சென்னை, ஜூலை 31- பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்துக்காக கூகுள், யுனிட்டி நிறுவனங்கள்-தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
‘நான் முதல்வன் திட்டம்’
2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சரால் ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில் துறைக்கு தயாரான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் லட்சிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போதுவரை 41 லட் சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மைக்ரோ சாப்ட், அய்.பி.எம்., ஓரகல், கூகுள், சிஸ்கோ, எச்.சி.எல்., இன்போசிஸ், ஏ.டபுள்யூ. எஸ்., சைமன்ஸ், பானக், டசால்ட், எல் அண்ட் டி போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, பிக் டேட்டா, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷிங் லேனிங், இன்டஸ்டிரி 4.0. பில்டிங்இன் பர்மேசன் மாடலிங் போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு திறன் பயிற்சி
இந்த வரிசையில் தமிழ் நாட்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்காக கூகுள் பிளே மற்றும் யுனிட்டி கேம் டெவலப்பர் டிரெய்னிங் புரோகிராம்” என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கூகுள் பிளே, யுனிட்டி மற்றும் முன்னணி கேம் துறையினர் இணைந்து சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் ஆகியவற்றில் உலகத்தரத்திலான தொழில்நுட்ப திறன்களை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கணினி அறிவியல் துறையில் இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கும், நடப்பாண்டில் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பு ஆகும்.
ஒப்பந்தம்
இதற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள், யுனிட்டி தமிழ் நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் 29.7.2025 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. இதில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்திகுமார் பாடி, கூகுள் தரப்பில் குணால்சோனி, அதிதி சதுர்வேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் இலவச யுனிட்டி லைசென்ஸ், இலவசப் பயிற்சி தேர்வு தயாரிப்பு அமர்வுகள் தொழில் நிபுணர் களுடன் சந்திப்பு மற்றும் உரையாட வாய்ப்பு, ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீடு களுக்கான வாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
முதல்கட்டமாக 250 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவருக்கு ரூ.32 ஆயிரம் மதிப்புடைய யுனிட்டி லைசென்ஸ் மூலம் இந்த பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது.
பாரா விளையாட்டு மைதானம்
பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலும், மதுரை, திருச்சி, கடலூர், நெல்லை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தலா ரூ. 1 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா- விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தபணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29.7.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.