சென்னை, ஜூலை 28- சென்னை மாவட்டத்தில் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.2.22 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
நிதியுதவித் திட்டங்கள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவித் திட்டம் என 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
இத்திட்டத்தின்கீழ் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அத்துடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் பெற தகுதியான 521 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
521 பெண்களுக்கு
8 கிராம் தங்க நாணயம்
இந்த நிலையில், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று முன்தினம், சென்னை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.2 கோடியே 22 லட் சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவிகளை வழங்கினார். இதில், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த 370 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 85 லட்சமும், எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பேருக்கு ரூ 37 லட்சத்து 75 ஆயிரம் நிதியுதவியும், தலா 8 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டன.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தன்னுடன் கொள்ளையர்களை வைத்துக்கொண்டு திருட்டு குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் எந்த அளவுக்கு சூடான அரசியல் பிரச்சாரத்தை செய்து வருகிறாரோ அதே போல நாங்களும் அரசியல் களத்திற்கு செல்ல தயாராகிவருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.