ராமேசுவரம், ஜூலை.31– ராமேசுவரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
புதிய துறைமுக அலுவலகம்
ராமேசுவரம் மீன்பிடிதுறைமுக அலுவலகம் அருகே துறைமுக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய துறைமுக அலுவலகம் இடிக்கப்பட்டு ரூ. 4 கோடியே 19 லட்சத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது.
இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று (30.7.2025) தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
இந்த புதிய துறைமுக அலுவலகம் திறக்கப் பட்டதன் நோக்கமே ராமேசுவரம்-இலங்கையின் தலைமன்னார் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்குத்தான். ரூ.118 கோடியில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்த பின்னர் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு
40 ஆயிரம் கன அடியாக குறைப்பு
மேட்டூர், ஜூலை 31 மேட்டூர் அணை கடந்த 25-ம் தேதி நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் (29.7.2025) விநாடிக்கு 1,10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (30.7.2025) இரவு 40,500 கனஅடி யாக குறைந்தது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியிலிருந்து நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.25 லட்சம் கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று மாலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
செய்தி சுருக்கம்…
உ.பி.,க்கு நிதி அதிகம்…
தமிழ்நாட்டுக்கு இவ்வளவுதானா?
நிதிப் பகிர்வில் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவுக்கும் குறைவாகவே தமிழ்நாடு பெறுவது உண்மையா என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள நிதி அமைச்சகம், தமிழ்நாட்டுக்கு 4% நிதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பைசா முறையில் நேரடியாக கூறாமல், சதவீத வடிவில் அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதன்படி, அதிகபட்சமாக உ.பி.,க்கு 18%, பீகார் 10% என நிதி அளிக்கப்பட்டுள்ளது.
அலைபேசி வேண்டாம்…
கையை காட்டினாலே போதும்
கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் அடையாளங்கள் மூலம் UPI-யில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறை இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் உள்ளங்கையை காட்டினாலே, பணம் செலுத்தும் முறை ஏற்கெனவே வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இதற்கு அலைபேசியில் ஸ்கேன் செய்யத் தேவையில்லை. நவீன முறையில் ஸ்கேனர் மீது உள்ளங்கையை காட்டினாலே போதும், தானாக பணம் செலுத்தப்பட்டுவிடும். இது எப்படி இருக்கு?
நல்லது செய்ததற்கு
395 நாள் சிறையா?
ம.பி.,யை சேர்ந்த ராஜேஷ், தான் செய்யாத தவறுக்காக 395 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இறுதியாக நீதிமன்றமே ஒரு வழக்குரைஞரை நியமித்து, அவர் நிரபராதி எனக் கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட, இவர் உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அப்பெண் இறந்துவிட, இவர் தான் அதற்கு காரணம் என காவல்துறையினர் ராஜேஷை கைது செய்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம்: கனடா பிரதமர்
அய்நா மன்றத்தில் வரும் செப்டம்பரில் பாலஸ்தீனத்தை இறை யாண்மை கொண்ட தனி நாடாக அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். 2026-இல் பொதுத்தேர்தலை நடத்துவோம், ஹமாஸ் அதில் பங்கேற்காது என பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உறுதியளித்த பின் கனடா இத்தகைய அறிவிப்பை வெளியிட் டுள்ளது. முன்னதாக, ஃபிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டன.