நூல் விமர்சனம்: ‘திரையுலகில் திராவிட இயக்கம்”
நூலாசிரியர்: பாலு மணிவண்ணன்
வெளியீட்டு நாள்:
28.7.2025 திங்கட்கிழமை மாலை 6.30 மணி
இடம்: பெரியார் திடல், புதுமை இலக்கியத் தென்றல்
1051ஆம் நிகழ்ச்சியில் மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மேற்கண்ட நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
திரையுலக, திரை இசை சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகள், நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. அதில் ‘திரையுலகில் திராவிட இயக்கம்’ என்ற இந்த நூல் ஒரு புதிய பார்வை மட்டுமல்ல; புதிய முயற்சியும் கூட. 100 பக்கங்களையும், 23 தலைப்புகளையும் உள்ளடக்கிய நூல் பரபரப்பாக உள்ளது.
திண்ணைப் பேச்சு, டீக்கடை உரையாடல், தெருமுனை பேச்சு, பொம்மலாட்டம், பாவைக்கூத்து, சூத்திரதாரி, விழிப்புணர்வுப் பிரச்சாரம், ஓரங்க நாடகம், முழு நீள கதையம்சம் கொண்ட நாடகத்தின் பரிணாம வளர்ச்சியே திரைப்படம்.
உரையாடல் எதுவுமின்றி கதாபாத்திரங்கள், சைகை மூலம் நடித்த காலத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு வசனங்களும், பாடல்களும் இடம் பெற்று மக்களிடையே பெரும் கலாச்சார மாறுதல்களை உண்டாக்கின.
திராவிட இயக்கம் இந்த மக்கள் ஆர்வத்தை, தனது கருத்துகளை, கொள்கைகளை, நோக்கங்களை நிறைவேற்ற ஓர் அடித் தளமாக அமைக்கத் தடைகளைத் தாண்டி வென்றெடுத்தனர். ஜாதி, மத வேறுபாடுகள் நிறைந்து இருந்த அக்காலத்தில் சினிமா தியேட்டர் என்ற பொது இடமே டிக்கெட் எடுத்தால் சமமாக அமர்ந்து திரைப்படம் காணலாம் என்ற ஜனநாயகம் உள்ளதாக இருந்தது.
திராவிடத் தலைவர்கள் தங்கள் வசீகர கரகரப்பான அடுக்கு மொழித் தமிழில் பேசியே புரட்சிகர வசனங்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு பெரும் எழுச்சியை எற்படுத்தின என்றால் அது வியப்பில்லை. இந்த வியூகம் திராவிட இயக்கம் தமிழ்நாட்டின் ஆட்சி ஏறும் வரை மட்டுமல்ல, இன்றும் தொடர்வது மிகப்பெரிய விடயம்.
தற்கால திரையில்“16 வயதினிலே” என்ற திரைப்படம் எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதோ அதேபோல அன்றைய திரையுலகில் பல்வேறு (திராவிட கொள்கைகளுக்கு) அடித்தளமாக புரட்சிக் காவியம் கலைஞரின் அனல் பறக்கும் வசனத்தில் “பராசக்தி”யாக திகழ்ந்தது. பின்னர் ஏற்பட்ட வசனங்கள் பின்தங்கியும், காட்சி அமைப்புகள் பிரதானமாகியும் இடம் பிடித்தன.
திராவிட இயக்கம் தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திற்குப் பின்னர் திராவிட தாக்கம் தொய்வு அடைந்தாலும், பகுத்தறிவு கருத்துகள், சமூகநீதி போன்ற கருத்துகள் அடங்கிய படங்கள் இன்றும் மக்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
நூலாசிரியர் புதிய இயக்குநர்கள், அவர்களது சிந்தனைகள், நடிகர்கள் பற்றியும் கோர்வையாக குறிப்பிட்டு எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருமுன்னர் அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் இடையே நடந்த சில கருத்து மோதல்கள் (கருப்புச் சட்டை அணிவது குறித்து) சிலவற்றை நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம். அதேபோல ஆண் நடிகர்களுக்கு இணையாக இல்லையென்றாலும் கூட பன்முக திறமையாளர் “ரங்கூன் ராதா” புகழ் நடிகை பானுமதி போன்றோரையும் நூலில் குறிப்பிட்டிருக்கலாம்.
திரைப்படத் துறையில் பல திறனாய்வு நூல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த நூலும் புதிய திறனாய்வு மேற்கொள்ள அடித்தளம் இடுகிறது. இந்த தலைப்பில் மேலும் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்க இந்நூல் அடிகோலுகிறது.