மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குறைபாடு உள்ள இடங்களில் மீண்டும் உறுப்பினர்களை சேர்க்க ஆணை

2 Min Read

சென்னை, ஜூலை 27  தி.மு.க. மண்டல பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் களப்பணி, ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். நேற்று மருத்துவமனையில் இருந்தபடியே பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மண்டல பொறுப்பாளர்கள் ஆ.ராசா,

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சக்கரபாணி, மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகி யோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது தொகுதி வாரியான நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான திமுக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். 150 தொகுதிகளில் 30 சதவீத உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்கை அடைந்ததுள்ளதையும் சுட்டிக்காட்டி பாராட்டினார்.

அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார். சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் முதலில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

வீடு வீடாகச் செல்லும் போது மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் மக்கள் பேசுவது ஆகியவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் விளக்கினர். இக்கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ திட்டத்திற்கு மக்களிடையே கிடைத் துள்ள வரவேற்பு குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஓய்வு எடுக்காமல் அரசு பணி, கட்சி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவது தற்போது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *