நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது வரிசை கட்டிவரும் குற்றச்சாட்டுகள்

3 Min Read

அமெரிக்கா செல்லவிருந்த தனது சகோதரி கார் ஏற்றி ஒருவரைக் கொலை செய்த பிரச்சினையில், தானே வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வேதப்படி வாழும் தனது நண்பர் ஒருவர், நீதிமன்றத்தில் சரண்டர் ஆனதாகவும், அந்த வழக்கில், தனது மற்றொரு நீதிபதி நண்பர் ஒருவர் அவரை விடுவித்ததாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் புகார் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதும், தன் மீதான அதே குற்றச்சாட்டிற்காக வேறு ஒரு நிர்வாக விசாரணை என்ற பெயரில் தானே அதனை விசாரிப்பவராகவும் இருந்து செயல்படும் முறை ஏற்கெனவே பலரின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சட்ட அத்துமீறல் குறித்து சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள், மேனாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்துக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கும் வேளையில், ஜூலை 19 அன்று ஓம் சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்திய வேத மாநாட்டில் பங்கேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தியாகராய நகர் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த வேத மாநாட்டில் தான் ஒரு வழக்கைக் கையாண்ட விதம் குறித்துப் பேசியுள்ளார். அதாவது, சனாதன தர்மப்படி வாழும் தனது நண்பர் ஒருவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசியதாவது:

“அவர் சகோதரி அமெரிக்காவில் இருக்கறதுனாலே அவங்க நன்னா கார் ஓட்டுவாங்க.

(இந்தியா வந்திருக்கும்போது) வந்துண்டு இருக்கும் போது சடனா (திடீரென்று) ஒரு இடத்துல கன்ட்ரோல் போச்சா, என்ன ஆச்சுன்னு தெரியல… ஒரு ஆள் மேல அந்த கார் மோதிடுத்து! மோதி, அந்த ஆள் அவர் இறந்தும் போயிடறாரு,

பாவம் அந்த நபர், பிறகு என்ன ஆகிறது? சகோதரிக்கு அடுத்த வாரம் திரும்ப அமெரிக்காவுக்குப் போயாகணும். எனது நண்பர், வேதப்படி இருக்கிறவர். அவர் என்ன பண்றார்? நேரா போலீஸ் ஸ்டேசன் நேரா போய்ட்றாரு.  ‘நான் தான் அஜாக்கிரதையா கார் ஓட்டிட்டேன். இந்த ஆக்ஸிடெண்ட ஏற்படுத்திட்டேன்.’ அப்படின்னு அந்தப் பழியைத் தன் மேல சுமந்துண்டு, போலீஸ் ஸ்டேசனில் சரண்டர் ஆறாரு. இவர் மேல எப்.அய்.ஆர் பதிவாகிறது. ஒரு சாட்சி கூட, நான் சொன்ன இந்த நபர், அவரையோ அவரது சகோதரியையோ அய்டெண்டிபையே (Identify) பண்ணல.

அந்த அப்பீல் கோர்ட்டில நீதிபதியா உட்கார்ந்திருக்கிறது யார்ன்னா என்னோட கூட படிச்சவரு – கிளாஸ்மேட். சாட்சியே இல்லை, இந்த கேஸே நிக்கல, அந்த நீதிபதி என்னோட நணபரை விடுதலை பண்ணிட்டார். அன்னைக்குத்தான் நான் உணர்ந்தேன், ‘வேதத்தை நாம காப்பத்திட்டா… வேதம் நம்மளைக் காப்பாத்தும்’ அப்படின்னு உணர்ந்தேன்”

ஜி.ஆர்.சுவாமிநாதனின் இந்தக் கூற்று, பல கேள்விகளை எழுப்புகிறது. அவரது கூற்றுப்படி, உண்மையான கொலைக் குற்றவாளியைத் தப்ப வைப்பதற்காகத் தானே குற்றத்தை ஒப்புக்கொண்டது ஒரு குற்றமல்லவா?

மேலும், குற்றவாளி என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பதையும், வேதம் படித்தவர் என்பதையும் காரணம் காட்டி, தன்னோடு பள்ளியில் படித்த நீதிபதியாக இருக்கும் ஒருவரிடம் பேசி, தண்டனையில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது, சட்ட விதிகளுக்குப் புறம்பான செயல் அல்லவா? என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.

மேலும், இந்தச் செயல்களை இவரே பெருமையோடு பொது வெளியில் பேசியுள்ளது, நீதித்துறையின் மாண்புக்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான விவாதம் நடைபெற்று வருகிறது, நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஸநாதன அடிப்படையிலும், மனு தர்ம அடிப்படையிலும் தீர்ப்பு வழங்குவதற்குச் சட்டம் அனுமதிக்கிறதா?

ஒரு நீதிபதியாய் இருக்கைக்  கூடியவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, குற்றவாளியைக் காப்பாற்றினார் என்றால், அது மிகப் பெரிய குற்றம்தானே!

நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன்மீது ஈசல்கள் புறப்பட்டதுபோல அடுக்கடுக்காக அடுத்தடுத்து குற்றக்கணைகள் பாய்கின்றன.

மக்களும் பரவலாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்வார்களா என்று தெரியவில்லை!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *