மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
மறைகின்ற கதிரவனின் மஞ்சள் நிறக் கதிரொளிகள், மேற்குத் திசையில், நீலமலைச் சிகரங்களில் தங்கத் தகடுகள் வேய்ந்தாற் போல் பளபளத்துக் கிடந்த ஒரு பொன் மாலைப் பொழுது.
என் மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு அறுபது வயது அம்மாவும், மற்றொரு இளைஞரும் உள்ளே வந்தனர். “என்னம்மா, வாங்க, உட்காருங்க” என்று அந்த அம்மாவை அமரச் செய்து, அவரின் குறையைக் கேட்கத் துவங்கினேன். அந்த அம்மாவின் உடன் வந்த இளைஞர் பேசத் துவங்கினார்.
“சார், என் பேர் கணேசன். இவங்க என் அம்மா. இவங்க பேர் வள்ளியம்மா. இப்பொழுது இவங்களுக்கு 62 வயது. நாங்க சாம்ராஜ் எஸ்டேட்லே (ஒரு பெரிய தேயிலைத் தோட்டம்)வேலை செய்யறோம். இரண்டு மாசத்துக்கு முன்னே அம்மாவுக்குப் பல்வலி வந்துச்சு. கடையிலே மாத்திரை வாங்கிக் கொடுத்தோம். ஆனா சரியாகலே. குன்னூரில் ஒரு பல் டாக்டரிடம் கூட்டி வந்து காண்பிச்சோம். அவரு சோதிச்சிப் பாத்து, வலது பக்கம் கீழ்த் தாடையில் கடைசியில் உள்ள இரண்டு கடைவாய் பற்கள் ஆடுவதாகவும் அதை எடுக்கணும், அதனால்தான் வலி என்றார். அம்மாவும் “என்னால் வலி தாங்க முடியல. எடுத்துடச் சொல்லுப்பா” என்று எங்கிட்ட சொன்னார். நானும் டாக்டர்கிட்டே, “சரிங்க சார், எடுத்துடுங்க” என்று சொல்ல, டாக்டரும் மரப்பு ஊசி போட்டு அந்த இரண்டு பற்களையும் புடுங்கிட்டாரு, நாங்க ஊட்டுக்குப் போயிட்டோம். டாக்டர் மூணு நாளுக்கு மருந்து கொடுத்தாரு, மருந்து சாப்பிட்ட வரைக்கும் வலி இல்ல. நான்காவது நாள் வலி திரும்ப வந்துடுச்சு. நாங்க திரும்ப டாக்டர்கிட்ட போனோம். டாக்டர், “இன்னும் பல் எடுத்த இடத்தில புண் ஆறலே” என்றபோது,
“மருந்த மாத்தித் தரேன். ஊசியும் போட்டு விடறேன். சரியாயிரும். பயப்பட வேண்டாம்” என்று கூறி ஊசி போட்டு, மருந்து கொடுத்தாரு. மருந்து சாப்பிட்டு இரண்டு, மூணு நாளு நல்லா இருந்திச்சு. வலி திரும்ப வந்திடுச்சு. டாக்டர்கிட்ட திரும்பப் போனோம்.
அவர் அம்மாவுக்கு சக்கரை நோய் இருக்கான்னு டெஸ்ட் செஞ்சுக்கிட்டு வரச் சொன்னாரு, நாங்களும் டெஸ்ட் பண்ணிட்டு வந்தோம். அம்மாவுக்கு சக்கர வியாதி இல்லன்னு ரிசல்ட் வந்து இருந்துச்சு. டாக்டர் திரும்பவும் ஊசி போட்டு மருந்து குடுத்தாரு. எப்பவும் போல மருந்து சாப்பிட்ற வர வலி வரல. அத நிறுத்திட்டா திரும்ப வலி வந்துடுது, பல் எடுத்த இடத்தில புண் ஆறவே இல்ல. இப்ப, பல்லு புடுங்கின இடத்திலே சதை மாதிரி வளருது. டாக்டரிடம் திரும்ப போனோம்.
அவரு வாய சோதிச்சுப் பாத்துட்டு, “இந்த புண் 2 மாசமா ஆறவே இல்லை, நீங்க கவுதமன் டாக்டருக்கிட்டே போய்க் காட்டுங்க” என்று சொல்லி உங்களுக்கு லெட்டர் குடுத்திருக்காரு” என்று கூறி அந்த மருத்துவர் கொடுத்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார். நான் அதைப் பிரித்துப் படித்தேன். அந்த இளைஞர் கூறிய அனைத்து மருத்துவ நிலைகளையும் அந்த மருத்துவர் எழுதி என்னை மருத்துவப் பயனாளியை ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டிருந்தார்.
நான் வள்ளியம்மாளை பல் மருத்துவ நாற்காலியில் (Dental Chair) அமர வைத்து சோதிக்கத் தொடங்கினேன். உடலில் வேறு ஏதாவது தொல்லைகள் இருக்கிறதா என்று கேட்க, வேறு தொல்லைகள் ஏதும் இல்லை என்று வள்ளியம்மாளின் மகன் பதில் கூறினார். இதயத் துடிப்பு, மூச்சு போன்றவை இயல்பு நிலையில் இருந்தன. இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உயிர் மூச்சுக் காற்று அழுத்தம் (SPO2) போன்றவை சீராக இருந்தன. பின் வாயைத் திறக்கச் சொல்லி ஆய்வு செய்தேன்.
அங்கு, எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. பல் எடுத்த இடத்தில் சாதாரணப் புண்தான் இருக்கும் என்று மருத்துவப் பயனாளியின் (வள்ளியம்மாவின்) மகன் சொன்னதைக் கேட்டு, அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அது சாதாரணப் புண் அல்ல. பல் எடுத்த இடத்தில் இருந்து, எலும்பின் (கீழ்த்தாடை எலும்பின் வலதுபுறம்) உள் இருந்து ஒரு சுண்டைக்காய் அளவில் ஒரு சதை வளர்ந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அதன் அமைப்பு, மற்றும் அது வளர்ந்த பகுதிகளைப் பார்த்ததும், அது புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது. மேலும் வாயினுள் அதை ஒட்டியுள்ள சவ்வுப் பகுதியில் எங்காவது பரவி உள்ளதா என்று சோதித்தேன். எலும்பைத் தாண்டி வேறு எங்கும் பரவவில்லை என்பதை உணர்ந்தேன். வாயில் புற்றுநோயோ, நோய்த் தொற்றோ ஏற்பட்டால், வழக்கமாக கீழ்த்தாடையின் கீழ் உள்ள நிணநீர் முடிச்சுகள் (Sub-Mandibular gland) வீங்கி விடும்; வலியும் இருக்கும். புற்று நோய்ப் பகுதி வீக்கம், வலியோடு கல் போன்று கெட்டியாகவும், அசைத்துப் பார்க்கவும் (Swollen, tender, hard and fixed) முடியாதவாறு இருக்கும். மேல் கழுத்தின் பக்கவாட்டில், கீழ்த் தாடையின் பின், உள் புறமாக இந்த நிணநீர் முடிச்சு இருக்கும். அதை சோதித்தேன். நல்வாய்ப்பாக நிணநீர் முடிச்சு எந்த அறிகுறியும் இல்லாமல் இயல்பு நிலையில் இருந்தது. புற்று நோய் மற்ற இடங்களுக்குப் பரவி இருந்தால், நிணநீர் முடிச்சுகளில் மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும். அதைப் போன்று அறிகுறிகள் ஏதும் நிணநீர் முடிச்சில் இல்லாததால் நோய் மற்றப் பகுதிகளுக்குப் பரவவில்லை என்பதை உறுதி செய்துகொண்டேன். ஊடுகதிர் நிழற் படம், முக எலும்பையும், நுரையீரலையும் எடுக்கச் செய்தேன். நுரையீரல் பகுதியில் கட்டியின் பரவல் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன்.
முக எலும்பில் வலது கீழ்த்தாடையின் பின்புறம் கட்டி பரவி, எலும்பை அரித்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. இதய மின் அலைப் பதிவு எடுக்கப்பட்டது. அனைத்து சோதனைகளும் (இரத்தம், சிறுநீர், கோழை) செய்யப்பட்டன. அவை அனைத்தும் இயல்பு நிலையில் சீராக இருந்தன. கடைசி சோதனையாக “திசு ஆய்வு” (Biopsy) செய்ய முடிவெடுத்தேன்.
மருத்துவப் பயனாளி வள்ளியம்மாவை அடுத்த நாள் திசு ஆய்வு சோதனைக்காக வரச் சொன்னேன், அடுத்த நாள் அவர் வந்தார். மரப்பு ஊசி போட்டு, வாயின் உட்புறம் இருந்த கட்டியின் ஒரு சிறு பகுதியை எடுத்தேன். அதை ஆய்வுக்கு அனுப்பினேன். மருத்துவப் பயனாளியை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னேன். ஒரு வாரத்தில் திசு ஆய்வு முடிவும் வந்தது. மருத்துவப் பயனாளி வள்ளியம்மாளும் வந்தார். திசு ஆய்வு “சுரப்பி செல் புற்று நோய்” (Adeno-carcinoma) என்று நான் எதிர்பார்த்தபடியே வந்தது. மற்ற இடங்களுக்குப் பரவாததால் உடனே மருத்துவப் பயனாளிக்கு அறுவை மருத்துவம் செய்தால் முழுமையாக குணம் அடைய வாய்ப்புண்டு என்றும், அதை விட்டால் வேறு மருத்துவம் இல்லை என்றும் விளக்கினேன்.
அவரது மகனிடம், புற்றுநோய் பாதித்த எலும்பை முழுமையாக அகற்றினால், அந்த இடம் முகத்தில் குறை பாட்டை ஏற்படுத்திவிடும் என்றும், அதனால் உடம்பில் வேறு இடத்திலிருந்து எலும்பை எடுத்து, முக எலும்பு நீக்கிய பகுதியில் பொருத்தி முகத்தை சீராக்கி விடலாம் என்று விளக்கினேன். அவரும் அந்த வகை அறுவை மருத்துவத்திற்கு இசைந்தார். வெளியே செய்தால் நிறைய பொருட் செலவாகும், அரசு மருத்துவமனைக்கு வந்தால் பொருட் செலவு ஏதுமின்றி செய்து கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, அடுத்த நாளே அரசு மருத்துவமனைக்கு, காலை வந்தனர். அவர்கள் புறமருத்துவப் பயனாளிகள் பகுதியில் மருத்துவமனை சீட்டைப் பெற்றுக் கொண்டு என்னைப் பார்க்க வந்தனர்.
காளியம்மாளை மருத்துவமனையில் சேர்த்தேன். மயக்குநருக்கு செய்தி அனுப்பினேன். ஏற்கெனவே எல்லா ஆய்வுகளும் கையில் இருந்ததால், அவர் அவற்றை பார்வையிட்டு அறுவை மருத்துவம் செய்ய அனுமதியளித்தார். அடுத்த நாளே அறுவை மருத்துவம் செய்வதென்று முடிவானது. மற்ற எல்லா ஆயத்தங்களும் இரவே முடிந்தது.
அடுத்த நாள் அறுவை மருத்துவ அரங்கிற்கு மருத்துவப் பயனாளி கொண்டு வரப்பட்டார் . முகத்தில் புற்றுநோய் இருந்த கீழ்த்தாடை எலும்புப் பகுதியை அகற்றி விட்டு, காலில் இருந்து எலும்பை எடுத்து அங்கு பொருத்துவதென்று முடிவெடுத்திருந்தேன். அதன்படி செய்ய இரத்தம் 2 பாட்டில் தேவைப்பட்டது. அதையெல்லாம் செவிலியர் ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். மயக்குநர் மருத்துவப் பயனாளிக்கு மயக்கம் கொடுக்கத் துவங்கினார். மயக்க முன் மருந்துகள் காளியம்மாவிற்கு செலுத்தப்பட்டது. மயக்க மருந்து குழாய், மூக்கின் மூச்சுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது. மயக்க மருந்து கொடுத்தபின், அறுவை மருத்துவம் ஆரம்பித்தேன். திட்டமிட்டபடி, புற்று நோய் பாதித்தப் பகுதியை முழுமையாக கீழ்த்தாடையில் வெட்டி எடுத்தேன். அதை லேசாக மூடி, கால் பகுதியை அடைந்தேன். அங்கிருந்து ‘கீழ்க் கால் உள்ளெலும்பு’ (Tibia) பகுதியை திறந்தேன்.
தாடையில் இருந்து அகற்றப்பட்ட பகுதிக்குத் தேவையான அளவு கீழ்க்கால் உள்ளெலும்பில் இருந்து அகற்றப்பட்டு, அதை கீழ்த்தாடையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட எலும்புப் பகுதியில் பொருத்தப்பட்டது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளைக் கொண்டு “ஒட்டெலும்பாக” (Graft) தாடையில் பொருத்தப்பட்ட எலும்பை, மீதித் தாடை எலும்போடு இறுக்கமாகப் பொருத்தினேன். அதுவும் சிறப்பாகப் பொருந்தியது. முகத்தில் எந்த விதக் குறைபாடும் தெரியாமல் எப்பொழுதும் போல் இயல்பான நிலையில் அமைந்துவிட்டது. அறுவை மருத்துவம் செய்த கீறலில் தையல் போடப்பட்டது. மூச்சுக் குழாயிலிருந்து, மயக்க மருந்துக் குழாய் அகற்றப்பட்டது.
மருத்துவப் பயனாளியின் முக்கிய உறுப்புக்கள் சீராக இயங்குவதை உறுதி செய்த பின், அறுவை அரங்கிலிருந்து, படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். நன்றாக உணர்வு வந்த உடன் தன் முகம் பழையபடியே இருக்கிறதா என்று பார்க்க ஆசைப்பட்டார். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு வரச் செய்து, முகத்தைப் பார்க்கச் செய்தேன். மிகவும் மகிழ்ந்து கையெடுத்துக் கும்பிட்டு நன்றி கூறினார். எந்தவித சிக்கலுமின்றி முகத்திலும், காலிலும் இருந்த காயங்களில் இருந்த தையல்கள் அகற்றப்பட்டு, மருத்துவப் பயனாளி மகிழ்வோடு வீட்டிற்கு சென்றார். இந்த மருத்துவம் புற்று நோயின் ஆரம்ப நிலையிலேயே செய்யப்பட்டதால் மருத்துவப் பயனாளி முழுமையாக குணமடைந்து விட்டார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட அறுவை மருத்துவம் இது. இன்று வரை அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி !
“மனிதன் தானாகப் பிறக்கவில்லை, தனக்காவும் பிறக்கவில்லை” என்ற தந்தை பெரியாரின் சொற்களை வாழ்வியலாக அமைத்துக் கொண்ட எனக்கு, ஒவ்வொரு அறுவை மருத்துவ வெற்றியும் பெரு மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்லவும் வேண்டுமா?