில்லியில் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.