சமூக அறிவியல் ஊற்று – 16- அறிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்

6 Min Read

இந்தியாவில் ஜாதிகள் – 5

இதுதான் சாதிகளின் ஓர் அமைப்புமுறையில் சாதி செயல்படும் பொதுவான இயங்கியல் என்பது என்னுடைய கருத்து. இப்போது, இந்த உயர்நிலை பொதுமைப்படுத்தல்களில் இருந்து இந்து சமூகத்தில் உள்ள சாதிகளையும் அவற்றின் இயங்கியலையும் குறிப்பாக ஆராய்வோம். கடந்த காலத்தை விரித்துப் பார்க்க விரும்புவோருக்கு, வழியில் பல பள்ளங்கள் எதிர்ப்படும் என்பதைக் கூறவேண்டியதில்லை; சாதி என்பது இந்தியாவில் மிகப் பழைமையான நிறுவனமாகும். நம்பகமான அல்லது எழுதப்பட்ட வரலாறு இல்லாத அல்லது உறுதியாக நம்பத்தக்க எழுதிவைக்கப்பட்ட பதிவேடுகள் இல்லாத இடங்களில் இந்த முயற்சி மேலும் இடர்ப்பாடானதாகிறது. அதிலும் இந்துக்களைப் போன்ற மக்களைப் பொறுத்தவரை இது மிகவும் இடர்ப்பாடானது. ஏனென்றால், உலகே மாயம் என்று கருதுவதனால் வரலாற்றை எழுதிவைப்பது மடமை என்பது அவர்களின் கருத்து. ஆனால் நிறுவனங்கள் வாழத்தான் செய்கின்றன. நீண்டகாலமாக அவை பற்றிய பதிவேடுகள் இல்லாமற்போகலாம்; எனினும், வழக்கங்களும் ஒழுக்கநெறிகளும் புதைபடிவப்பதிவுகள் போல், தம்முடைய வரலாற்றைத் தாமே இயம்புகின்றன. இது உண்மையானால், உபரி ஆண் உபரிப் பெண் ஆகிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்துக்கள் கண்ட தீர்வுகளை ஆராய்ந்தாலே நமது பணிக்குப் பயன் கிடைத்துவிடும்.

இந்து சமூகத்தின் செயல்பாடு சிக்கலானதாக இருந்தாலும் மேலெழுந்தவாரியாகப் பார்ப்பவருக்குக் கூட அதில் மனைவி தொடர்பான மூன்று தனிச் சிறப்பான வழக்கங்கள் இருந்து வருவது புலனாகும்.

  1. உடன்கட்டை, அதாவது கணவன் இறந்தபின் அவனது சிதையிலேயே கைம்பெண்ணை எரித்துவிடுவது.
  2. கணவனை இழந்தவளை மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்காமல் சுட்டாயமாக கைம்பெண்ணாகவே இருக்க வைப்பது.
  3. சிறுமியர் திருமணம்.

இது தவிர மனைவியை இழந்த ஆண் சந்நியாசம் (துறவு) மேற்கொள்வதில் பெரும் ஆவல் காட்டுவதும் காணப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபர்களின் உளவியல் போக்கே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

உடன்கட்டை, கட்டாயக் கைம்பெண் முறை, குழந்தைத் திருமண முறை ஆகியவற்றை இலக்குகள் என்று சொன்னாலும், வழிமுறைகள் என்று கருதினாலும், இந்த வழக்கங்களின் நோக்கம் ஒன்றுதான் என்று கூறுகிறேன். ஒரு சாதியில் உபரி ஆண், உபரிப் பெண் என்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதும் அதன் அகமணமுறையைப் பாதுகாப்பதுமே அந்த நோக்கமாகும். இந்த வழக்கங்கள் இல்லாமல் கண்டிப்பான அகமணமுறையைப் பாதுகாக்க முடியாது. அகமணமுறை இல்லாமல் சாதி என்பது போலியாகும்.

எனக்குத் தெரிந்தமட்டில் இந்த வழக்கங்கள் எப்படித் தோன்றின என்பது பற்றி இன்றுவரைகூட அறிவியல் முறையிலான விளக்கம் எதுவும் இல்லை. இந்த வழக்கங்கள் ஏன் மதித்துப் பின்பற்றப்படுகின்றன என்பதற்கு தத்துவ விளக்கங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவை தோன்றியதற்கும் இருந்துவருவதற்குமான காரணங்கள் பற்றி எதுவுமே இல்லை. உடன்கட்டை வழக்கம் மதித்துப் போற்றப்படுவது ஏனென்றால் (பார்க்கவும்: A.K. Coomaraswamy, Sati: A Defence of the Eastern Woman in the British Sociological Review, Vol. VI, 1913 ஏ.கே. குமாரசுவாமி, சதி: கீழைத்தேய பெண்ணுக்கான ஒரு தற்காப்பு, பிரிட்டிஷ் சோசியாலஜிக்கல் ரிவியு, தொகுதி VI, 1913.). அது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ”உடலும் ஆன்மாவும் முழுமையாக ஒன்றியிருப்பதற்கும்”, “சாவுக்குப் பின்பும் கணவன்பால் பக்தி தொடருவதற்கும்” சான்றாக உள்ளது. அது இலட்சிய மனைவிக்கான பண்பை தன்னுள் கொண்டுள்ளது என்பதால் அது போற்றப்படுகிறது. உமாதேவியின் சொற்கள் இதை நன்றாக வெளிப்படுத்துகின்றன. “தனது கணவனிடம் வைத்துள்ள பக்திதான் பெண்ணுக்கு மாண்பாகும்; அதுவே அவளுடைய நிரந்தர வானுலகம்” என்று அவள் கூறுகிறாள்; ஒரு மானிடப் பெண்ணின் உருக்கத்துடன் மேலும் கூறுகிறாள்: “ஓ மகேஸ்வரா! உங்களுக்கு என்னிடம் மனநிறைவு இல்லையென்றால் எனக்கு விண்ணுலகும்கூட வேண்டாம்.”

கணவனை இழந்த பெண் கைம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தும் வழக்கம் ஏன் மதிக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த வழக்கத்தைப் புகழ்ந்துபாடும் யாரையும் நான் கண்டதில்லை. ஆயினும் இந்த வழக்கத்தைப் பின்பற்றுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். சிறுவயதிலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்யும் வழக்கம் பின்வருமாறு புகழப்படுகிறது என்று முனைவர் கெட்கர் கூறுகிறார்.

“உண்மையிலேயே நம்பிக்கைவைக்கும் ஓர் ஆண் அல்லது பெண், தான் மணந்திருக்கும் பெண் அல்லது ஆணைத் தவிர வேறு யாரையும் மனத்தளவில்கூட விரும்பக்கூடாது. இத்தகைய தூய்மை, திருமணத்துக்குப் பின்பு மட்டுமின்றி, அதற்கு முன்பும்கூட கட்டாயமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதுதான் உண்மையான தூய்மையாகும். எந்த ஒரு பெண்ணும் தான் மணந்துகொள்ளப்போகும் ஆணைத் தவிர வேறு யாரிடமும் காதல் கொண்டால் அவளைத் தூய்மையானவளாகக் கருத முடியாது. அவள் யாரை மணந்துகொள்ளப்போகிறாள் என்பது அவளுக்குத் தெரியாது. ஆதலால், அவள் திருமணத்துக்கு முன்னால் எந்தவோர் ஆணிடமும் அன்பு கொள்ளக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அது பாவம். எனவே ஒரு பெண்ணிடம் பாலியல் உணர்வுகள் விழிப்பதற்கு முன்பாகவே, அவள் யாரைக் காதலிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது நல்லது.(முனைவர் எஸ்.வி. கெட்கர், இந்தியாவில் சாதியின் வரலாறு, 1909, பக். 32-33.) இதனால்தான் பெண்ணுக்குச் சிறுவயதில் திருமணம் செய்யப்படுகிறது.

சொல் பகட்டும் திறமையும் நிறைந்த இந்த வாதம் இந்த வழக்கங்கள் ஏன் மதிக்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றது. ஆனால் இவை ஏன் பின்பற்றப்பட்டன என்பதை இது விளக்கவில்லை. இவை பின்பற்றப்பட்டதாலேயே மதிக்கப்பட்டன என்பதே என்னுடைய கருத்து. பதினெட்டாம் நூற்றாண்டில் தனிநபர் சுதந்திரம் தோன்றிய வரலாற்றை சற்றும் அறிந்தவர்கள் யாரும் நான் கூறுவதைப் புரிந்துகொள்வார்கள். எப்போதுமே இயக்கம்தான் முதன்மையானது. தத்துவங்கள் அதற்குப் பின்பு வளர்ந்து அதை நியாயப்படுத்தி, அதற்கு அறம்சார் ஆதரவு கொடுக்கின்றன. அதேபோலத்தான் இதுவும் என்று கூறுகிறேன். இந்த வழக்கங்கள் இவ்வளவு உயர்வாகப் புகழ்ந்து பேசப்பட்டிருப்பது, இவை பின்பற்றப்படுவதற்கு இந்தப் புகழுரைகள் தேவைப்பட்டன என்பதை மெய்ப்பிக்கிறது.

சாதிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இவை தேவைப்பட்டன என்பதே இந்த வழக்கங்கள் ஏன் தோன்றின என்பதற்கு நான் கூறும் காரணம். இவற்றை உயர்த்திக்கூறும் தத்துவங்கள் மக்களிடையே இவற்றைப் பரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவையாகும். இந்த வழக்கங்கள் எளிய மக்களுக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும் வெறுக்கத்தக்கவையாகவும் இருந்திருக்க வேண்டும். எனவே, கசப்பு மாத்திரைக்கு இனிப்புப் பூச்சு கொடுப்பதுபோல இந்தத் தத்துவங்கள் கூறப்பட்டன. இந்த வழக்கங்கள் உண்மையில் ஓர் இலக்கை நோக்கிய வழிமுறைகளேயாகும். ஆனால் அவை தம்மளவில் இலக்குகள் போல மக்கள் முன் வைக்கப்பட்டன. ஆயினும் இவற்றால் ஏற்பட்ட விளைவுகளை நாம் புறக்கணித்து விடக்கூடாது.

வழிமுறைகளை இலக்குகளாகக் கூறுவது தேவை என்று கூறுவது சரியாகவே இருக்கும். இங்கு நமது ஆய்வுப் பொருளைப் பொறுத்தவரை வழிமுறைகள் அதிக ஆற்றலுடன் செயல்படச் செய்வதற்கு இது அவசியமாக இருந்திருக்கலாம். வழிமுறைகளை இலக்கு என்று கூறுவதனால் தீங்கு எதுவும் இல்லை. ஆனால் அதன் உண்மையான தன்மை மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் வழிமுறை என்ற அதனுடைய உண்மையான தன்மை மாறிவிடாது. வழிமுறைகளை இலக்கு என்று கூறுவது பூனைகளெல்லாம் நாய்கள் என்று சட்டம் இயற்றுவதுபோலாகும். ஆனால் இந்தச் சட்டத்தினால் பூனைகள் நாய்களாக மாறிவிட மாட்டா; அதேபோலத்தான் வழிமுறைகளும் உண்மையில் இலக்குகளாக ஆகிவிட மாட்டா.

எனவே உடன்கட்டை, கட்டாயக் கைம்பெண் முறை, குழந்தைத் திருமண முறை ஆகியவற்றை இலக்குகள் என்று சொன்னாலும், வழிமுறைகள் என்று கருதினாலும், இந்த வழக்கங்களின் நோக்கம் ஒன்றுதான் என்று கூறுகிறேன். ஒரு சாதியில் உபரி ஆண், உபரிப் பெண் என்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதும் அதன் அகமணமுறையைப் பாதுகாப்பதுமே அந்த நோக்கமாகும். இந்த வழக்கங்கள் இல்லாமல் கண்டிப்பான அகமணமுறையைப் பாதுகாக்க முடியாது. அகமணமுறை இல்லாமல் சாதி என்பது போலியாகும்.

இந்தியாவில் சாதி உருவான முறையையும் அது காக்கப்பட்டு வந்துள்ள முறையையும் விளக்கியதைத் தொடர்ந்து சாதியின் தோற்றுவாய் எது? என்ற கேள்வி எழுவது இயல்பே. சாதியின் தோற்றம் பற்றிய இந்தக் கேள்வி எப்போதுமே எரிச்சலூட்டக் கூடியது: சாதி பற்றிய ஆய்வில் இந்தக் கேள்வி வருத்தப்படக்கூடிய அளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. சிலர் இதனைக் கண்டும் காணாததுமாக விடுத்துள்ளனர். சிலர் தந்திரமாகத் தவிர்த்திருக்கின்றனர். சிலர் சாதியின் தோற்றம் என்று ஏதாவது இருக்கிறதா என்று திகைக்கின்றனர். “தோற்றுவாய்’ என்ற சொல்லின் மீது உள்ள விருப்பத்தை உங்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றால். அச்சொல்லின் பன்மை வடிவத்தை அதாவது ‘சாதியின் தோற்றுவாய்கள்’ என்பதைப் பயன் படுத்துவதே நல்லது” என அவர்கள் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் சாதியின் தோற்றுவாய் பற்றி நான் திகைக்கவில்லை. ஏனெனில், நான் ஏற்கெனவே நிறுவியுள்ளவாறு சாதியின் தோற்றம் என்று சொல்லும்போது அகமணமுறைக்கான இயங்கியலின் தோற்றம் என்பதையே நான் குறிக்கின்றேன்.

 – தொடரும்

‘அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்’ ஜாதியம்: வரலாறு – ஆய்வு  (தொகுதி 1)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *