‘‘புதுக்கோட்டையில் மேனாள் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்துக்கு, வெள்ளித் தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து வீடு, வீடாகவும், கடைகளுக்கும் சென்று பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை, மேனாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான பழனிசாமி, தமிழ்நாடு முழுதும் மேற்கொண்டு வருகிறார். போகுமிடமெல்லாம், தி.மு.க.,வையும், தமிழ்நாடு அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
‘தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், பா.ஜ.,வும் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்’ என, தொடர்ச்சியாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். இதையே, பா.ஜ.,வின் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் சொல்லி வருகின்றனர்.
ஆனால், ‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்தே ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி அமைத்து, அதில் மற்ற கட்சிகளை இடம் பெறச் செய்வதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல’ என்று பழனிசாமியும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அ.தி.மு.க., – பா.ஜ., இடையே இணக்கமில்லாத சூழல் நிலவுகிறது. ‘இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும்’ என விரும்பும், பா.ஜ.க, தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 3ஆம் தேதியன்று திருநெல்வேலிக்கு வரும் பழனிசாமியை, பெருமாள்புரத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு விருந்து வைக்க முடிவெடுத்துள்ளார்.
அவ்விருந்தில், 700 அ.தி.மு.க., நிர்வாகிகளையும், 300 பா.ஜ., நிர்வாகிகளையும் கலந்து கொள்ள வைக்கவும் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அதேபோல, ‘தமிழ்நாட்டில் இரு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்’ என செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக, தமிழ்நாடு முழுதும் பிரச்சாரம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பயணத்தில், பா.ஜ.,வினரும் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.’’
இந்த செய்திகளை எல்லாம் பிஜேபியின் அதிகாரப் பூர்வமற்ற ஏடான ‘தினமலர்’தான் அப்பட்டமாக வெளியிட்டுள்ளது (24.7.2025)
இரண்டு கட்சிகளின் கூட்டணி எந்த அளவிற்கு திணிக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட சாட்சியமும் தேவையில்லை.
‘‘பழனிசாமி கூட்டத்துக்கு வருமாறு வெற்றிலை – பாக்கு வைத்து அழைப்பு’’ என்று ‘தினமலர்’ தலைப்பிட்டுச் செய்தி வெளியிடுகிறது என்றால் – அதுவும் வெள்ளித் தட்டில் வைத்து பா.ஜ.க. அழைப்பு விடுகிறது என்றால் இதன் பொருள் என்ன?
அதிமுக வெற்றி பெறுவது பா.ஜ.க.வின் நன்மைக்கே! புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள் என்ற நயவஞ்சக நரித் தந்திரம் இல்லாமல் வேறு என்னவாம்?
கூட்டணியில் சேர்ந்த எத்தனை எத்தனைக் கட்சிகளை பிஜேபி பிளந்து தள்ளியிருக்கிறது!
மகாராட்டிரத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (NCP), சிரோமணி அகாலிதளம் (SAD) போன்ற கட்சிகள் பிளவுபட்டதற்குக் காரணமே பிஜேபியின் ‘‘வாதாபி ஆலிங்கனம்’’ அல்லவா! அ.தி.மு.க. விழித்துக் கொள்ளட்டும், ஏன்? அதிமுக ஏற்கெனவே பிளவுபட்டதில் பிஜேபியின் பங்குண்டு என்பதை ம(ற)றுக்கத்தான் முடியுமா?