சென்னை, ஜூலை 29- விஜய்யுடன் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி சேர வேண்டும் என்றும். பா.ஜனதா கூட்டணி ஆபத்தானது என்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுப்பு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து
டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும், மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அதிமுக அணியும் இணைந்து போட்டியிட்டனர். இந்தச் சூழ்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ள அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத் துள்ளது. இதனால் பா.ஜனதா அணியில் அங்கம் வகித்த டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இதற்கிடையே தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். தனது தொகுதி பிரச்சினை குறித்து பேசவும், பிரதமரை வரவேற்று, வழியனுப்பவும் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அங்கம் வகிக்கும் மேனாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பா.ஜனதாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
ஓ.பன்னீர் செல்வம் தன்னை மதிக்காத பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆபத்தானது. பா.ஜனதாவை வளர்க்கக்கூடிய எந்த கூட்டணியும் பலன் அளிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதான் பிஜேபி ஆட்சி!
ராஜஸ்தானில் பழுது பார்க்க வேண்டிய நிலையில் 2710 பள்ளிகள் கட்டடங்கள்
கல்வித் துறை ஆய்வில் தகவல்
ஜெய்ப்பூர், ஜூலை 29- ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பள்ளி கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.அந்தவகையில் 2,710 பள்ளிகள் மிகப்பெரிய அளவுக்கு பழுது பார்க்க வேண்டிய அவசர நிலையில் இருக் கின்றன. இதற்காக ரூ.254 கோடி ஒதுக்கியும், நிதித்துறையின் ஒப்புதல் கிடைக்காததால் நீண்ட காலமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த ஜலாவர் மாவட்டத்தில் மட்டுமே 83 பள்ளிக் கட்டடங்கள் பெருத்த சேதமடைந்திருப்பதை கல்வித்துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை இந்த பகுதியின் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான பிரதாப் சிங் சிங்வி சாடியுள்ளார். சில பள்ளிகளின் மோசமான நிலை குறித்து கல்வி அமைச்சருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.