‘உண்மை செருப்பணிவதற்குள் பொய் உலகைச் சுற்றிவரும்’ என்று நகைச்சுவையாக பெர்னாட்ஷா கூறியது இன்று பெரிய அளவிற்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டு வருகிறது.
பகுத்தறிவு என்பது வெறும் சிந்தனை மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறையைத் தன் எழுத்துகளிலும், வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. அய்ரிஷ் நாடக ஆசிரியரும், விமர்சகருமான ஷா, தனது நகைச்சுவையாலும், சமூக விமர்சனத்தாலும் பகுத்தறிவின் அவசியத்தை உலகிற்கு உணர்த்தினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், அநீதிகள், பாசாங்குகள் அனைத்தையும் தனது நாடகங்கள் மூலம் கேள்விக் குள்ளாக்கினார். உதாரணத்திற்கு, அவரது புகழ்பெற்ற நாடகம் “மேன் அண்ட் சூப்பர்மேன்” (Man and Superman) மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி, பாலின உறவுகள், திருமண பந்தம் போன்றவற்றை பகுத்தறிவு நோக்கில் அலசியது. சமூகத்தால் புனிதமாகக் கருதப்பட்ட பல மரபுகளையும், சம்பிரதாயங்களையும் அவர் தயக்கமின்றி விமர்சித்தார். “மனிதன் தனக்குத்தானே அமைத் துக் கொண்ட விதிகளை, சமூகச் சடங்குகளை ஏன் கேள்வி கேட்கக் கூடாது?” என்பதே அவரது முக்கியக் கேள்வியாக இருந்தது.
நகைச்சுவை கலந்த ஷாவின் பகுத்தறிவுப் பாடங்கள்
ஷா தனது கருத்துகளை நேரடியாக எடுத்துரைக்காமல், நகைச்சுவையையும், நையாண்டியையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். அவரது கூர்மையான வசனங்களும், கதாபாத்தி ரங்களின் வாதங்களும் வாசகர்களையும் பார்வை யாளர்களையும் சிந்திக்கத் தூண்டின. “நீங்கள் ஒன்றை அய்ந்து முறை சொல்லும்போது, அது பொய் என்றாலும் உண்மை யாகிவிடும்” போன்ற அவரது கூற்றுகள், சமூகத்தில் பொய் எவ்வாறு உண்மை போல் சித்தரிக்கப்படுகிறது என் பதை எடுத்துக்காட்டின. இவை அனைத் தும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைக்கு வழிகோலின.
ஷா ஒரு முன்னுதாரணம்
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, பகுத்தறிவை வெறும் கோட்பாடாகக் கருதாமல், அதைத் தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலித்தார். சகிப்புத்தன்மை, விமர்சனப் பார்வை, சமூக அக்கறை ஆகிய குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள பகுத்தறிவு அடிப்படையாக அமைகிறது என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது எழுத்துகள் காலங்கள் கடந்து இன்றும் பொருத்தமானதாக இருப்பதற்கு, அவை பகுத்தறிவின் அழியாத உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதே காரணம். பகுத்தறிவு என்பது கேள்விகளைக் கேட்பது மட்டு மல்ல, அதற்கான பதில்களை அறிவியல் பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் தேடுவது என்பதை ஷாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.