இடதுசாரி இயக்கத் தலைவர் பி.கிருஷ்ணப் பிள்ளை வரலாற்றை முன்வைத்து, விசாரத் கிரியேசன்ஸ் தயாரித்து, அனில் வி.நாகேந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சமுத்திரக்கனி, பரத் உள்ளிட்டோர் நடித்து வெளிவரவுள்ள “வீரவணக்கம்” திரைப்படத்தின் “நல்லதோர் நாளையை எங்களுக்காகத் தந்து போனவரே!” என்ற பாடல் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில மேனாள் முதலமைச்சருமான வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் 23.7.2025 அன்று மாலை, அவரது சமூக ஊடகப் பக்கங்கள் (முகநூல், எக்ஸ்) மூலம் பாடல் வெளியிடப்பட்டது.
கேரள மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியை பலப்படுத்த பி.கிருஷ்ணபிள்ளையால் அழைத்து வரப்பட்ட பல வீர இளைஞர்களில் ஒருவர் தான் ஆலப்புழையை சேர்ந்த தோழர் வி..எஸ். அச்சுதானந்தன். நாடு முழுக்க நடைபெற்ற பல்வேறு கம்யூனிஸ்ட் போராட்டங்களையும், அதை முன்னின்று நடத்திய தலைவர்களையும், அவர்களின் தியாகங்களையும் போற்றும் பாடல் தான் ‘நல்லதோர் நாளையை எங்களுக்காக தந்து போனவரே’ என்ற பாடல்.
போராளிகளுக்கு வீர வணக்கம் – தமிழர் தலைவரின் பதிவு
“ஜாதியாலும் வர்ணாசிரமத்தாலும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்கவும், அவர்தம் உரிமைகளைப் பெறவும் சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கங்களும் ஆற்றி இருக்கும் தொண்டு அளப்பரியது. இந்த இயக்கங்களின் தலைவர்களும், தோழர்களும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து, நடத்திய போராட்டங்கள் தான் அடிப்படை மனித உரிமை முதல் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளன. அந்தப் போராளிகளையும், போராட்டங்களையும் நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “வீரவணக்கம்” திரைப்படப் பாடலை, பெருமதிப்பிற்குரிய மறைந்த தோழரும் கேரள மாநிலம் மேனாள் முதலமைச்சருமான வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இன்று வெளியிடுகிறோம். கேரளாவில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய இடதுசாரி இயக்கம் அங்கு வேர் ஊன்றவும், மதவாத ஜாதிய சக்திகள் வேரூன்றாமல் தடுக்கவும் பணி ஆற்றிய தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோரின் போர்க்குணத்தையும், தியாகத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வோம். படத்தில் நடித்துள்ள சமூக அக்கறை மிக்க இயக்குனர் சமுத்திரக்கனி உள்ளிட்ட படக் குழுவினருக்கும் படத் தயாரிப்பாளருக்கும், படத்தின் இயக்குநர் தோழர் அனில் நாகேந்திரன் அவர்களுக்கும் நமது பாராட்டுகள்! சுயமரியாதை, சமூக நீதி, சம உரிமை, சமதர்மப் போராளிகளுக்கு நமது வீரவணக்கம்! வீரவணக்கம்!! வீரவணக்கம்!!!” என்ற குறிப்புடன் இப் பாடலைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள்.
முதல் திரைப்படப் பாடல்
பிரபல பின்னணிப் பாடகர் காந்தக் குரலோன் டி.எம்.சவுந்தர்ராஜன் அவர்களின் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் முதன் முதலில் பாடியுள்ள திரைப்பட பாடல் இதுதான். இந்தச் செய்தியும் பலரது கவனத்தை ஈர்த்ததால் பாடல் வெளியான சில மணித்துளிகளிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடல் விசாரத் கிரியேஷன்ஸ் (VISARAD CREATIONS) யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் இணைப்பு: https://youtu.be/TvYLuNveFjY
தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் அடக்கம் நடைபெற்ற நாளில் அவரது நினைவைப் போற்றும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பாடல் வெளியிட்ட செய்திகள் கேரள செய்தி ஊடகங்களில் பெருமளவில் வெளிவந்துள்ளன. இப்பாடல் ஒரே நாளில் 64,000 பார்வையாளர்களைச் சென்றடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.