காஞ்சிபுரம், ஜூலை 29- நீட் தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருந்த 18 வயது மாணவி ஒருவர், தனக்கு மருத்துவ இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது சாதிக் (வயது 55) என்பவரின் மகள், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து நீட் தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தனக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா கிடைக்காதோ என்ற மன உளைச்சலில் அந்த மாணவி இருந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், வீட்டில் தொழுகை செய்வதாகக் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்ற மாணவி, மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையிலும், இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா கிடைக்காதோ என்ற அச்சத்தில் ஒரு மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை
ஓடிபி தகவல்களைப் பெற உயர் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு
புதுடில்லி, ஜூலை 29- ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கத்தை தி.மு.க. தொடங்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. இதற்காக பொது மக்களிடம் இருந்து ‘ஓ.டி.பி.’ பெறுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உறுப்பினர் சேர்க்கைக்காக பொதுமக்களிடம் ‘ஓ.டி.பி.’ பெற இடைக்கால தடை விதித்து கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் தடையை நீக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தில் ராஜ்குமார் சார்பில் வழக்குரைஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பார்த்திபன் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ்ப் பேராயம், சாகித்திய அகாதெமி நடத்திய குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு கருத்தரங்கம்
சென்னை, ஜூலை 29- எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராயம், சாகித்திய அகாதெமி, மற்றும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆகியோர் இணைந்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டுக் கருத்தரங்கத்தை நேற்று (28.7.2025) நடத்தினர்.
இந்நிகழ்வு மாணவர்களிடையே கல்வி கற்பதன் நோக்கத்தையும் எண்ணத்தையும் வலுப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அடிகளாரின் பேச்சுத்திறமை, கொள்கைகள், மற்றும் அவரின் நற்பண்புகளை இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மத்தியில் பகிரப்பட்டது.
இந்நிகழ்வின் நோக்கவுரையை வழங்கிய இரா. தாமோதரன் (அறவேந்தன்), ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஆலோசனைக்குழு, சாகித்திய அகாதெமி, குன்றக்குடி அடிகளாரின் பெருமைகளை பகிர்ந்தார். மேலும், “எதுவாக இருந்தாலும் அறிவியல் கண்ணோட்டத்தில் காண குன்றக்குடி அடிகளார் கூறுகிறார்; நம்முடைய வாழ்க்கையை மாற்ற கல்வியை மட்டுமே கையில் எடுக்கவேண்டும், இதற்கு மாணவர்கள் அனைவரும் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க முயற்சி செய்யுங்கள்,” என்றார்.
கருத்தரங்கின் தொடக்க விழாவில் சிறப்புரை வழங்கிய பாரதிகிருஷ்ணகுமார், “புத்தகங்கள் கொடுத்து மனிதர்களை நெறிப்படுத்திய பெருமை அடிகளாரையே சேரும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.