சென்னை, ஜுலை 30- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை அரசின் பல்வேறு சேவைகளை கேட்டு 12.65 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர்.
வீட்டருகே சேவை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் முகவரித்துறை மூலமாக அந்தத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் முகவரித்துறை மூலமாக ஏற்கெனவே 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளன.
அதன் பிறகு மக்களுடன் முதலமைச்சர் திட்டம், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங் குடியினர் வசிக்கும் பகுதிகளில் முகாம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் மூலம் லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த முகாம்களின் தொடர்ச்சியாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முகாம்கள், மக்களின் வீட்டருகே நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் தங்களுக்கு தேவையான அரசின் சேவைகளை மக்கள் விண்ணப்பமாக அளித்தால் அவற்றிற்கு உடனடியாக தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களுக்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
மக்கள் பெறும்
சேவைத் துறைகள்
அந்தவகையில், நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் வழியாக? 46 சேவைகளும் அளிக்கப் பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட பல அரசு துறைகளின் சேவையை மக்கள் பெற முடியும்.
மனுக்களுக்குத் தீர்வு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் முதல்கட்ட முகாம்கள் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வரை நடக்கிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கி இதுவரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற முகாம்களில் 12 லட்சத்து 65 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 5 லட்சத்து 88 ஆயிரம் மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் கோரும் மனுக்களாகும். பட்டா மாற்றம், பல்வேறு வகை சான்றிதழ்கள் ஆகியவை தொடர் பாகவும் இந்த முகாம்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மனுக்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் மேல் முறையீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.