மேட்டூர், ஜூலை 30- நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் 5ஆவது நாளாக மேட்டூர் அணை முழுகொள்ளளவுடன் காட்சி அளிக்கிறது.
உபரிநீர் வெளியேற்றம்
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கருநாடக மாநில அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் தங்களது முழு கொள்ளளவை எட்டியதோடு, அங்கிருந்து உபரிநீர் தமிழ்நாடு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த வாரம் படிப்படியாக உயர்ந்தது. அதன்படி கடந்த 27ஆம் தேதி ஆற்றில் வினாடிக்கு 92 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பரிசல் இயக்க தடை
இந்த நீர் படிப்படியாக உயர்ந்து நேற்று (29.7.2025) வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கடந்த 27ஆம் தேதி முதல் நேற்று வரை 3ஆவது நாளாக ஓகேனக்கல்லில் உள்ள அய்ந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதால் தமிழ்நாடு-கருநாடக எல்லையான பிலிகுண்டுலு மற்றும் காவிரி கரையோரங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழுக் கொள்ளளவை
எட்டிய மேட்டூர் அணை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடிவரும் தண்ணீர், டெல்டா விவசாயிகளின் உயிர்நாடியான மேட்டூர் அணைக்கு வருகிறது. இதன்காரணமாக கடந்த 25-ந்தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை இந்த ஆண்டு 4-வது முறையாக எட்டியது.
நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1லட்சத்து 10 ஆயிரத்து 500 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதே நிலையில் நீடிப்பதால் மேட்டூர் அணை நேற்று 5-வது நாளாக தனது முழு கொள்ளளவுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 92 ஆயிரத்து 100 கன அடியும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 400 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து நீடிப்பதால் சேலம் உள்பட 11 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.