தூத்துக்குடி, ஜூலை 27 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறுஞ்செய்தி மூலம் குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் தரிசனத்துக்கு முன்னு ரிமை கொடுத்து அனுப்பும் முறைகேடு தொடர்பாக, பக்தர் ஒருவர் வெளியிட்ட காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு கின்றனர். விடுமுறை நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர் களும், திருவிழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவார்கள்.
விதி மீறல்
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வழிபாடு செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. இதை பயன்படுத்தி விரைவாக தரிசனம் செய்ய வைப்பதற்காக பக்தர்களிடம் அதிக பணம் வசூலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் தக்கார் உள்பட பெரும் பதவி வகிப்பவர்களது உதவியாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அந்த குறுஞ்செய்தியைக் கோயிலில் காட்டி, அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழிபாட்டுக்கு அனுமதிக்கும் விதிமீறல் தொடர்பாக, பக்தர் ஒருவர் காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளி யிட்டுள்ளார். இந்த காட்சிப் பதிவு வேகமாகப் பரவி வருகிறது.
முன்பணம் செலுத்தினால்…
குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தினால், பணம் கட்டியவர்களின் கைப் பேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைப்பார்கள். இந்த குறுஞ்செய்தியை கோயிலில் காட்டினால், எந்தவித வரிசை யிலும் நிற்காமல் எளிதாக சென்று வழிபாடு செய்யலாம். இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இதனால் பொது தரிசன வழியில் வருவோர், முதியோர், ஊனமுற்றோர், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக காட்சிப் பதிவில் அந்த பக்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோயில் வட்டாரத்தில் விசாரித்தபோது, குறுஞ்செய்தி முறை வழி பாடு கடந்த சில ஆண்டு கால மாகவே நடந்து வருகிறது என உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக கோயில் தரப்பில் கேட்டபோது, “முக்கிய பிரமுகர்கள், பத்திரி கையாளர்களுக்கு வசதியாக இந்த குறுஞ்செய்தி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பணம் வசூல் செய்வதாக எந்தப் புகாரும் இல்லை. இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.