இந்தியாவில் ஜாதிகள் – 4
முதலாவது, அவளை இறந்துபோன அவளது கணவனின் சிதையில் எரித்துவிடுவது. அதன் மூலம் அவளை அகற்றிவிடுவது. ஆனால் ஆண், பெண் எண்ணிக்கை ஏற்றத்தாழ்வு என்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு இது நடைமுறையில் ஒத்துவராத வழியே ஆகும். சில நேரங்களில் இது பலனளிக்கலாம். சில நேரங்களில் பலனளிக்காமல் போகலாம். எனவே உபரியாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இவ்வாறு வழிசெய்ய முடியாது. ஏனெனில், இது எளிமையான தீர்வு என்றாலும், நிறைவேற்ற இடர்ப்பாடானது. ஆயினும் உபரியான பெண் (கைம்பெண்) நீக்கப்படாமல் குழுவிலேயே இருந்தால் இரண்டு இன்னல்கள் உள்ளன. அவள் ஜாதிக்கு வெளியே மணம் செய்துகொண்டு அகமணமுறையை மீறலாம்; அல்லது ஜாதிக்குள்ளேயே மணம் செய்துகொண்டு, ஜாதியில் மணமாகவேண்டிய மற்ற பெண்களுக்குப் போட்டியாக அவர்களின் திருமண வாய்ப்பைக் குறைக்கலாம். எப்படியானாலும் அவள் ஓர் அச்சுறுத்தலாகவே இருக்கிறாள்; எனவே இறந்த கணவனுடன் அவளை எரிக்க முடியாவிட்டால் அவளுக்கு வேறு ஏதேனும் வழி செய்தாக வேண்டும்.
இரண்டாவது வழி, எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாக இருக்கும்படி அவளைக் கட்டாயப்படுத்துவது. நடைமுறைப் பலனை வைத்துப் பார்த்தால் கட்டாயக் கைம்பெண் முறையைவிட எரித்துவிடுவது நல்ல வழியாகும். எரித்துவிடுவதன் மூலம் உபரியாக இருக்கும் பெண்ணால் ஏற்படக்கூடிய மூன்று வகையான தீங்குகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிடுகிறது. அவள் இறந்து ஒழிந்துவிடுவதால் ஜாதிக்குள்ளேயோ வெளியேயோ மறுமணம் செய்துகொண்டு சிக்கல் ஏற்படுத்த இடமில்லாமல்போகும். எனினும் இதைவிட கட்டாயக் கைம்பெண் முறை நடைமுறை சாத்தியமாக இருப்பதால், கைம்பெண்ணை எரிப்பதைவிட கட்டாயக் கைம்பெண் முறை நல்லதாகிறது. எரிப்பதைவிட இது அதிக மனிதத்தன்மை உள்ளதாக இருப்பதுடன் எரிப்பதைப் போலவே மறுமணத்தினால் விளையும் தீங்குகளையும் தடுக்கிறது. ஆனால் குழுவின் ஒழுக்கத்தைப் பாதுகாக்க இது உதவுவதில்லை. அவள் கட்டாயமாகக் கைம்பெண்ணாக வைக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் சட்டப்படியான மனைவியாயிருப்பதற்கு அவளுக்கு உள்ள இயற்கையான உரிமை மறுக்கப்படுவதால் ஒழுக்கக்கேடான நடத்தைக்குத் தூண்டுதல் அதிகமாகிறது. ஆனால் இது தீர்க்கமுடியாத சிக்கல் அல்ல. அவளை சீரழிந்த நிலைமைக்கு உட்படுத்தி, அவள் மீது யாருக்கும் ஆசை ஏற்படாமல் செய்துவிட முடியும்.
தன்னை ஒரு ஜாதியாக ஆக்கிக்கொள்ள விரும்பும் ஒரு குழுவிலுள்ள உபரியான ஆண் (மனைவியை இழந்தவன்) தொடர்பான சிக்கல் உபரியான பெண் பற்றிய சிக்கலைவிட அதிக முதன்மையானது; பல மடங்கு அதிகம் இடர்ப்பாடானது. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே பெண்ணைவிட ஆணின் கை ஓங்கியே இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆணே ஆதிக்கமுள்ளவனாகவும் பெண்ணைவிட அதிக செல்வாக்கு உடையவனாகவும் இருக்கிறான். சமூகத்தில் ஆணின் விருப்பங்களுக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதேநேரம் பெண் எல்லா வகையான அநியாயமான மத, சமூக, பொருளாதாரத் தடைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறாள். ஆனால் இந்தத் தடைகளை விதிக்கும் ஆணோ இவற்றில் எந்தத் தடைகளுக்கும் உள்ளாவதில்லை. நிலைமை இப்படி இருப்பதனால் ஜாதியில் உபரிப் பெண்ணை நடத்துவதுபோல உபரி ஆணை நடத்திவிட முடியாது.
இறந்த மனைவியுடன் ஆணை எரித்து விடும் கருத்தில் இரண்டு இடர்ப்பாடுகள் உள்ளன. முதலாவதாக, அவன் ஆண் என்ற காரணத்தினா லேயே அதைச் செய்ய முடியாது. இரண்டாவதாக, அப்படி எரித்துவிட்டால், வலுவான ஓர் ஆணை ஜாதி இழந்துவிடும். எனவே அவனுக்கு இணக்கமாக வழி செய்வதற்கு இரண்டு தீர்வுகள்தான் உள்ளன. ‘இணக்கமாக’ என்று நான் கூறுவதற்குக் காரணம் அவன் குழுவுக்கு ஒரு சொத்தாக இருக்கிறான் என்பதுதான்.
அவன் குழுவுக்கு முக்கியத்துவம் கொண்டிருந் தாலும், உட்குழு மணமுறை அவனைவிட முக்கியமானது. எனவே, இச்சிக்கலுக்கு காணப்படும் எந்தத் தீர்வும் இந்த இரண்டையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். பெண்ணை கைம்பெண்ணாக இருக்கக் கட்டாயப்படுத்துவதைப்போல. ஆணையும் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மனைவியற்றவனாக இருக்குமாறு கட்டாயப் படுத்தலாம்; கட்டாயப்படுத்த வேண்டும் என்பதைவிட தூண்ட வேண்டும் என்று சொல்லலாம். இது முற்றிலும் இடர்ப்பாடான தீர்வு அல்ல; ஏனென்றால் கட்டாயம் எதுவும் இல்லாதபோது, சிலபேர் தாங்களே மண வாழ்க்கையை நாடாமல் தனிமை வாழ்க்கையில் மகிழ்ச்சி காணக்கூடும்; அல்லது அதைவிட ஒருபடி மேலே சென்று தாங்களாகவே இந்த உலகையும் இதன் இன்பங்களையும் துறந்துவிடலாம். ஆனால் மனித இயல்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தத் தீர்வு நடைமுறைக்கு வருவது அரிதாயிருக்கும்.
ஆனால், அவன் குழுவிலேயே இருந்துகொண்டு அதன் செயல்பாடுகளில் கலந்துகொண்டுவந்தால், அவன் குழுவின் ஒழுக்கத்துக்கு பெருந்தீங்காக இருப்பான். வேறொரு வகையாகப் பார்த்தாலும் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது வெற்றிபெற்றாலும், ஜாதியின் பொருளாதாய நலன்களுக்கு அது பலனுள்ளதாக இருக்காது. உண்மையிலேயே, அவன் மணவாழ்க்கையை மறுத்து உலகைத் துறந்துவிடுவானானால், அவன் இந்த உலகில் இருப்பதனால் ஜாதிக்கும் அகமணமுறைக்கும் ஏற்படக்கூடிய தீங்கு இல்லாமல்போகும். ஆனால், துறவி என்ற நிலையில் அவனது ஜாதியின் பொருளாதாய நலனைப் பொறுத்தமட்டில் அவன் எரிக்கப்பட்டு இறந்தவனே ஆவான். ஒரு ஜாதியானது, ஆற்றல்வாய்ந்த குழு வாழ்க்கை வாழவேண்டுமானால், அதன் எண்ணிக்கை வலிமை குறையாமலிருக்க வேண்டும். இந்த அளவுக்கு எண்ணிக்கை இருக்க வேண்டும் என்று ஒருபுறம் ஆசை வைத்துக்கொண்டு, மறுபுறம் திருமணத்தை மறுக்கும் முறையைச் செயல்படுத்துவது என்பது இரத்தமின்மையால் நோயுற்ற உடல் உறுப்பைச் சீர்செய்வதற்கு, உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சையைச் செய்வதற்குச் சமமாகும்.
எனவே, குழுவில் உபரியாயிருக்கும் ஆண் மீது மண மறுப்பு வாழ்க்கையைச் சுமத்துவது கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் பயனற்றது. அவனை சமற்கிருத மொழி குறிச்சொல்லில் கிரகஸ்தன் (குடும்பத்தை பெருகச் செய்பவன்) என்ற நிலையில் வைப்பது ஜாதியின் நலனுக்குப் பொருத்தமானது. ஆனால் அவனுக்குச் ஜாதிக்குள் ளேயே மனைவி கிடைக்கச் செய்வதுதான் சிக்கல். ஒரு ஜாதியில் ஆண் பெண் விகிதம், ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற அளவிலேயே இருப்பதால் யாரும் இரண்டு முறை மணம் செய்துகொள்ளும் வாய்ப்பைப் பெற முடியாது.
எனவே அவனுக்கு ஜாதிக்குள்ளேயிருந்தே மனைவி கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், முற்றிலும் தனது எல்லைக் கோட்டுக்குள் வாழும் ஒரு ஜாதியில் திருமணத்துக்குத் தகுந்த ஆண்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் திருமணத்துக்குத் தகுந்த பெண்கள் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் உபரியாய் இருக்கும் ஆணை, குழுவுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டுமானால், திருமணத்துக்குத் தகுதியாகாத பெண்களிலிருந்து அவனுக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுப்பதுதான் வழியாகும். இதன் மூலம் அவனைச் ஜாதிக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும். ஜாதியிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறிக் கொண்டேயிருப்பதால் ஏற்படக்கூடிய எண்ணிக்கைக் குறைவைத் தடுக்க முடியும். அசுமணமுறையையும் குழுவின் ஒழுக்கத்தையும் பாதுகாக்க முடியும்.
ஆண், பெண் எண்ணிக்கை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்தி வைப்பதற்குப் பின்வரும் நான்கு வழிகள் உள்ளன என்று தெரிகிறது. 1) இறந்த கணவனுடன் கைம்பெண்ணை எரித்து விடுவது, 2)எரித்து விடுவதைவிட கடுமை குறைந்த வடிவமான கட்டாயக் கைம்பெண் முறை, 3) மனைவியை இழந்த ஆண் மறுமணம் செய்துகொள்வதைத் தடுப்பது .4) அவனை, திருமணத்துக்குத் தகுதியாகாத ஒரு பெண்ணுடன் மணம் செய்துகொள்ளச் செய்வது. கைம்பெண்ணை எரித்துவிடுவதும் மனைவியை இழந்தவனை மறுமணம் செய்துகொள்ளாமல் வாழச் செய்வதும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல அகமணமுறையைப் பாதுகாக்க உதவுமா என்பது அய்யமே; என்றாலும் இவை எல்லாமே அதற்கான வழிகளாகச் செயல்படுகின்றன. ஆனால், வழிகள் விசைகளாக எய்தப்படுவது அல்லது செயல்படுத்தப்படுவது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்படியானால் இந்த வழிகளை உருவாக்கும் நோக்கம் என்ன? அவை அகமணமுறையை உருவாக்கி, அதைப் பாதுகாக்கின்றன. ஆனால் அகமணமுறையையும் ஜாதியையும் பற்றிய பல்வேறு வரையறைகளைப் பகுத்தாய்வு செய்ததில் அவை இரண்டும் ஒன்றுதான் என்பதை நாம் கண்டோம். இவ்வாறாக இந்த வழிமுறைகள் ஜாதியுடன் இணைந்துள்ளன, ஜாதியில் இந்த வழிமுறைகள் அடங்கியுள்ளன.
– தொடரும்
‘அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்’ ஜாதியம்: வரலாறு – ஆய்வு (தொகுதி 1)