ஆடி மாதம் துவங்கி விட்டாலே, ஊர் தோறும், வீதி தோறும் மாரியம்மாவிற்கு கரகம் எடுத்து கூழ் ஊற்றி விழாக்கள் எடுத்து கொண்டாடுவார்கள். மாரியம்மன்கள் எப்படி உருவாகின – விழாக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது தனிக்கதை.
ஆனால், இப்பொது நாம் பார்க்கவிருப்பது, இன்றைய காலகட்டத்தில் கரகம் தூக்க இன்றைய படித்த இளைஞர்கள் தயாராக இல்லை என்பது தான்.ஆம்,இத்தகைய செயலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர்களிடையே விருப்பம், ஆர்வம் இல்லை,மிகப் பெரிய தயக்கங்கள் உள்ளன.
தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவாரே ” பக்தி என்பது தனி சொத்து, ஒழுக்கம் என்பது பொது சொத்து” என்று, கரகம் தூக்கிக் கொண்டு ஆடுவது நாகரிகமற்ற விஷயம் என்பதை இப்போது இன்றைய இளைஞர்கள் உணர தொடங்கி உள்ளார்கள், என்பதை நம்மால் உணர முடிகிறது.
மாரியம்மன் திருவிழா வரும் நாட்களுக்கு முன்பாக, கரகம் தூக்குவது யார் என்று முடிவு செய்வார்கள். எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்றால், மாரியம்மன் கோவில் முன்பு அந்தந்த தெருவில் உள்ள பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள். அவர்கள் முன்பு பம்பை- உடுக்கை தொடர்ச்சியாக அடிப்பார்கள். அடிக்கும் அடியில் பக்தர்கள் மீது ஆத்தா இறங்கி வந்து ஆடுமாம். அது தன்குறைகளைச் சொல்ல, தனக்கு விழா எடுத்து அதை நிவர்த்தி செய்யு மாறு கோரிக்கை வைக்குமாம். அப்படி ஆத்தா வந்து ஆடுபவர்களில் ஒருவர் தான் அந்த ஆண்டு கரகம் தூக்கவேண்டுமாம் என்பது தான் காலங்காலமாக இருந்து வரும் பழக்கம்.
( பெண்கள் மீதும் ஆத்தா வந்து ஆடும், ஆனால் அவர்கள் கரகம் தூக்க அனுமதி இல்லையாம்.)
இந்த மாரியம்மன் திருவிழாக்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் இருக்கும் பகுதியில் தான் நடக்கும். பார்பனர்கள், முதலியார்கள் போன்ற தங்களை உயர் வகுப்பினர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இருக்கும் பகுதியில் நடக்காது. மாரியம்மாளுக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. அவர்கள் வசிக்கும் தெருவில் மாரியம்மன் கோவிலே இருக்காது. எந்த பார்பானும் தெய்வம் வந்து ஆடி நாம் பார்த்ததில்லை.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் கரகம் தூக்கும் பக்தர், பெரும்பாலும் கல்வி அறிவில்லாத ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கிறவர்கள் தான். அவர்கள் மீது தான் சாமி வருமாம். அவர்கள் தான் கரகம் தூக்கி வீதி உலா வருவார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால்
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த நபர்கள் அதாவது கவுண்டர், வன்னியர் போன்ற ஜாதியை சார்ந்தவர்கள் கரகம் தூக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் வீதிகளில் வலம் வரும்போது, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலில் விழுந்து வணங்குவார்கள்.
அதே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பை சாரந்தவர்கள் கரகம் தூக்கிக் கொண்டு, இவர்களை விட உயர் வகுப்பினர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களின் வீதிகளில் சென்றால், அவர்கள் பார்வைக்கு மாரியம்மன் தெரியாது. ஜாதி தான் தெரியும். இவர்கள் காலில் இவர்களை விட உயர்ந்த ஜாதி என்று கருதி கொள்பவர்கள் விழமாட்டார்கள்.
இந்த தலைமுறை இளைஞர்கள் இதை எல்லாம் உணர்ந்து, சாமி வந்து ஆடுவதை நாகரிகமற்ற செயல் எனக் கருதி விரைவில் இந்த மூட பக்திகளை தூக்கி எறியும் காலம் வெகு தூரம் இல்லை என்றே தோன்றுகிறது.
தந்தை பெரியார், அவர்களின் சிந்தனைகளை திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரங்களின் மூலம் மாணவர்களிடையே கொண்டுச் சேர்த்ததின் விளைவும், திராவிட மாடல் அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக அவர்களை கல்வி கற்க வைத்ததின் விளைவாகவும், காலகாலமாக குலத்தொழிலை செய்து கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே சிரமமாக இருந்த காலம் மாறி, அவர்களின் அடுத்த தலைமுறை இப்போது கல்விக் கற்று குலத்தொழிலிருந்து விடுதலை அடைந்து, அரசு உயர் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்குச் சென்றதின் விளைவாக அவர்களின் பற்றாக்குறைகள் குறைந்து, வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது.அவர்களின் தேவைகள் எல்லாம் முழுமை அடையாவிட்டாலும், ஓரளவாவது பூர்த்தியடைந்துள்ளது.
அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே போராட்டமாகி, அதனால் ஏற்படும் மன அழுத்தங்களைப் போக்க, இது போன்ற திருவிழாக்களின் போது தெய்வம் வந்து ஆடுவதாக நினைத்துக் கொண்டு தங்களுடைய மன அழுத்தங்களை வெளிப்படுத்தியவர்கள், தங்களின் இயலாமையைப் போக்கி கொண்டவர்கள் மத்தியில், தங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தி அடைந்து, அப்போது இயலாமையால் ஏற்பட்ட இந்த மன அழுத்தங்கள் இப்போது குறைந்துள்ளதால் தெய்வம் வந்து ஆடுவதும் குறைந்துள்ளது.
ஏற்ெகனவே கரகம் தூக்கியவர்கள்,வயது மூப்பின் காரணமாக கரகம் தூக்க அவர்களிடத்தில் சக்தி இல்லை. இந்த தலைமுறை கல்வி கற்றதின் விளைவாக கரகம் தூக்க தயாராகவில்லை. தன்மானப் பிரச்சினையாகவும் நினைக்கிறார்கள்.
இதனால் இனிவரும் காலங்களில் கல்வி அறிவு சேராத மக்களிடையே முழுமையான கல்வி சேர்ந்து, அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும்பட்சத்தில், கரகம் தூக்குவது, காவடி தூக்குவது எல்லாம் குறையும்.
மாரியம்மன் திருவிழாவில் அம்பேத்கார் படத்தை தூக்கிப்பிடித்து கொண்டு மாரியம்மனுக்கு வாழ்த்து சொல்லி மகிழுகிறார்கள். இவர்கள் முழுமையாக அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளைப் படித்து உணரும் பட்சத்தில் இத்தகைய மூட பழக்கங்களிலிருந்து மிக விரைவில் விடுபடுவார்கள்.
இந்த மூட நம்பிக்கைகள் குறைந்து மக்கள் மாறி வருவதை உணர்ந்து தான்,இந்த மூடநம்பிக்கைகள் எல்லாம் குறையாமல் பார்த்துக் கொள்ளத்தான் தங்களின் வயிற்று பிழைப்பிற்காக,சொகுசான வாழ்க்கைக்காக, மதவாத அரசியல், ஜாதிய அரசியல் செய்யும் கட்சிகள் இத்தகைய உணர்வுகளை தூண்டி விடுகின்றன. வேண்டுமென்றால் அந்த மத,ஜாதிய தலைவர்களின் பிள்ளைகள் பார்பன உயர் ஜாதியினர் கரகம், காவடி தூக்கி சுமக்கட்டும். இனி நம் பிள்ளைகளை தொடர்ந்து புத்தகம் சுமக்க வைப்போம்.
– பெ. கலைவாணன்
திருப்பத்தூர்