ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் சூழ்க!
நோயாளிகள் என்ற கலைச்சொல்லுக்கு மாற்றாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்பதனை மருத்துவமனைகளில் பயன்படுத்த வேண்டி, ஆசிரியர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கை (‘விடுதலை’ 29.07.2025) மிகவும் விரும்பத்தக்கதும், வரவேற்கத் தக்கதுமாகும். இது குறித்து சில கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
ஆசிரியர் அவர்கள் தமிழ்மொழிப் பாதுகாவலர், மொழியைப் பலகாலும் மேடைகளில், அறிஞர் நிறைந்த அவைகளில் முழங்கி மேடைத் தமிழை வளர்த்தவர். மொழியைக் கவனமுடன் கையாண்டு யார் மனதையும் புண்படுத்தாமல் எச்சரிக்கையோடு உரையாற்றும் செம்மல், அவரிடமிருந்து அவரால் படைக்கப்பட்ட இந்த அற்புதமான கலைச்சொல் மிகவும் பாராட்டிற்குரியது. நாளும் ‘வாழ்வியல் சிந்தனை’கள் மூலம் ‘விடுதலை’ ஏட்டின் வாசகர்களுக்கு சிந்தனை விருந்து படைப்பவர்!
கலைச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட கருத்தமைவை ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறையில் நுட்பமாகப் புலப்படுத்துவதாகும். இதை மனதில் கொண்டே தொடக்கக் காலம் தொட்டு. தமிழ்க்கலைச் சொல்லாக்கிகள் கலைச்சொற்களை உருவாக்கினர். கலைச் சொல்லாக்கத்திற்கானச் சில நெறிமுறைகளையும் வகுத்துக் கொண்டனர். கலைச்சொல்லாக்கத்தில் பொருட்செறிவு தமிழ்வுணர்வோடு சமுதாய உணர்வு என்பதும் புதுச் சொல்லாக்க நெறியின் ஒரு பகுதியாகும்.
தற்போது தமிழில் கலைச்சொல் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தக்க சொல் கிடைக்காத நிலையில் ஆங்கிலச் சொற்களைத் தற்காலிக நிகழ்வாக ஏற்றுப் பயன்படுத்துகின்றனர். சமஸ்கிருதப் பயன்பாடு பெரிதும் குறைந்துவிட்டது. ஆக்ஸிசன் – பிராணவாயு- உயிர்வளி என்ற மூன்றில் உயிர்வளி, ஆக்ஸிசன் பயன்பட பிராணவாயு காற்றோடு கலந்துவிட்டது. தமிழ் கலைச் சொல்லாக்கத்தில் காணப்படும் இம்மொழி உணர்வைத் தொடர்ந்து சமுதாய உணர்வும் இடம் பெறக் காண்கிறோம்.
‘ஓலை’ அரசனால் அனுப்பப்படும் போது ‘திருமுகம்’ ஆகிறது; சமுதாயத்தில் மேல்நிலையில் உள்ளவர்களை மதிப்போடு சுட்டுதல்; சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற சில சொற்களை வெளிப்படையாக கூறாதிருத்தல்; இழித்தும் பழித்தும் சொல்வதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களை ஒதுக்கி, தகுதியான வேறு சொற்களைப் பயன்படுத்துதல் முதலியன சமுதாயம் சார்ந்த மொழி உணர்வாகிறது. இந்தச் சமுதாய உணர்வு அன்றாட வழக்குச் சொற்களில் மட்டும் இடம் பெறாது கலைச்சொல்லாக்கத்திலும் இடம் பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
‘‘அரசினர் குருடன் செவிடர் பள்ளி’’ என்பது ‘‘அரசினர் பார்வை இழந்தோர் காது கேளாதோர் பள்ளி’’ என அழைக்கப்படுகிறது. ‘‘சவ ஊர்வலம்’’ என்பது ‘‘இறுதி ஊர்வலம்’’ என வழங்கப்படுவதற்கும் சமுதாய உணர்வே காரணம். அலி என்பதற்கு மாற்றாகத் ‘திருநங்கை’ என்பது பயன்பாட்டில் வந்துவிட்டது.
இது போல ஆசிரியர் அய்யா அவர்களும் ‘‘நோயாளிகள்’’ (Patients) என்று தற்போது நடைமுறையில் உள்ள சொல்லுக்கு, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (Medical Beneficiaries) என்ற சொல் லைப் பயன்படுத்தினால் அவர்களிடம் (நோயாளிகளி டம்) உள்ள நம்பிக்கை குறைவு மாறக்கூடும் என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மனநலமின்மையே பல நோய்கள் தோன்றுவ தற்கான காரணம். ஆகவே தொடக்கத்திலேயே ஒருவரை மனத்தின் கண் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று எண்ணாமல் மருத்துவம் அளித்தால் சரியாகிவிடும் என்ற மூன்றாவது கையான நம்பிக்கையை ஊட்டுவதாக இச்சொல் அமைந்துள்ளது.
தந்தை பெரியார் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்தது போல நமது ஆசிரியர் அய்யா அவர்கள் நோயாளி என்ற சொல்லாக்கத்தில் நம்பிக்கை குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற சொல்லை உருவாக்கி உள்ளார்கள்.
இக்கலைச் சொல்லைத் தமிழ்ச் சமூகம் ஏற்கும், இச்சொல் நிலை பெறும் என்பதிலும் அய்யமில்லை.
குறிப்பு: கலைமாமணி டாக்டர் சு.நரேந்திரன் அவர்கள் மறைமலை அடிகள் தமிழறிஞர் விருது, ‘ஆனந்த விகடன்’ டாப் –10 விருது, தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவருமாவார்.