வெறிநாய்க் கடிக்கு மருத்துவத் தீர்வு உண்டா?

6 Min Read

வெறிநாய்க்கடி நோய் ‘ரேபீஸ்’ (Rabies) என்று அழைக்கப்படுகிறது. எல்லா நாய்க் கடிகளும் ‘ரேபீஸ்’ அல்ல. வெறியுண்ட நாய்க் கடி மட்டுமே ரேபீஸ் என்றும், வெறி நாய்க்கடி நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

நோயின் காரணம்:

வெறிநாய் கடித்தால் மட்டுமே வரும் நோய் இது. ரேபீஸ் வைரஸ் தொற்றுள்ள வெறி நாய் கடித்தால் மனிதனுக்கு மட்டும் இந்நோய் உண்டாகும் என்ற நிலையும் இல்லை. பூனை, நாய், கழுதை, மாடு போன்ற எந்த மிருகமும் இந்நோயால் பாதிக்கப்படலாம். அவற்றின் எச்சில், பற்கள், நகக் கண்கள் ஆகிய பகுதிகளில் இந்நோய்க் கிருமிகள் இருக்கும். நோயுற்ற மிருகம் இன்னொரு மிருகத்தைக் கடித்தால், கடிபட்ட மிருகமும் நோயுற்றுவிடும். வெறிபிடித்த இந்த மிருகங்கள், அருகில் வரும் மிருகங்கள், மனிதர்கள் ஆகியவற்றைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வோடேயே அலைந்து கொண்டிருக்கும். வெறியுண்ட நாய் கடிக்கும் பொழுது பரவும் இந்நோய் பூனை போன்ற பாதிப்படைந்த மிருகங்கள் பிராண்டுவதாலும் உண்டாகும். மிருகங்களிடமிருந்து தான் இந்நோய் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது. அதனால் நோயாளியிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழக வேண்டும். மனிதர்கள் உடலில் ஏதேனும் காயம் இருக்கும் நிலையில் நோயுற்ற வீட்டு நாய், புண் இருக்கும் இடத்தில் நக்கும்பொழுது, நோய்க் கிருமிகள் உடனே பரவும். நோய்த் தாக்குதல், கடியின் தீவிரத் தன்மைக்கேற்ப வேகமாகும். அதிக இடங்களில் கடிபட்டால் ஏராளமான வைரஸ்கள் இரத்தத்தில் கலந்து நோயின் தீவிரத் தன்மை அதிகரிக்கும். சாதாரணமாக கடி ஏற்பட்ட பின், பத்து நாட்கள் முதல் 60 நாட்களில் இந்நோய் உடல் முழுவதும் பரவும்.

நோயின் அறிகுறிகள்

நாய் கடித்தவுடன் கடிவாயில், எரிச்சல், வலி முதலியவை இருக்கும். பிறகு சரியாகிவிடும். பத்து நாட்கள் கழிந்ததும், முதலில் காய்ச்சல் ஏற்படும். கடிபட்ட இடத்தில் மரமரப்பு ஏற்படும். ஓரிரு நாட்களிலேயே உடலின் சதைப் பகுதிகள் அனிச்சையாக சுருங்கத் துவங்கும். அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். விழுங்கு தசைகள் சுருங்குவதால் உணவு விழுங்க முடியாத நிலை ஏற்படும். மன உளைச்சலும், எரிச்சலும் அடையும் நோயாளி, வெளிச்சம், சத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவார். ஆரம்பத்தில் வெளிச்சம், சத்தம் போன்றவற்றால் ஏற்படும் மன உளைச்சல், எரிச்சல் போன்றவை குறைந்து, தசைச் சுருக்கம் போன்றவை தோன்றத் துவங்கும். இந்நோயின் அறிகுறிகளிலேயே இந்த தசைச் சுருக்கம்தான் மிகவும் கொடூரமானது. ஆரம்பத்தில் வெளிச்சம், சத்தம் போன்றவற்றால் ஏற்படும் தசைச் சுருக்கம் (Spasm), தண்ணீரால் ஏற்படத் துவங்கும். ஆரம்பத்தில் தண்ணீரில் நனைந்தால் சுருக்கம் ஏற்படும். பிறகு தண்ணீரைப் பார்த்தாலே ஏற்படும். பின் தண்ணீர் விழும் சத்தம் கேட்டாலே தசைச்சுருக்கம் உண்டாகும். அடுத்த கட்டத்தில் தண்ணீர் என நினைத்தாலே சுருக்கம் ஏற்பட்டு விடும். எச்சிலில் உள்ள தண்ணீர் கூடத் தொண்டைச் சதைகளில் சுருக்கத்தை ஏற்படுத்தி மிகவும் தொல்லை உண்டாக்கும். இந்த நிலையை ‘தண்ணீர் பயம்’ (hydrophobia) எனக் குறிப்பிடுவர். தண்ணீரால் ஏற்படும் தசைச்சுருக்கம் மெல்ல மெல்ல முக்கிய தசைப் பகுதிகளுக்குப் பரவும். மூச்சுக் குழாயைச் சற்றியுள்ள தசைப்பகுதிகள், உதரவிதானம் போன்ற தசைப் பகுதிகளிலும் பரவி மூச்சு விட முடியாமல், மூச்சடைப்பு ஏற்படும். அறிகுறிகள் தோன்றத் துவங்கி ஒரு வாரத்தில் மூச்சுக் குழாய் சதைகளின் பாதிப்பால் மரணம் ஏற்படும்.

மருத்துவம்

நோயறிதல்

நாய்க் கடிக்கு ஆளானவர்களோ, பிறரோ கடித்த நாயை உடனே கொன்றுவிடக்கூடாது. அந்நாயை 10 நாட்களுக்கு கட்டிப்போட்டோ, தனியான இடத்தில் வைத்தோ கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் நாய் செத்தால், ரேபீஸ் நாய் காரணமாக இருக்கலாம். சோதனைச் சாலையில் இறந்த நாயின் மூளைப் பகுதியை ஆய்வர். அதில் நெக்ரி அணுக்கள் இருக்கிறதா என ஆய்வர். அது இருந்தால் நாய், ரேபீஸ் நோய் தாக்கியது எனக் கண்டறிவர். ரேபீஸ் நோய்வாய்ப்பட்ட நாய் கட்டாயம் பத்து நாட்களில் இறக்கும். கடித்த நாய் சாகாவிட்டால் அது ரேபீஸ் நோயால் தாக்கப்படவில்லை என முடிவெடுக்கலாம்.

மருத்துவம்

சாதாரணமாக மற்ற வைரஸ் நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவம் போன்று இல்லை – ரேபீஸ் நாய்க்கடிக்கான மருத்துவம். ரேபீஸ் கடித்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடுமானால், உடனே நாய்க்கடி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாய்க் கடிவாயைச் சுத்தமாகக் கழுவி மருந்திட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் உறுதியாக நோயிலிருந்து நோயாளியைக் காப்பாற்ற முடியும். அதிக அளவில் கடிபட்டிருக்கும் நோயாளிக்கு 5000 யூனிட்கள் தடுப்பு மருந்தை, ஒரே ஊசி மூலம் செலுத்துவர். சில நேரங்கள் 5000 யூனிட் மருந்தை கடிவாயைச் சுற்றி ஊசி மூலம் செலுத்துவர். சாதாரண காயங்களோடு கூடிய நோயாளிக்கு குறைந்த அளவு மருந்தை ஊசி மூலம் தொப்புளைச் சுற்றிப் போடுவர். சில நேரங்கள் 2 முதல் 10cc வரை போட வேண்டியிருப்பதால் வயிற்றுப் பகுதியில் ஊசி போட வேண்டியுள்ளது. கடியின் தீவிரத்தைப் பொறுத்து 2 முதல் 14 நாட்களுக்கு நாள்தோறும் ஓர் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியின் அளவு, நோயாளியின் வயது, கடியின் அளவு, மருத்துவம் துவக்கப்படும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிடப்படும். மருத்துவரின் ஆலோசனைப்படிதான் மருந்தைப் பயன்படுத்த வேண்டும். இம்மருந்தை முதலில் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டர் என்ற மருத்துவ அறிஞர். இவரின் இக்கண்டுபிடிப்பு கோடிக்கணக்கான நாய்க் கடி நோயாளிகளை, உலகம் முழுவதும் காப்பாற்றியது; காப்பாற்றி வருகிறது; காப்பாற்றவும் போகிறது என்பது உறுதி. இந்தியாவில் பூனாவிலும், தமிழ்நாட்டில் குன்னூரிலும் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிட்டியூட்டில் இம்மருந்து தயாரிக்கப்படுகிறது. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இம்மருந்து கிடைக்கும்.

நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியபின் நோயாளிகளின் நிலைதான் பரிதாபமானது. அறிகுறிகள் தெரியத் துவங்கியதும், உடனடியாக இந்நோயாளிகளை இருண்ட, சத்தமில்லாத அறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டும். அந்நோயாளிகளிடம் நேரடித் தொடர்பை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அமைதியைக் கொடுக்கும் மருந்துகளை இந்நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். கட்டாயம் மருத்துவமனையில் தான் வைத்திருக்க வேண்டும். அவர்களின் இறப்பு உறுதியானது. அதனால் அமைதியாக இறப்பை அவர்கள் தழுவினால் உற்றார், உறவினர் மனம் சங்கடப்படாது. அதற்காகவே மேற்கண்ட மருத்துவம் தேவையாகிறது. ஆரம்ப நிலையில் லேசான சந்தேகம் வந்தாலோ, கடித்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிட்டாலோ உடனே மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவம் செய்தால், இந்நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்பது உறுதி!

குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்

வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டர். வெறிநாய்க் கடிக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்க்களுக்கான தடுப்பூசிகளையும் கண்டுபிடித்தார். இந்தத் தடுப்பூசி கண்டுபிடிப்பு வெறிநாய்க் கடியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க உதவியது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் லூயி பாஸ்டர் பெயரால் பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு நோய்த் தடுப்புத் திட்டத்திற்கான ரேபீஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகிறது. ரேபீஸ் நாய்க்கடிக்கான தடுப்பூசி மருத்துவமனைகளில் தாராளமாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அந்த நேரங்களில் தடுப்பூசி போட விரும்புபவர்கள் குன்னூர் வந்து பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் (வெறிநாய்க்கடி மருந்தகம்) தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். எத்தனை டோஸ் போட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்களோ அந்த அளவு டோஸ் மருந்துகளும் கொடுக்கப்படுகிறது.

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் அமைந்துள்ள இந்த நிறுவனம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படும்.

இடம் மாற்ற திராவிடர் கழகம் எதிர்ப்பு

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாஸ்டர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை குன்னூரில் இருந்து செங்கல்பட்டுக்கு மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்தது. அதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து திராவிடர் கழகம் சார்பாக குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நிறுவனம் அங்கிருந்து மாற்றப்படும் முடிவு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *