ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை உண்டாக்கி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்துக!

2 Min Read

நெல்லையில் நடந்த ஆணவக் கொலை!
ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா?

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மீண்டும் ஒரு ஜாதி ஆணவக் கொலை!

ஸநாதனத்தின் கோர முகமான ஜாதியின் கொடிய விளைவுகளில் ஒரு துளி தான் ஆணவப் படுகொலைகள். ஜாதியின் பெயரால் நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்த்த பின்னும், சட்ட ரீதியாக இன்னும் ஜாதி ஏற்கப்படுகிறதே, அது மதம் என்னும் பாதுகாப்புக்குள் இன்னமும் பதுங்கிக் கொண்டிருக்கிறதே, இது அறிவார்ந்த ஜனநாயக சமூகத்தால் ஏற்கத்தக்கதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (2), 25 (1), 26, 29 (1), (2), 368 ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டி, அதனைக் கொளுத்தும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்ததன் அடிப்படையில், 10000 பேர் கொளுத்திச் சிறை சென்றார்களே, அது ஜாதி ஒழிப்புக்காகத் தானே!

தந்தை பெரியாரின் கேள்விக்கு பதில் இல்லையே!

“ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?’’ என்று 68 ஆண்டுகளுக்கு முன் 1957-இல் கேட்ட தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே!

மூளையில் ஏறியிருக்கிற
ஜாதிய நஞ்சு!

இந்த நவீன யுகத்திலும், ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா? பொறியாளர் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். படித்து, காவல்துறை பணியில் இருக்கும் குடும்பம் இத்தகைய கொலைக்குப் பின்னால் இருக்கிறது; இளைஞர் ஒருவர் ஆணவக் கொலையைச் செய்திருக்கிறார் என்றால் ஜாதிய நஞ்சு எப்படி மூளையில் ஏறியிருக்கிறது, சிந்தனையை எப்படி மழுங்கடித்திருக்கிறது என்பது ஆழ்ந்த கவலையோடும், கவனத்தோடும், தீவிரத்தோடும் அணுக வேண்டிய ஒன்றாகும்.

வருமுன் காப்பதற்கான ஏற்பாடுகளும்
சட்டத்தில் இடம் பெற வேண்டும்

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று, நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா முழுக்க இந்தச் சட்டம் அவசியமாகிறது. சட்டம் வந்தாலும், அதனை முழுமையாக, சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொடுமைகள் நடந்தபின் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகளை  எடுக்க மட்டுமல்ல; வரும் முன் காப்பதற்கான ஏற்பாடுகளுக்கும் சட்டத்தில் இடம் வேண்டும். ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாம் ஏற்க வேண்டிய உறுதி!

நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவினை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய கொடூரங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் இன்னும் முனைப்புடன் ஈடுபடுவதே நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
30.7.2025  

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *